அதனோடியைந்த ஒருவினைக் கிளவியென மூன்றாவதற்கோதிய ஒருவினை யொடுச்சொல் உயர்பொருளை யுணர்த்தும் பெயர்வழித் தோன்றும்; (எ-று) எ - டு:அரசனோடிளையர் வந்தார். ஆசிரியனொடு மாணாக்கர் வந்தார் என வரும். உயர்பொருட் பெயர்வழி ஒடுக்கொடுக்க எனவே, உயர்பில் வழிச் சாத்தனுங் கொற்றனும் வந்தார் என இருபெயரும் எழுவாயாய் நிற்குமென்பதாம். நாயொடு நம்பி வந்தான் என இழிபெயர்க்கண்ணும் ஒரு வினையொடுச் சொல் வந்ததாலெனின்:- யாதானுமோ ராற்றான் அதற்குயர்புண்டாயினல்லது அவ்வாறு கூறார்; கூறுபவாயின், அஃது ஒரு வினையொடுச் சொல்லெனப்படாது. கைப்பொருளொடு வந்தான் என்பதுபோல, அது தனக்குண்டாக வந்தானெனப் பிறிது பொருள் படுவதோ ரொடுவுருபா மென்க. இதனை வேற்றுமை யோத்தின்கண் `அதனினியறல்' (சொல். 14) என்னுஞ் சூத்திரத்தின் பின் வையாது ஈண்டு வைத்த தென்னையெனின்:- வேற்றுமையது பெயரும் முறையுந் தொகையும் பொது வகையான் அவற்ற திலக்கணமும் உணர்த்தியதல்லது. இன்ன வேற்றுமை இன்ன பொருட்கண் இன்னவாறாமென்னும் விசேட இலக்கணம் அதிகாரம்பட்டின்றாகலான், ஆண்டு வையாது, மூன்றாவது இப்பொருட்கண் இவ்வாறாமென விசேட விலக்கணம் `மூன்றனு மைந்தனும்' (சொல் - 92) எனக் கூறுகின்றாராகலின், அதனோடியைய ஈண்டு வைத்தார் ; இதுவும் ஒரு பொருள் பற்றி யோதுகின்ற விசேட இலக்கணமாகலானென்பது. (8) |