முதலுஞ் சினையும் முதலாயது முதலேயாய்ச் சினையாயது சினையேயாய்த் தம்முள் வேறு பொருளாகா; சொல்லுங்கால், சொல்லுவானது சொல்லுதற் குறிப்பினான் முதலென்றுஞ் சினையென்றும் வழங்கப்படும்; எ-று. சொற்குறிப்பின் வென்றது முதலெனப்பட்டது தானே தன்னைப் பிறிதொன்றற்கு ஏகதேசமாகக் குறித்தவழிச் சினையுமாம்; சினையெனப் பட்டதுதானே தன்கண் ஏகதேசத்தை நோக்கி முதலெனக் குறித்தவழி முதலுமாம்; எ-று. கோட்டது நுனியைக் குறைத்தான். கோட்டை நுனிக்கட் குறைத்தான், கோட்டை நுனியைக் குறைத்தான் என முதற்கோதப்பட்ட உருபு சினைக்கண்ணும் வந்ததாலென்று ஐயுற்றார்க்கு, கருத்து வகையாற் கோட்டென்பது ஆண்டு முதலாய் நிற்றலின், முதலிற்கு ஓதிய உருபே முதற்கண் வந்ததென், ஐயமகற்றியவாறு. (6) |