களவியல்

104முதலொடு புணர்ந்த யாழோர் மேன
தவலருஞ் சிறப்பின் ஐந்நிலம் பெறுமே.

என்- எனின், மேற்சொல்லப்பட்ட ஒருதலைக் காமமும் பொருந்தாக் காமமுமன்றி, ஒத்த அன்பின் வருங்கூட்டம் உணர்த்துதல் நுதலிற்று.

முதல் என்பது நிலமும் காலமும். நிலத்தொடும் காலத்தொடும் பொருந்திய கந்திருவர் பாற்பட்டன கெடுதலில்லாத சிறப்பினையுடைய ஐந்து வகைப்படும் என்றவாறு.

முதலொடு புணர்ந்த என்றாரேனும் `வந்தது கண்டு வாராதது முடித்தல்' (மரபியல் - 112.) என்பதனால் ஒழிந்த கருப்பொருளும் உரிப்பொருளும் கொள்ளப்படும். நிலம் என்பது இடம் இதனாற் சொல்லியது. ஒத்த காமமாகிக் கருப்பொருளொடும் புணர்ந்த கந்திருவநெறி இட வகையான் ஐந்து வகைப்படும் என்றவாறு. அவையாவன களவும் உடன்போக்கும், இற்கிழத்தி, காமக்கிழத்தி, காதற்பரத்தையும் எனச் சொல்லப்பட்ட ஐவகைக் கூட்டம்.

இச் சொல்லப்பட்ட பன்னிருவகைப்பட்ட கூட்டத்திற்கும் பாங்கராயினார் நிமித்தமாக வேண்டுதலின், அவற்றுள் தலைவற்கும் தலைவிக்கும் ஒத்த காதலுள் வழிப் பாங்கராயினாரால் நிகழும் நிகழ்ச்சி கந்திருவப் பகுதியாகவும் ஒருதலை வேட்கையாகிய வழி இவரால் வரும் நிகழ்ச்சி கைக்கிளையாகவும் ஒப்பில் கூட்டமாகிய வழிப்பெருந்திணை யாகவும் கொள்க. 1ஐந்நிலம் என்பதினை முல்லை குறிஞ்சி முதலாயின வென்றார் உளராலெனின், `முதலொடு புணர்ந்த' என்பதனால் நிலம் பெறுமாதலான் நிலம் என்பதற்கு வேறு பொருள் உரைத்தல் வேண்டுமென்க. அஃது அற்றாக, இற்கிழத்தி, காமக்கிழத்தி என்பார் உள்ளப்புணர்ச்சியானாதல் மெய்யுறு புணர்ச்சியானாதல் வரையப்பட்டாராகப் பொருட் பெண்டிராகிய காதற்பரத்தையர் கூட்டம் ஒத்த காமமாகிய வாறென்னையெனின் , அரும் பொருளானாதல் , அச்சத்தானாதல் அன்றி அன்பினாற் கூடுதலின் அதுவுங் கந்திருவப்பாற்படும் . அவ்வாறன்றி அவரைப் பிறிது நெறியாற் கூடுவராயின் இவன்மாட்டுத் தலைமை இன்றாமென்பது உணர்ந்து கொள்க . அஃதாமாறு :

"அன்னை கடுஞ்சொல் அறியாதாய் போலநீ
என்னைப் புலப்பது ஒறுக்குவேன்2 மன்யான்
சிறுகாலை இற்கடை வந்து குறிசெய்த
அவ்வழி என்றும்யான் காணேன் திரிதர
எவ்வழிப் பட்டாய் சமனாக இவ்வெள்ளல்."

(கலித் - 90)

எனவும் , " கண்டேனின் மாயங் களவாதல் " என்னுங் கலியுள் .

" ..... நோயும் வடுவுங்கரந்து மகிழ்செருக்கிப்
பாடுபெயல் நின்ற பானாள் இரவில்
தொடிபொலி தோளும் முலையுங் கதுப்பும்
வடிவார் குழையும் இழையும் பொறையா
ஒடிவது போலும் நுசுப்போ டடிதளரா
வாராக் கவவின் ஒருத்திவந்3 தல்கல்தன்
சீரார் ஞெகிழஞ் சிலம்பச் சிவந்து நின்
போரார் கதவம் மிதித்த தமையுமோ".

(கலித் -97)
எனவும் , பரத்தையர் அன்பினாற் கூறியவாறும் இவர் இற்கிழத்தியும் காமக்கிழத்தியும் அன்மையும் அறிந்து கொள்க . இவ்வகை வருவன ஐந்து நிலனாய் வரும். அஃதேல் மருதக்கலியுள்,

" .... .... .... .... ..... ..... ..... ..... ...
அடக்கமில் போழ்தின்கண் தந்தை காமுற்ற
தொடக்கத்துத் தாயுழைப் புக்கான் ".

( கலித்- 82)
எனவும் ,

வழிமுறைத்தாய் எனவும் , ` புதியோள் ' எனவும் , இவ்வாறு கூறக் கேட்கின்ற காமக்கிழத்தியுமென மனைவியர் நால்வருளர். அவரெல்லாரையும் கூறாது மனைக்கிழத்தியர் இருவர் என்றதனாற் பயன் இன்றெனின் , அவரெல்லாரும் இற்கிழத்தியும் காமக்கிழத்தியுமென இரண்டு பகுப்பினுள் அடங்குப அன்றியும் , இவர் நால்வரோடு பரத்தையுட்பட ஐவர் கந்திருவப் பகுதியர் என உரைப்பினும் அமையும் .

`பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்தே ' ( பொருளியல் . 28 ) என ஓதுதலானும் , தலைவற்குப் பிரமம் முதலாக வரும் நான்கு வருணத்துப் பெண்பாலாரும் பரத்தையும் என ஐவகைப்படு மென்பதூஉம் ஒன்றெனக் கொள்க .

(16)

1. இது புலனெறியன்றி உலகியலாகலின், உலகியலாற் பாலை நிலனும் ஆண்டு வாழ்வார்க்கு மன்றலும் உளதாகலின், பாலையுங் கூறினான் எனவே, ஐம்புலத்து வாழ்வார் மணமும் செய்யுளுட் பாடியக்கால் இழுக்கின்றென்றான்.(தொல். கள 15. நச்சி.)

2. (பாடம் ) ஒருக்குறுவென் .

3. கவவினோ டொருத்திவந்.