தனக்கே யுரித்தாய் நில்லாது ஒருகால் ஈற்றுப் பெயரோடுஞ் சென்று தடுமாறு தொழிலொடு தொடர்ந்த பெயர்க்கு இரண்டாவதும் மூன்றாவதுங் கடியப்படா, அவ்வேற்றுமை தொக அவற்றின் பொருள் நிற்குந் தொகையிடத்து; எ - று. எ - டு:புலிகொன்ற யானை, புலிகொல் யானை என்புழிப் புலியைக் கொன்ற யானை எனவும் புலியாற் கொல்லப்பட்ட யானை எனவும் இரண்டாவதும் மூன்றாவதும் மயங்கியவாறு கண்டு கொள்க. கொன்ற, கொல்லென்பன வினைமுதற் பொருட்குரியவாகப் புலியென்பது செயப்படு பொருளாவழியல்லது இரண்டாவது வாராமை யானும், அச்சொற்கள் செயப்படு பொருட்குரியவாகப் புலி வினைமுதலாய வழியல்லது மூன்றாவது வாராமையானும், இவை ஒரு பொருட்கண் வந்தன அன்மையின் மயக்கமா மாறென்னை யெனின் :- ஒரு பொருட்கண் வாராமையின் மயக்கமெனப்படாதாயினும், தடுமாறு தொழிற்றொகைக்கண் இரண்டும் வந்து நின்றலின் மயக்கப்பாற்படுமென்பது. (12) |