பலவறி சொல்லாவன அ ஆ வ எனவரும் இறுதியை யுடைய அக்கூற்று மூன்று சொல்லாம்; எ-று. எ - டு: உண்டன, உண்ணாநின்றன, உண்பன , கரியன எனவும் , உண்ணா , தின்னா எனவும், உண்குவ தின்குவ எனவும் வரும். உண்ட, உண்ணாநின்ற , உண்ப , கோட்ட என்னுந் தொடக்கத்தனவும் அகரவீற்றுப் பலவறிசொல். அவற்றுள் உண்ப என்பது பகர வீற்றுப் பலரறி சொல்லன்றே. அஃறிணைக் காயினவாறென்னையெனின் : பகர இறுதியாயினன்றே உயர்திணைக்காவது ஈண்டுக் காட்டப்பட்டது `கானந் தகைப்ப செலவு' (கலி - 12) `சினையவுஞ் சுனையவும் நாடினர் கொளல் வேண்டா நயந்து தாங்கொடுப்ப போல்' (கலி - 28) என நின்றனபோல எதிர்காலத்து வரும் பகர மூர்ந்து நின்ற அகர ஈறாதலின் , அஃறிணைச் சொல்லேயா மென்பது . செய்யுளாகலின் , தகைப்பன கொடுப்பன என்னுஞ் சொற்கள் தகைப்ப கொடுப்ப என விகாரவகையான் அவ்வாறு நின்றன வாகலான், வழக்கு முடிவிற்கு அவை காட்டல் நிரம்பாதெனின்; தகைத்தன , தகையா நின்றன; தகைத்த தகையா நின்ற எனவும் ; கொடுத்தன ; கொடா நின்றன ; கொடுத்த கொடாநின்ற எனவும் இறந்தகாலத்தும் நிகழ் காலத்தும் அகர ஈறு முதனிலைக் கேற்றவாற்றான் அவ்வக்காலத்திற் குரிய எழுத்துப் பெற்று அன் பெற்றும் பெறாதும் முடியுமாறு போல , எதிர்காலத்தும் முதனிலைக்கேற்றவாற்றான் அக்காலத்திற்குரிய எழுத்துப் பெற்று அன்பெற்றும் பெறாதும் முடியும் . எதிர்காலத்துக்குரிய எழுத்தாவன பகரமும் வகரமுமாம் . அவற்றுட் பகரம் பெற்று அன்பெற்றும் பெறாதும் முடிவுழி ; தகைப்பன தகைப்ப , கொடுப்பன கொடுப்ப எனவும் ; வகரம் பெற்று அவ்வாறு முடிவுழி , வருவன வருவ ; செல்வன செல்வ எனவும் இவ்வாறு முடியுமாகலின் , தகைப்ப கொடுப்ப என்பன விகார மெனப்படா இயல்பேயாம் என்பது. கொடுப்பன யாவை அவைபோல, என உவமை கருதாது அவை தம்மையே சுட்டி நிற்றலின் கொடுப்ப என்பது பெயரன்மை யறிக. அன் பெறாது எதிர்காலத்து வரும் வகர ஒற்று ஊர்ந்து நின்ற அகரமாய் வகர ஈறு அடங்கும் எனின் , வினை கொண்டு முடிதல் ஒழித்து மார் ஈற்றிற்கு உரைத்தது உரைக்க. அவ்வாறு உரைக்கவே , குகரம் பெற்ற வழி அன்பெறற்கு ஏலாமையின் , உண்குவ தின்குவ என்னுந் தொடக்கத்தன வகர ஈறேயாம் . வருவ செல்வ எனக் குகரம் பெறாத வழி வகர ஈறாதலும் அகர ஈறாதலும் என இரு நிலைமையும் உடையவாம் , என்னை? எல்லா வினைக்கண்ணும் சேறன் மாலைத்தாகிய வகர ஈறு ஆண்டு விலக்கப் படாமையானும் , அத்தன்மைத்தாகிய அகர ஈறும் ஆண்டு வந்த அன் பெறாதவழிக் , கால வகரம் ஊர்ந்து அவ்வாறு நீற்றலுடைமை யானும் என்பது. வரும் என்னும் உகரம் விகாரவகையான்1 நீண்டு நின்றது. ஈற்று வகையான் மூன்றாகிய சொல் என்பார் `அப்பால் மூன்று' என்றார். (9)
1. வரூஉம் என்பதை விகாரமென்பதைவிட இசைநிறை யளபெடை என்பதே சிறந்ததாம். |