3.வேற்றுமை மயங்கியல்

வேற்றுமையுருபுகள் மயங்குதல்

தடுமாறு பொருளில்

96ஈற்றுப்பெயர் முன்னர் மெய்யறி பனுவலின்
வேற்றுமை தெரிப வுணரு மோரே.
 

தடுமாறு தொழிலொடு புணர்ந்த பெயருள், இறுதிப் பெயர்முன்னர்ப்பொருள் வேறுபாடுணர்த்துஞ் சொல்வரின் இச்சொல்லான் அப்பொருள் வேற்றுமை தெரிவர் உணர்வோர்; எ - று.

எ - டு:புலிகொல்யானை யோடாநின்றது, புலிகொல் யானைக் கோடு வந்தன என வரும்.

பிறமயக்கம் போலாது ஈண்டுப்பொருள் வேறுபா டுணர்ந்தல்லது உருபு விரிக்கலாகாமையின், `மெய்யறி பனுவலின் வேற்றுமை தெரிப' என்றார்.

முன் புலியைக் கொன்ற யானை, பின் பிறிதொன்றானான் இறந்துழியும் புலிகொல்யானைக்கோடு வந்தனவென்ப; அவ்வழிக் கொன்றது கொல்லப்பட்டதென்னும் வேறுபாடு குறிப்பானுணரப்படுமென்பார் `உணருமோர்' என்றார். பிறவுமன்ன.

(13)