களவியல்

1011 பாங்கர் நிமித்தம் பன்னிரண் டென்ப .

என் - எனின் , பலவகை மணத்திற் பாங்கராயினார் துணையாகுமிடம் இத்துணையென வரையறுத்துணர்த்துதல் நுதலிற்று .

பாங்கராயினார் துணையாகக் கூடும் கூட்டம் பன்னிரண்டு வகையென்றவாறு.

நிமித்தம் என்பது நிமித்தமாகக் கூடும் கூட்டம் , அக்கூட்டம் நிமித்தமென ஆகுபெயராய் நின்றது . பாங்காரற் கூட்டம் பாங்கர் நிமித்தமென வேற்றுமைத் தொகையாயிற்று . அவையாவன:- 2பிரமம் முதலிய நான்கும், கந்திருவப் பகுதியாகிய களவும், உடன்போக்கும் அதன்கண் கற்பின் பகுதியாகிய இற்கிழத்தியும் காமக்கிழத்தியும், காதற்பரத்தையும், அசுரம் முதலாகிய மூன்றுமென இவை.

(13)

1. (பாடம் ) பாங்கன் .

2. பிரமம் முதலிய நான்கற்கும் பாங்கன் ஏதுவாகலின் இவ்வாறு பிரமசரியம் காத்தான் எனவும், இவன் இன்ன கோத்திரத்தான் ஆகலின் இவட்கு உரியன் எனவும், இவளை இன்னவாற்றாற் கொடுக்கத் தகும் எனவும் இன்னோனை ஆசாரியனாகக் கொண்டு வேள்வி செய்து மாற்றிக் கன்னியைக் கொடுக்கத்தகும் எனவும் சொல்லிப் புணர்க்கும் என்பது. இப்பன்னிரண்டும் தொன்மையும் தோலும் என்ற வனப்பினுள் வருவன. (தொல். கள. 13. நச்சி)