ஆறாம் வேற்றுமைப் பொருண்மேல் வரும் உயர்திணைத் தொகைக்கண் உருபு விரிப்புழி அதுவென்னு முருபு கெட அதன் பொருட்கண் நான்காமுருபு வரும் ; எ - று. ஈண்டு அதுவெனுருபு கெடுதலாவது அவ்வுருபு ஆண்டு வாராமை. நம்பி மகன், நங்கை கணவன் என்னுந் தொகைகளை விரிப்புழி நம்பிக்கு மகன், நங்கைக்கு கணவன் என நான்கனுருபு வந்தவாறு கண்டுகொள்க. உயர்திணைத் தொகைவயி னதுவெனுருபுகெடக் குகரம் வருமென்றதனால், ஆறனுருபு அஃறிணைப்பால் தோன்ற நிற்றல் பெற்றாம்1. உயர்திணைத் தொகைவயின் ஆறாவதனை விலக்கி நான்காவதே சேறலின், `இதனதிதுவிற்று' (சொல் - 110) என்னுஞ் சூத்திரத்தால் கூறப்படும் பொருளோடு உடன் வையாது இதனை வேறு கூறினார். (11)
1. கண் சாத்தனது, கண்கள் சாத்தன என்னும் எழுவாய்த் தொர்டகளே சாத்தனது கண், சாத்தன கண்கள் என முறைமாறி ஆறாம் வேற்றுமை வடிவு பெற்றமையின் `அது; அ' என்னும் அஃறிணை யுருபுகள் உயர்திணைக்கேலாமைபற்றி அத்திணைக்கண் குவ்வுருபு விரிக்கு மாறு கூறப்பட்டது. நம்பி மகன் என்பது நம்பிக்கு மகன் என விரிக்கப்படினும், குவ்வுருபு இருசொற்றொடர்க்கே ஏற்குமெனவும் நம்பிக்கு மகன் வந்தான் என் புழிப் பிளவுபட்டிசைத்து வேறு பொருளும் படுதலின் பல சொற்றொடர்க்கு இன்னுருபே ஏற்குமெனவும் அறிந்து கொள்க. `உடைய' என்னும் உருபோவெனின், அது சொல்லுருபாதலானும் இன்னோசைத் தாகாமையானும் இன்னுருபு போலச் சிறந்ததன்றென்க. |