3.வேற்றுமை மயங்கியல்

வேற்றுமையுருபுகள் மயங்குதல்

பாதுகாத்தற் பொருளில்

97ஓம்படைக் கிளவிக் கையும் ஆனும்
தாம்பிரி விலவே தொகைவரு காலை.
 

ஓம்படைப் பொருண்மைக்கு ஐகாரவுருபும் ஆனுருபும் ஒத்தவுரிமைய, அவ்வேற்றுமை தொக்கவழி; எ - று.

ஓம்படுத்தல்-பாதுகாத்தல்.

புலிபோற்றிவா என்புழி ஓம்படைக்கிளவி இரண்டாவதற் கோதிய காப்பின்கண் அடங்குதலின், புலியைப் போற்றி வாவென ஐகாரவுருபும், புலி அவன் போற்றி வருதற்கு ஏது வாதலுமுடைமையால் புலியாற் போற்றிவாவென ஆனுருபும், ஒத்தவுரிமையவாய் வந்தவாறு கண்டுகொள்க.

புலியேதுவாதலு முடைத்தாயின், "இரண்டன் மருங்கி னோக்க னோக்கமு மோம்படைக் கிளவியு மேதுவுமாகும்" என வமையும் இச்சூத்திரம் வேண்டாவெனின்:-அங்ஙனமோதின் ஓம்படைப் பொருண்மைக்கு ஐந்தா முருபு மெய்தும்;அதனை விலக்குதற்கு ஐயு மானுந் தாம் பிரிவிலவென வேறு கூறினார். இவை பிரிவிலவெனவே, இன்னுருபு பிரிவுடைத்தாய், புலியிற் போற்றிவாவெனச் சிறுபான்மை வருமென் பதாம்.

இரண்டு வேற்றுமைக்கும் ஓம்படைப் பொருண்மை இச்சூத்திரத்தானெய்துவித்தாரெனினு மமையும்.

(14)

தாமென்பது செய்யுட் சுவைபட நின்றது.