இது , தோழியிற் கூடிய தலைமகன் வரைந்தெய்துங்காறும் கூறும் பொருண்மை யுணர்த்துதல் நுதலிற்று . இருவகைக் குறிபிழைப்பாகிய இடத்தும் என்பது - பகற்குறியும் இரவிற்குறியும் பிழைப்பாகிய இடத்தும் என்றவாறு பகற்குறி இரவிற்குறி யென்பது எற்றாற் பெறுது மெனின் , "குறியெனப் படுவ திரவினும் பகலினும் அறியக் கிளந்த ஆற்ற தென்ப ". (களவியல் - 40 ) என்பதனாற் கொள்க . அக்குறிக்கண் தலைவி வரவு பிழைத்த விடத்துத் தலைவன் கூற்று நிகழும் என்றவாறு . "மழைவர வறியா மஞ்ஞை யாலும் அடுக்கல் நல்லூர் அசைநடைக் கொடிச்சி தானெம் மருளாள் ஆயினும் யாந்தன் உள்ளுபு மறந்தறி யேமே . " (ஐங்குறு . 298) இது, குறிபிழைத்தவழித் தோழிக்குச் சொல்லியது, "இல்லோன் இன்பங் காமுற் றாஅங்கு அறிதுவேட் டனையால் நெஞ்சே காதலி நல்லா ளாகுதல் அறிந்தாங்கு அரியா ளாகுதல் அறியா தோயே," (குறுந் 120) இது, குறிபிழைத்தவழி உள்ளத்திற்குச் சொல்லியது,காணா வகையிற் பொழுதுநனி இகப்பினும் என்பது- தலைமகளைக் காணாவகையிற் பொழுது மிகவும் கடப்பினுங் கூற்று நிகழும் என்றவாறு, செய்யுள்: "உள்ளிக் காண்பென் போல்வல் முள்ளெயிற்று அமிழ்தம் ஊறுஞ் செவ்வாய்க் கமழகில் ஆரம் நாறும் அறல்போற் கூந்தற் பேரமர் மழைக்கண் கொடிச்சி மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே". (குறுந் 286) எனவரும், தானகம்புகாஅன் பெயர்தல் இன்மையிற்... பொழுதினும் என்பது - காணா வகையிற்பொழுது மிகக்கழிந்துழிக்காட்சி யாசையினாற் குறியிடத்துச் சென்று ஆண்டுக் காணாது கலங்கி வேட்கையான் மயக்கமுற்றுச் செயலற்று நிற்குங் காலத்தினுங் கூற்று நிகழும் என்றவாறு. புகான் என்பது முற்று வாய்பாட்டான் வந்த வினையெச்சம், செய்யுள் வந்தவழிக் காண்க. 3புகாஅக் காலை புக்கெதிர்ப் பட்டுழிப்... கண்ணும் என்பது - தான் புகுதற்குத் தகுதியில்லாத காலத்துக்கண் அகம் புக்கெதிர்ப்பட்டுழி அவரால் நீக்கப்படாத விருந்தின் பகுதியனாகிய வழியும் கூற்று நிகழும் என்றவாறு, செய்யுள்: " இரண்டறி களவின் நம்காத லோளே முரண்கொள் துப்பிற் செவ்வேல் மலையன் முள்ளூர்க் கானம் நண்ணுற வந்து நள்ளென் கங்குல் நம்மோ ரன்னள் கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்துச் சாந்துளர் நறுங்கதுப்பு எண்ணெய் நீவி அமரா முகத்த ளாகித் தமரோர் அன்னள் வைகறை யானே". (குறுந் 312) எனவரும்,வேளா ணெதிரும் விருப்பின் கண்ணும்-என்பது தலைவி உபகாரம் எதிர்ப்பட்ட விருப்பின்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு, அது குறிவழிக்கண்டு கூறுதல், அவ்வழித் தலைவிக்குக் கூறிய செய்யுள்: "சிலம்புகமழ் காந்தள் நறுங்குலை யன்ன நலம்பெறு கையினென் கண்புதைத் தோயே பாயல் இன்துணை யாகிய பணைத்தோள் தோகை மாட்சிய மடந்தை நீயல துளரோஎன் நெஞ்சமர்ந் தோரே". (ஐங்குறு 293) இது தலைவி கண்புதைத்தவழித் தலைவன் கூறியது, " குருதி வேட்கை உருகெழு வயமான் வலிமிகு முன்பின் மழகளிறு பார்க்கும் மரம்பயில் சோலை மலியப் பூழியர் உருவத் துருவின் நாள்மேயல் ஆரும் மாரி எண்கின் மலைச்சுர 4நீளிடை நீ நயந்து வருதல் எவனெனப் பலபுலந்து அழுதனை உறையும் அம்மா அரிவை பயங்கெழு பலவின் கொல்லிக் குடவரைப் பூதம் புணர்ந்த புதிதியல் பாவை விரிகதிர் இளவெயில் தோன்றி யன்னநின் ஆய்நலம் உள்ளி வரினெமக்கு ஏமம் ஆகும் மலைமுத லாறே". (நற்றிணை 192) எனவும் வரும், தாளாண் எதிரும் பிரிவினானும் என்பது - தாளாண்மை எதிரும் பிரிவின் கண்ணும் என்றவாறு, எனவே நெட்டாறு சேறலன்றி அணிமைக்கண் பிரிவென்று கொள்க, " இன்றே சென்று வருவது நாளைக் குன்றிழி அருவியின் வெண்டேர் முடுக இளம்பிறை யன்ன விளங்குசுடர் நேமி விசும்புவீசு 5கொள்ளியிற் பைம்பயிர் துமியக்6 காலியற் செலவின்7 மாலை யெய்திச் சின்னிரை வால்வளைக் குறுமகள் பன்மாண் ஆகம் அடைந்துவக் குவமே." (குறுந் 189) பிரிந்தவழிக் கூறியதற்குச் செய்யுள்:-"ஓம்புமதி வாழியோ வாடை பாம்பின்8 தூங்குதோல் கடுக்குந் தூவெள் அருவிக் கல்லுயர் நண்ணி யதுவே நெல்லி மரையினம் ஆரும் முன்றில் புல்வேய் குரம்பை நல்லோள் ஊரே". (குறுந் 235) எனவும் வரும், நாணுநெஞ் சலைப்ப விடுத்தற் கண்ணும் என்பது நாணந் தலைவி நெஞ்சினை வருத்துதலானே நீக்கி நிறுத்துதற்கண்ணும் என்றவாறு. அஃது, அலராகும் என்றஞ்சி நீக்குதல், அவ்வழித் தலைவன் கூற்று நிகழும் என்றவாறு, அவ்வழி இவ்வாறு கூறுகின்றது, புனைந்துரையென்று கருதிக் கூறுதலும் மெய்யென்று கருதிக் கூறுதலும் உளவாம். " களித்தொறுங் கள்ளுண்டல் வேட்டற்றாற் காமம் வெளிப்படுந் தோறும் இனிது". (குறள் 1045) இது புனைந்துரையென்று கருதிக் கூறியது, "9உறாஅது ஊரறி கௌவை அதனைப் பெறாஅது பெற்றன்ன நீர்த்து". (குறள் 1142) ` ஊரறிந்த கௌவை நன்றே காண்; அதனைக் குற்றமாகக் கொள்ளாது பெறாது பெற்ற நீர்மைத்தாகக் கொள்' என்றமையானுந் தமர் வரைவுடன் படுவர் எனக் கூறியவாறாம், இது மெய்யாகக் கொண்டு கூறியது, வரைதல் வேண்டி... புல்லிய எதிரும் என்பது- வரைந்து கோடல் வேண்டித் தோழியாற் சொல்லப்பட்ட குற்றந்தீர்த்த கிளவி பொருந்திய எதிர்ப்பாட்டுக் கண்ணுங் கூற்று நிகழும் என்றவாறு, அஃதாவது பின்னுங் களவொழுக்கம் வேண்டிக் கூறுதல், " நல்லுரை இகந்து10 புல்லுரைத் தாஅய் பெயர் நீர்க் கேற்ற பசுங்கலம் போல உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி அரிதவா வுற்றனை நெஞ்சே நன்றும்11 பெரிதால் அம்மநின் பூசல் உயர்கோட்டு மகவுடை மந்தி போல அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே". (குறுந் 29) என வரும், வரைவுடம் படுதலும் - தோழி கூறிய சொற்கேட்டு வரைவுடம் படுதற் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு, " ஆர்களிறு மிதித்த நீர்திகழ் சிலம்பிற் சூர்நசைந் தனையையாய்12 நடுங்கல் கண்டே நரந்த நாறுங் குவையிருங் கூந்தல் நிரந்திலங்கு வெண்பல் மடந்தை பரித்தனென் அல்லனே இறையிறை யானே". (குறுந் 52) என வரும்,ஆங்கதன் புறத்தும் என்பது- அவ்வரைவு நிகழ்ச்சிக் கண்ணுங் கூற்று நிகழும் என்றவாறு. செய்யுள் வந்தவழிக் காண்க, புரைபடவந்த மறுத்தலொடு தொகைஇ என்பது - குற்றம்பட வந்த மறுத்தலொடுகூட என்றவாறு, அஃது அவர் மறுத்தற் கண்ணுந் தலைமகன் மாட்டுக் கூற்று நிகழும் என்றவாறு. அதற்குச் செய்யுள்: " பொன் அடர்ந் தன்ன ஒள்ளிணர்ச் செருந்திப் பன்மலர் வேய்ந்த நலம்பெறு கோதையுள்14 திணிமணல் அடைகரை அலவன் ஆட்டி அசையின 15ளிருந்த ஆய்தொடிக் குறுமகள் நலஞ்சால் விழுப்பொருள் கலநிறை கொடுப்பினும் பெறலருங் குரைய ளாயின்16 அறந்தெரிந்து நாமுறை தேஎ மரூஉப் பெயர்ந் தவனொடு இருநீர்ச் சேர்ப்பி னுப்புடன் உழுதும் பெருநீர்க் குட்டம் புணையொடு புக்கும் படுத்தனம் பணிந்தனம் அடுத்தனம் இருப்பில்17 தருகுவன் கொல்லோ தானே விரிதிரைக் கண்திரள் முத்தங் கொண்டு ஞாங்கர்த் தேன் இமிர் அகன்கரைப்18 பகுக்குங் கானலம் பெருந்துறைப் பரதவன் நமக்கே".19 (அகம் 260) என வரும்.கிழவோன் மேன என்மனார் புலவர் என்பது - இச் சொல்லப்பட்டன வெல்லாங் கிழவோன் இடத்தன என்றவாறு. கூற்றென்னாது பொதுப்படக் கூறுதலான் உள்ள நிகழ்ச்சியும் கூற்றும் கொள்ளப்படும். (17)
(பாடம்)1. மயங்கி 2. வாளாண். 3. புகாக் காலமாதலின் பகாவிருந்தென்றான், விடியற்காலமாயின் தலைவன் புகான் எனவும், புகாக் காலத்துப் புக்க ஞான்றாயின் அவர் விருந்தேற்றுக் கோடல் ஒருதலையென்று புகும் என்றும் கொள்க. (தொல் கள-16,நச்சி) (பாடம்)4. எண்கினம் வலிதரு. 5. விசும்புவீழ். 6. கொள்ளிநெற்பயிர் துமிப்பக். 7. காலையிற் செலலின். 8. பாப்பின், 9."உறாதோ ஊரறிந்த கௌவை அதனைப், பெறாஅது பெற்றன்ன நீர்த்து". (பாடம்)10. யிகழந்த. 11. என்றும். 12. அஞ்சொல். 13. கணையாய். 14. தெரிகைய. 15. யசையுன. 16. அந்தில் தெரிநுநாமுரைப் பெயர் வந்தவனொடிருநீர்ச் சேர்ப்பினும் உட்புடனுழுதும் . 17. இருந்தபின். (பாடம்)18. தண்கரைப். 19. மகளே.
|