களவியல்

107காமஞ் சொல்லா நாட்டம் இன்மையின்
ஏமுற இரண்டும் உளவென மொழிப.

என்பது , மேலதற்கோர் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று.

வேட்கையுரையாத கண் உலகத்தின்மையால் தலைவன் ஏமுறற் பொருட்டு நாணும் மடனும் உளவாம் என்றவாறு.

இதனாற் சொல்லியது மேல் தலைவிக்கு இயல்பாய்க் கூறப்பட்ட அச்சமும் நாணும் மடனும் என்பனவற்றுள் வேட்கையால் அச்சம் நீங்கினவழி நாணும் மடனும் நீங்காவோ என்றையுற்றார்க்கு அவை தலைமகற்கு ஏமமாதற்பொருட்டு நீங்காவாம் என்பதூஉம், வேட்கைக் குறிப்புக் கண்ணினான் அறியலாமென்பதூஉம் உணர்த்தியவாறு. என்னை? நாணும் மடனும் இல்லாதாரைத் தலைமக்கள் அவமதிப் பாராதலால், உதாரணம்:-

"கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில்."

(குறள். 1137)

இதனுள் "கடலன்ன காமம் உழந்தும் " என்றதனான் வேட்கை மிக்க நிலையினையும் , "மடலேறாப் பெண்" என்றமையான் நாணும் மடனும் நீங்கா நிலையினையும் கூறுதல் காண்க.

"கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல".

( குறள்.1100)

இதனுள் அகத்துநிகழ் வேட்கையினைக் கண்ணினால் அறியக் கிடந்தமை கூறியவாறு காண்க.

(19)