3.வேற்றுமை மயங்கியல்

வேற்றுமையுருபுகள் மயங்குதல்

வாழ்தற் பொருளில்

98ஆறன் மருங்கின் வாழ்ச்சிக் கிழமைக்கு
ஏழும் ஆகும் உறைநிலத் தான.
 

ஆறாம் வேற்றுமைக்கண் ஓதிய வாழ்ச்சிக்கிழமைக்கு உறைநிலத்தின்கண் ஏழாவதும் வரும்; எ-று.

காட்டியானை என்பது காட்டதியானையென விரித்தலே யன்றிக் காட்டின்கண் யானையெனச் சிறுபான்மை ஏழாவது விரியினு மமையு மென்றவாறு.

யானைக்காடு, நம்பியூர் என்பன வாழ்ச்சிக்கிழமைப்பொருளவாயினும், ஆண்டேழாவது மயங்காதென்றற்கு `உறைநிலத்தான' வென்றார். எனவே, உறைநிலப் பெயர் பின்மொழியாய வழியது இம்மயக்மென்பதாம்.

(15)