மூன்றாம் வேற்றமைக்கண்ணும் ஐந்தாம் வேற்றுமைக்கண்ணும் விளங்கச் சொல்லப்பட்ட ஆக்கத்தோடு கூடிய ஏதுச்சொல் அவ் வேதுப் பொருண்மையை நோக்கும் நோக்கு ஒருதன்மைய ; எ - று. எ - டு:வாணிகத்தானாயினான், வாணிகத்தானாய பொருள் எனவும், வாணிகத்தானாயினான் வாணிகத்தினாய பொருள் எனவும் வரும். வாணிகத்தான், வாணிகத்தின் என வுருபொடு தொடர்ந்து நின்ற சொல்லை ஏதுக்கிளவி யென்றார். `அதன்வினைப் படுத லதனி னாதல்' (சொல் - 74) என்றும் `புதுமை பழமை யாக்கம்' (சொல் - 78) என்றும் மூன்றாவதற்கும் ஐந்தாவதற்கும் ஏதுப்பொருள் மேற்கூறப்பட்டமையான் இச் சூத்திரம் வேண்டாவெனின் :- பிரிநிலையேகார முதலாகிய இடைச்சொல்லும் ஒருசார் வினைச்சொல்லும்1 முன்னோதப்பட்டனவேனும், எச்சமாத லொப்புமையான் எச்ச வாராய்ச்சிக்கண் அவைதம்மையே, `பிரிநிலை வினையே பெயரே யொழியிசை யெதிர்மறை யும்மை யெனவே சொல்லே' (சொல் - 430) எனப் பின்னுங் கூறினாற்போல், ஏதுப்பொருண்மை மூன்றாவதற்கும் ஐந்தாவதற்கும் மேற்கூறப்பட்டதாயினும், மயக்கமாதலொப்புமையான் மயக்கவாராய்ச்சிக்கண் ஈண்டுங் கூறினாராகலின் கூறியது கூறலென்னுங் குற்றமின்றென்பது. இஃது `அச்சக்கிளவி' (சொல் - 100) என்பதற்குமொக்கும். அஃதேல், மயக்கமாவது ஒரு வேற்றுமை பிறிதொன்றன் பொருட் கட்சேறலன்றே; ஏதுவின் கண் வரும் மூன்றாவதும் ஐந்தாவதும் தம் பொருளே பற்றி நிற்றலின் மயங்கின வெனப்படாவெனின்:-நன்று சொன்னாய் ஏதுப்பொருண்மை தனக்குரியவாற்றான் அவற்றிற்குத் தன் பொருளாயினவாறு போலப் பிறிதொன்றற் குறியவாற்றாற் பிறிதொன்றன் பொருளாதலு முடைமையின், அம் முகத்தான் மயங்கின வெனவே படுமென்பது, அல்லதூஉம் ஒரு பொருட்கண் இரண்டுருபு சென்ற துணையான் மயக்கமாயிற் றெனினுமமையும். ஆக்கமொடு புணர்ந்த ஏதுக்கிளவி2 யெனவே ஆக்கமொடு புணராது ஞாபகவேதுப் பொருண்மைக்கண் வரும் இன்னும் ஆனும் ஒத்த வரவினவல்ல என்பதாம். ஆண்டைந்தாவது பெருவரவிற்றெனக் கொள்க. (9)
1. ஒரு சார்வினைச்சொல் - சில பெயரெச்ச வினையெச்சங்கள். 2. ஆக்கமொடு புணர்ந்த ஏது - காரண ஏது. |