அம் முதற்சினைக் கிளவிக்கண், முதற்சொல் முன் ஐகார வேற்றுமை வரின், சினைச்சொல்முன் கண்ணெண்னும் வேற்றுமை வருதல் தெள்ளிது; எ-று. எ - டு:யானையைக் கோட்டின்கட் குறைத்தான் என வரும். தெள்ளிது என்றதனான், யானையைக் கோட்டைக் குறைத்தான் எனச் சிறுபான்மை ஐகார வேற்றுமையும் வருமென்பதாம். சினைக் கிளவிக்கண் மயக்க முணர்த்துகின்ற சூத்திரத்திடைக் `கன்றலுஞ் செலவும்' என்னுஞ் சூத்திரம் வைத்த தென்னை யெனின் :- ஐயுங் கண்ணுமென்பது அதிகாரத்தான் வரச் சூத்திரஞ் சுருங்குமாகலின், `சினைநிலைக் கிளவிக்கு' என்னுஞ் சூத்திரத்தின் பின் அதனை வைத்தாரென்பது. (5) |