களவியல்

108சொல்லெதிர் மொழிதல் அருமைத் தாகலின்
அல்ல1 கூற்றுமொழி அவள்வயி னான.

என்பது , இதுவும் தலைவிமாட்டு ஒரு கூற்றுச்சொல் நிகழுமாறு உணர்த்துதல் நுதலிற்று.

தலைவன் இயற்கைப்புணர்ச்சி கருதிக் கூறுஞ் சொல்லெதிர் தான் வேட்கைக் குறிப்பினளாயினும் அதற்குடம்பட்ட நெறியைக் கூறுதல் அருமையுடைத் தாதலான் அதற்கு உடம்பாடல்லாத கூற்றுமொழி தலைவியிடத்தன என்றவாறு. என்றது இசைவில்லாதாரைப் போலக் கூறுதல்.

உதாரணம்:-

"யாரிவன் என்னை விலக்குவான் நீருளர்
பூந்தா மரைப்போது தந்த விரவுத்தார்க்
கல்லாப் பொதுவனை நீமாறு நின்னொடு
சொல்லலோம் பென்றார் எமர்".

(கலித் 112)

என வரும் . இதன் பின்,

"....................................
எவன் கொலோ
மாயப் பொதுவன் உரைத்த உரையெல்லாம்
வாயாவ தாயின் தலைப்பட்டாம் பொய்யாயின்
சாயலின் மார்பிற் கமழ்தார் குழைத்தநின்
ஆயித ழுண்கண் பசப்பத் தடமென்தோள்
சாயினும் ஏஎர் உடைத்து".

(கலித். 112)

என உடம்பாடு கூறினாளாதலின் முற்கூறியது அல்ல கூற்றாயிற்று.

(20)

1. இனிக் கூற்று நிகழுங்கால் நாணும் மடனும் பெண்மையவாதலின் குறிப்பினும் , இடத்தினும் அன்றி வேட்கை நெறிப்படவாரா என்று பொருள் கூறிற் , காட்டிய உதாரணங்கட்கு மாறு பாடாகலானும் , சான்றோர் செய்யுட்கள் எல்லாம் குறிப்பும் இடனும் அன்றிப் பெரும்பான்மை கூற்றாய் வருதலானும் , ஆசிரியர் தலைவன் கூற்றும் தலைவி கூற்றும் தோழி கூற்றும் செவிலி கூற்றும் எனக் கூற்றும் சேர்த்து நூல்செய்தலானும் அது பொருளன்மை யுணர்க. (தொல். கள. 19. நச்சி.)