களவியல்

100பண்பிற் பெயர்ப்பினும் பரிவுற்று மெலியினும்
அன்புற்று நகினும் அவட்பெற்று மலியினும்
ஆற்றிடை யுறுதலும் அவ்வினைக் கியல்பே.

என்- எனின், எய்தியது விலக்குதல் நுதலிற்று.

மேல் தலைமகன் `மடல்மா கூறும் இடனுமாருண்டே' என்றார். இஃது அவன் மடல்மா கூறுதற்கு நிமித்தமாகிய நீக்கத்தினை மாறுபட்டுக் கூறாத் தலைமகள் இயல்பைக் கூறிப் பெயர்ப்பினும், அஃதறிந்து தாம் உடன்படத் தலைமகன் வருத்தத்தினான் மெலிகின்றமை கூறிய இடத்தினும் தலைமகன் குறையை மறுப்புழி அன்பு தோன்ற நக்க இடத்தும், தோழி உடன்பாடுற்றவழியும், தலைமகனும் மேற் சொல்லப்பட்ட மடல்மா கூறுதல் இடையூறுபடுதலும் தோழியிற் கூட்டத்திற்கு இயல்பு என்றவாறு.

உம்மை இறந்தது தழீஇய எச்சவும்மை.

பண்பிற் பெயர்ப்பினும்- தலைமகள் இளமைப்பண்பு கூறிப் பெயர்த்த வழித் தலைமகன் கூறியது. அதற்குச் செய்யுள் :-

"குன்றக் குறவன் காதல் மடமகள்
வண்டுபடு கூந்தல் தண்தழைக் கொடிச்சி
வளையள் 1முளைவாள் எயிற்றள்
இளைய ளாயினும் ஆரணங் கினளே."

(ஐங்குறு-256)

பரிவுற்று மெலியினும்- பரிந்த வுள்ளத்துடன் மெலிதலுறுதலும். பரிவுற்றுத் தோழி மெலிதலாவது `உடம்படுவளியாள் என்றாற் போல வருவது. அவ்வழித் தலைமகன் கூற்று :-

"தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்குந் துயர்."

(குறள். 1135)

அன்புற்று நகினும்- அன்பு தோன்றும் உள்ளத்துடன் நக்க காலும் கூற்று நிகழும். அன்புற்று நக்கவழித் தலைமகன் கூறியதற்குச் செய்யுள் :-

" நயனின் மையிற் பயனிது என்னாது
பூம்பொறிப் பொலிந்த அழலுமிழ் அகன்பைப்
பாம்புயிர் அணங்கி யாங்கும் ஈங்கிது
தகாஅது வாழியோ குறுமகள் நகாஅது
உரைமதி யுடையுமென் உள்ளஞ் சாரல்
கொடுவிற் கானவன் கோட்டுமா தொலைச்சிப்
பச்சூன் பெய்த பகழி போலச்
சேயரி பரந்த ஆயிழை மழைக்கண்
உறாஅ நோக்க முற்றவென்
பைதல் நெஞ்சம் உய்யு மாறே . "

( நற்றிணை. 75 )

அவட்பெற்று மலியினும் - தோழி உடம்பாட்டினைப் பெற்று மகிழல் , இரட்டுற மொழிதலான் தலைமகளை இருவகைக் குறியினும் பெற்று மகிழினும் என்றும் கொள்க .

உதாரணம் :-

" எமக்குநயந் தருளினை யாயிற் பணைத்தோள்
நன்னுதல் அரிவையொடு மென்மெல இயலி
வந்திசின் வாழியோ மடந்தை
தொண்டி அன்னநின் பண்புபல கொண்டே ."

(ஐங்குறு . 175)

இது அவட்பெற்று மலியுந் தலைவன் கூற்று.

இனி , உள்ளப் புணர்ச்சியா னின்றி யியற்கை யிடையீடு பட்டுழி , பின் தலைமகள் குறியிடங் கூறியவழி யதனைப் பாங்கற்குரைத்தற்குச் செய்யுள் :-

" அணங்குடைப் பனித்துறைத் தொண்டி அன்ன
மணங்கமழ் பொழிற்குறி நல்கினன் நுணங்கிழைப்
பொங்கரி பரந்த உண்கண்
அங்கலிழ் மேனி 2 அசையியல் எமக்கே".

( ஐங்குறு . 174 )

எனவுஞ் சிறுபான்மை வரும் ,

"காணிற் குவளை கவிழ்ந்து நிலனோக்கும்
மாணிழை கண்ஒல்வேம் என்று . "

(குறள்.1114)

இது தலைவியைப் பகற்குறிக்கண் பெற்று மலிதல்.

"மதியும் மடந்தை முகனும் அறியா
பதியிற் கலங்கிய மீன் . "

( குறள் . 1116)

இஃது இரவுக்குறிக்கண் தலைவன் அவட்பெற்று மலிந்தது .

" மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி".

(குறள் . 1118)

என்பதும் அது .

ஆற்றிடை உறுதலும் - தான்சேறும் ஆற்றிடை இடையூறு உண்டாயயிடத்தும் கூற்று நிகழும் இரட்டுற மொழிவான் வரைவிடை வைத்துப் பிரிந்தான் . தான் சேறும் ஆற்றின்கண் வருத்தமுற்றுக் கூறலும் கொள்ளப்படும் .

" குருதி வேட்கை உருகெழு வயமான்
வலிமிகு முன்பின் மழகளிறு பார்க்கும்
மரம்பயில் சோலை மலியப் பூழியர்
உருவத் துருவின் நான்மேயல் ஆரும்
மாரி எண்கின் மலைச்சுர நீளிடை
நீ நயந்து வருதல் எவனெனப் பலபுலந்து
அழுதனை உறையும் அம்மா அரிவை
பயங்கெழு பலவின் கொல்லிக் குடவரைப்
பூதம் புணர்த்த புத்தியல் பாவே
விரிகதிர் இளவெயில் தோன்றி அன்னநின்
ஆய்நலம் உள்ளி வரினெமக்கு
ஏமம் ஆகும் மலைமுதல் ஆறே".

( நற்றிணை .192)

இந் நற்றிணைப் பாட்டு தலைவி ஆற்றினது அருமை செப்பத் தலைவன் செப்பியது .

"ஒம்புமதி வாழியோ வாடை பாம்பின்
தூங்குதோல் கடுக்குத் தூவெள் ளருவிக்
கல்லுயர் நண்ணி யதுவே நெல்லி
மரையினம் ஆரும் முன்றிற்
புல்வேய் குரம்பை நல்லோள் ஊரே" .

( குறுந் . 235 )

இக்குறுந்தொகைப் பாட்டு தலைவன் வரைவிடை வைத்துச் சேறுவான் கூறியது .


(பாடம்) 1. முளைவாய் வாளெயிற் றிளைய .

(பாடம்) 2. அசைஇய எமக்கே .