3.வேற்றுமை மயங்கியல்

வேற்றுமையுருபுகள் மயங்குதல்

நோக்கப் பொருளில்

93இரண்டன் மருங்கின் நோக்கல் நோக்கம்அவ்
இரண்டன் மருங்கின் ஏதுவு மாகும்.
 

`நோக்கலி னஞ்சலின்' (சொல் - 72) என இரண்டாவதற்கோதிய நோக்கப் பொருண்மை நோக்கிய நோக்கமும் நோக்கல் நோக்கமுமென இரண்டு வகைப்படும். நோக்கிய நோக்கம் கண்ணானோக்குதல், நோக்கல் நோக்கம் மனத்தானொன்றனை நோக்குதல். அந் நோக்கல் நோக்கமாகிய பொருள் மூன்றாவதற்கும் ஐந்தாவதற்குமுரிய ஏதுப் பொருண்மையுமாம்; எ-று.

நோக்கல் நோக்கத்தால் நோக்கப்படும் பொருளை, நோக்கல், நோக்கனென்றார்.

நோக்கல்நோக்க மவ் விரண்டன் மருங்கின் ஏதுவுமாகு மெனவே, அவ்-வேதுப் பொருண்மைக்குரிய இரண்டுருபும் அவ்வேதுப் பொருண்மையிற் றீராது இரண்டாவதன் பொருட்கண் வருவென்பதாம். ஒம்படைப்பொருட்கண் வருவனவற்றிற்கும் ஈதொக்கும்.

வானோக்கி வாழு முலகெல்லாம் மன்னவன்
கோனோக்கி வாழுங் குடி (குறள் - 542)

என்புழி, வானை நோக்கி வாழும், கோலை நோக்கி வாழும் என இரண்டாவது வருதலேயன்றி, வானானோக்கி வாழும், வானினோக்கி வாழும், கோலானோக்கி வாழும் கோலினோக்கி வாழும் என மூன்றாவதும் ஐந்தாவதும் வந்தவாறு கண்டு கொள்க.

ஏதுவாயினவாறென்னை யெனின்:- உயிருங் குடியும் வானையுங் கோலையு நோக்குவது அவற்றானாய பயன்பற்றி அவற்றைத் தாமின்றியமையாமை யன்றே; அதனான் அவ்வாறு பயன்படுவன அவற்றதின் றியமையாமைக்கு ஏதுவாதலுமுடையவென்பது. அஃதேல், வானுங்கோலும் ஏதுவாயவழி நோக்கப்படுவன் பிறவாவான் செல்லுமெனின்:-அற்றன்று; கண்ணுட் குத்தினான் என்றவழிக் கண்ணே செயப்படு பொருளாதலும் பெறப்பட்டாற்போல, வானானோக்கும். கோலானோக்கும் என்புழியும் அவைதாமே செயப்படு பொருளாதலும் பெறப்பட்டமையால், நோக்கப்படுவன பிறவாவான் செல்லாவென்பது.

(10)