3.வேற்றுமை மயங்கியல்

வேற்றுமையுருபுகள் மயங்குதல்

பிண்டப் பெயரில்

90பிண்டப் பெயரும் ஆயியல் திரியா
பண்டியல் மருங்கின் மரீ இய மரபே.
 

பிண்டத்தையுணர்த்தும் பெயரும் முதற்சினைப் பெயரியல்பிற் றிரியா; அவ்வாறு அவற்றை முதலுஞ் சினையுமாக வழங்குதல் மேற்றொட்டு வழங்கிவாரா நின்ற கூற்றான மருவிய முறை; எ-று.

பிண்டம் பல பொருட்டொகுதி.

ஈண்டு ஆயியல் திரியாவென மாட்டெறிந்தது. முதற் சினைக் கிளவிக்குப் போலப் பிண்டப் பெயர்க்கு முதற்கண் ஆறாவது வரின் சினைக்கு இரண்டாவது வருதலும், முதற்கு இரண்டாவது வரின் சினைக்கு ஏழாவது வருதலும், சிறுபான்மை இரண்டாவது வருதலுமாம்.

எ - டு:குப்பையது தலையைச் சிதறினான், குப்பையைத் தலைக்கட் சிதறினான், குப்பையைத் தலையைச் சிதறினான் என வரும்.

பிண்டமும் முதலுஞ் சினையுமேயாகலின் வேறு கூறல் வேண்டா எனின்:- குப்பை யென்புழி, தொக்க பல பொருளல்லது. அவற்றின் வேறாய் அவற்றானியன்று தானொன்றெனப்படும் பொருளின்மையின், தொல்லாசிரியர் அதனை முதலென்று வேண்டார்; அதனான் வேறு கூறினாரென்பது. படை காடு கா முதலாயினவுமன்ன.

(7)