களவியல்

109மறைந்தவற் காண்டல் தற்காட் டுறுதல்
நிறைந்த காதலில் சொல்லெதிர் மழுங்கல்
வழிபாடு மறுத்தல் மறுத்தெதிர் கோடல்
பழிதீர் முறுவல் சிறிதே தோற்றல்
கைப்பட்டுக் கலங்கினும் நாணுமிக வரினும்
இட்டுப்பிரி விரங்கினும் அருமைசெய் தயர்ப்பினும்
வந்தவழி எள்ளினும் விட்டுயிர்த் தழுங்கினும்
நொந்துதெளி வொழிப்பினும் அச்சம் நீடினும்
பிரிந்தவழிக் கலங்கினும் பெற்ற வழி மலியினும்
வருந்தொழிற் கருமை வாயில் கூறினும்
கூறிய வாயில் கொள்ளாக் காலையும்
மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு
நினைத்தல் சான்ற அருமறை உயிர்த்தலும்
உயிராக் காலத்து உயிர்த்தலும் உயிர்செல
வேற்றுவரைவு வரின் அது மாற்றுதற் கண்ணும்
நெறிப்படு நாட்டத்து நிகழ்ந்தவை மறைப்பினும்
பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கி
ஒருமைக் கேண்மையின் உறுகுறை தெளிந்தோள்
அருமை சான்ற நாலிரண்டு வகையிற்
பெருமை சான்ற இயல்பின் கண்ணும்
பொய்தலை அடுத்த மடலின் கண்ணுங்
கையறு தோழி கண்ணீர் துடைப்பினும்
வெறியாட் டிடத்து வெருவின் கண்ணும்
குறியின் ஒப்புமை மருடற் கண்ணும்
வரைவுதலை வரினும் களவறி வுறினும்
தமர்தற் காத்த காரண மருங்கினும்
தன்குறி தள்ளிய தெருளாக் காலை
வந்தவன் பெயர்ந்த வறுங்களம் நோக்கித்
தன்பிழைப் பாகத் தழீஇத் தேறலும்
வழுவின்று நிலைஇய இயற்படு பொருளினும்
பொழுதும் ஆறும் புரைவ தன்மையின்
அழிவுதலை வந்த சிந்தைக் கண்ணும்
காமஞ் சிறப்பினும் அவனளி சிறப்பினும்
ஏமஞ் சான்ற வுவகைக் கண்ணும்
தன்வயின் உரிமையும் அவன்வயிற் பரத்தையும்
அன்னவு முளவே ஓரிடத் தான.

என்றது , தலைவிக்கு இயற்கைப்புணர்ச்சி முதலாகக் களவின்கட் `குறிப்பினு மிடத்தினு மல்லது ' (களவியல்-18) நிகழ்ச்சி யெல்லாவற்றினும் கூற்று நிகழுமிடம் உணர்த்துதல் நுதலிற்று.

மறைந்தவற் காண்டல் என்பது - தன்னைத் தலைவன் காணாமல் தான் அவனைக் காணுங் காட்சி.

தற்காட்டுறுதல் என்பது - தன்னை அவன் காணுமாறு நிற்றல்.

நிறைந்த .... மழுங்கல் என்பது - நிரம்பிய வேட்கையால் தலைவன் கூறிய சொற் கேட்டு எதிர்மொழி கூறாது மடிந்து நிற்றல்.

இம் மூன்றிடத்தினுங் கூற்று நிகழாது.

வழிபாடு மறுத்தல் என்பது - அதன்பின் இவள் வேட்கைக் குறிப்புக் கண்டு சாரலுற்றவழி அதற்கு உடம்படாது மறுத்தல்.

அது குறிப்பினானும் கூற்றினானும் வரும்.

மறுத்தெதிர்கோடல் என்பது - மறுத்தாங்கு மறாது பின்னும் ஏற்றுக்கோடல்.

பழிதீர்... தோற்றல் - குற்றந்தீர்ந்த முறுவல் சிறிது தோற்றுவித்தல்.

அது புணர்தற்கு உடன்பாடு காட்டி நிற்கும் . இவை ஆறு நிலையும் புணர்ச்சிக்கு முன் நிகழும். ஈண்டுங் குறிப்பு நிகழ்ச்சியல்லது கூற்று நிகழ்ச்சி அருகியல்லது வாராது. அவற்றுள் சில வருமாறு:

`இகல் வேந்தன் சேனை' என்னும் முல்லைக்கலியுள் .

"மாமருண் டன்ன மழைக்கண்சிற் றாய்த்தியர்1
நீமருட்டுஞ் சொற்கண் மருள்வார்க் குரையவை
யாமுனியா ஏறுபோல் வைகற் பதின்மரைக்
காமுற்றுச் செல்வாயோர் கட்குத்திக் கள்வனை
நீஎவன் செய்தி பிறர்க்கு
யாம்எவன்2 செய்தும் நினக்கு".

இது வழிபாடு மறுத்தது. இன்னும் இதனுள்,

"தேங்கொள் பொருப்பன் சிறுகுடி எம்ஆயர்
வேந்தூட்டு அரவத்து நின்பெண்டிர் காணாமல்3
காஞ்சித்தா துக்கன்ன தாதெரு மன்றத்துத்
தூங்குங் குரவையுள் நின்பெண்டிர் கேளாமை
ஆம்பற் குழலாற் பயிர்பயிர்4எம்படப்பைக்
காஞ்சிக்கீழ்ச் செய்தேங்குறி."

(கலித். 108)

இது மறுத்தெதிர் கோடல்.

பழிதீர் முறுவல் சிறிதே தோற்றற்கு உதாரணம்:

"அன்னையோ,
மன்றத்துக் கண்டாங்கு சான்றார் மகளிரை
இன்றி அமையேனென் றின்னவுஞ் சொல்லுவாய்
நின்றாய் நீ சென்றீ எமர்காண்பர் நாளையுங்
கன்றொடு சேறும் புலத்து."

(கலித் .110)

இதனுள் "அன்னையோ" என்பது நகையொடு கூடிய சொல்.

கைப்பட்டுக் கலங்கினும் என்பது - தலைவன் கையகப்பட்ட பின்பு என்செய்தே மாயினேம் எனக் கலக்கமுறினும் என்றவாறு.

நாணுமிகவரினும் என்பது - தலைவிக்கு முன்புள்ள நாணத்தினும் மிக நாணம் வந்துழியும் என்றவாறு.

இட்டுப்பிரி விரங்கினும் என்பது - தலைவன் இட்டு வைத்துப் பிரிவன் என அஞ்சியதற்கு இரக்க முறினும் என்றவாறு.

அருமைசெய் தயர்ப்பினும் என்பது தலைவன் வருதற்குக் காவலாகிய அருமை செய்ததனால் அவனும் வருதலைத் தவிரினும் என்றவாறு.

வருதலைத் தவிர்தலை அயர்ப்ப என்றார். அன்றியும் புறத்து விளையாடுதற்கு அருமை செய்ய மயக்கம்வரினும் என்றுமாம் . செய்தென்பதனைச் செயவெனத் திரிக்க.

வந்தவழி எள்ளினும் என்பது - தலைவன் வந்தவிடத்து அவராகு மென்றஞ்சி இகழ்ந்தவழியும் என்றவாறு .

விட்டுயிர்த்தழுங்கினும் என்பது - மறையாது சொல்லி இரங்கினும் என்றவாறு .

நொந்து தெளிவொழிப்பினும் என்பது - தலைவன் தெளிவித்த தெளிவை நொந்து , அதனை யொழிப்பினும் என்றவாறு .

அச்சம் நீடினும் என்பது - தலைவன் வருகின்றது இடையீடாக அச்சம் மிக்குழியும் என்றவாறு .

பிரிந்தவழிக் கலங்கினும் என்பது - பிரிந்தவழிக் கலக்கமுறினும் என்றவாறு.

அது தாளாணெதிரும் பிரிவு .

பெற்றவழி மலியினும் என்பது - தலைவனோடு கூட்டம் பெற்றவழி மகிழினும் என்றவாறு .

வருந்தொழிற்கு அருமை வாயில் கூறினும் என்பது - தலைவன் வருதற்கு இடையீடாகக் காவலர் கடுகுதலான் ஈண்டு வருதல் அரிதெனத் தோழி தலைவிக்குச் சொல்லினும் என்றவாறு .

கூறிய ... காலையும் என்பது - தோழி இவ்வாறு கூறியதனை மனங் கொள்ளாத காலத்தினும் என்றவாறு .

மனைப்பட்டு அருமறை யுயிர்த்தலும் என்பது - புறத்து விளையாடுதுதல் ஒழிந்து மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்குச் சூழ்தலமைந்த அரிய மறைப்பொருளைச் சொல்லலும் என்றவாறு .

எனவே சிதையாதவழித் தோழிக்குச் சொல்லாளாம் . என்பது போந்தது . வேட்கை மறைக்கப்படுதலின் மறையாயிற்று .

`கைப்பட்டுக் கலங்கல்' முதலாகக் `கூறிய வாயில் கொள்ளாக் காலை' யீறாகச் சொல்லப்பட்ட பன்னிருவகையினும் தலைமகள் தோழிக்கு உரைக்கப்பெறும் . அஃது உரைக்குங்கால் மனைப்பட்டுக் கலங்கி மேனி சிதைந்தவழியே உரைக்கப்பெறுவது . ஆண்டும் இதற்கு என்செய்வாம் என உசாவுதலோடு கூடத் தனது காதன்மை தோன்ற உரைக்கும் என்றவாறு மனைப்படாக்கால் அவனைக் காண்டலால் உரைக்கவேண்டுவதில்லை யென்றவாறாயிற்று . இப்பன்னிரண்டும் ஒருத்திமாட்டு ஒருங்கு நிகழ்வன அல்ல. இவ்விடங்கள் உரைத்தற்கு இடமென இலக்கணங் கூறியவாறு .

அவற்றுட் கைப்பட்டுக் கலங்கியதற்குச் செய்யுள் :-

`கொடியவுங் கோட்டவும் ' என்னுங் குறிஞ்சிக் கலியுள் ,

" நரந்தநா றிருங்கூந்தல் எஞ்சாது நனிபற்றிப்
பொலம்புனை மகரவாய் நுங்கிய சிகழிகை
நலம்பெறச் சுற்றிய குரல்அமை ஒருகாழ்
விரன்முறை5 சுற்றி மோக்கலும் மோந்தனன்
நறாஅவவிழ்ந் தன்னஎன் மெல்விரற் போதுகொண்டு
செறாஅச் செங்கண் புதைய வைத்துப்
பறாஅக் குருகின் உயிர்த்தலும் உயிர்த்தனன்
தொய்யில் இளமுலை இனிய6 தைவந்து
தொய்யலந் தடக்கையின் வீழ்பிடி அளிக்கும்7
மையல் யானையின் மருட்டலும் மருட்டினன்;
அதனால் ,
அல்லல் களைந்தனன் தோழி நந்நகர்
அருங்கடி நீவாமை கூறி னன்றென
நின்னொடு சூழ்வல் தோழி நயம்புரிந்
தின்னது செய்தாள் இவளென
மன்னா உலகத்து மன்னுவது புரைமே . "

(கலித் . 54 )

இதனுட் கைப்பட்டுக் கலிங்கியவாறும் அருமறை உயிர்த்தவாறும் இவ்வாறு செய்யாக்கால் இறந்துபடுவன் என்னும் குறிப்பினளாய் ` மன்னா வுலகத்து மன்னுவுது புரையும் ' எனவுங் கூறியவாறு காண்க.

நாணுமிக வந்ததற்குச் செய்யுள் : -

" நோக்குங்கால் நோக்கித் தொழூஉம்பிறர் காண்பார்8
தூக்கிலி தூற்றும் பழியெனக் கைகவித்துப்
போக்குங்காற் போக்கும் நினைந்திருக்கும் மற்றுநாம்
காக்கும் இடமன் றினி ;
எல்லா எவன்செய்வாம் நாம் . "

(கலித் . 63 )

இது நாணம் மிக்கவழித் தோழியொடு உசாவியது .

இட்டுப்பிரி விரங்கியதற்குச் செய்யுள் : -

" அம்ம வழி தோழி காதலர்
பாவை யன்னஎன் ஆய்கவின் தொலைய
நல்மா மேனி பசப்பச்
செல்வேம்9 என்பதம் மலைகெழு நாட்டே10 "

( ஐங்குறு - 221 )

என வரும் .

அருமை செய்தயர்த்தற்குச் செய்யுள் : -

" நெய்தற் புறவின்11 நிறைகழித் தண்சேர்ப்பன்
கைதைசூழ் கானலுட் கண்டநாட் போலானாற்
செய்த குறிவழியும் பொய்யாயின் ஆயிழாய்12
ஐயகொல் ஆன்றார் தொடர்பு "

( திணைமொழி . 41 )

என வரும் ,

வந்தவழி யெள்ளியதற்குச் செய்யுள் : -

" கண்திரள் முத்தம் மயக்கும் இருண்முந்தீர்ப்13
பண்டங்கொள் நாவாய் வழிங்குந் துறைவனை
முண்டகக் கானலுட் கண்டேன் எனத்தெளிந்தேன்
நின்ற உணர்விலா தேன் . "

( ஐந்திணையெழு . 56 )

இதனுள் ` பின்னும் வருவன் என்றிருந்தேன் ; அதனான் எள்ளினேன் ' என்பது கருத்து .

" ..............................................................
ஏறிரங் கிருளிடை இரவினிற் பதம்பெறாஅன்
மாறினென் எனக்கூறி மனங்கொள்ளுந் தானென்ப 14
கூடுதல் வேட்கையாற் குறிபார்த்துக் குரல்நொச்சிப்
பாடோர்க்குஞ் செவியோடு பைதலேன் யானாக . "

( கலித் . 46 )

இஃது எள்ளினாயென நினைத்தான் என்றவழிக் கூறியது .

விட்டுயிர்த் தழுங்கியதற்குச் செய்யுள் :-

" பிணிநிறந் தீர்ந்து பெரும்பணைத்தோள் வீங்க
மணிமலை நாடன் வருவன்கொல் தோழி
கணிநிற வேங்கை மலர்ந்துவண் டார்க்கும்
மணிநிற மாலைப் பொழுது ".

( திணைமொழி . 6 )

எனவும் ,

" மரையா உகளும் மரம்பயில் சோலை
உரைசார்15 மடமந்தி ஓடி உகளும்
புரைதீர் மலைநாடன் பூணேந் தகலம்
உரையா உழக்கும் என்16 நெஞ்சு ".

(கைந்நிலை - 6)

எனவும் வரும் .

நொந்து தெளிவொழித்தற்குச் செய்யுள் :-

" மன்றத் துறுகற் கருங்கண் மூசுஉகளுங்
குன்றக நாடன் தெளித்த தெளிவினை
நன்றென்று தேறித் தெளிந்தேன் தலையளி
ஒன்றுமற் றொன்றும் அனைத்து ".

( ஐந்திணையெழு - 9 )

என வரும் .

அச்சம் நீடினும் என்பதற்குச் செய்யுள் :-

" மென்தினை மேய்ந்த தறுகட் பன்றி
வன்கல் இடுக்கத்துத் துஞ்சு நாடன்
எந்தை யறிதல் அஞ்சிக்கொல்
அதுவே மன்ற வாரா மையே ".

(ஐந்குறு - 621 )

எனவும் ,

" மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்
கொடியோர்த் தெறூஉம் என்ப யாவதும்
கொடியர் அல்லார்எங் குன்றுகெழு நாடர்
பசைஇப் பசந்தன்று நுதலே
ஞெகிழிய17 ஞெகிழ்ந்தன்று தடமென் தோளே "

( குறுந் - 87 )

எனவும் வரும் .

பிரிந்தவழிக் கலங்கியதற்குச் செய்யுள் : -

" வருவது கொல்லோ தானே வாராது
அவணுறை மேவலின் அமைவது கொல்லோ
புனவர் கொள்ளியிற் புகல்வரு மஞ்ஞை
இருவி இருந்த குருவி வெருவுறப்
பந்தாடு மகளிரிற் படர்தருங்
குன்றுகெழு நாடனொடு சென்ற என்நெஞ்சே . "

( ஐங்குறு - 295)

எனவும் ,

" அதுகொல் தோழி காம நோயே
வதிகுரு குறங்கு மின்னிலைப் புன்னை
உடைதிரைத் திவலை அரும்புந் தீநீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
பல்லிதழ் உண்கண் பாடொல் லாவே . "

( குறுந். 5)

எனவும் ,

"மணிநிற நெய்தல் இருங்கழிச் சேர்ப்பன்
அணிநலம் உண்டகன்றான் என்றுகொ லெம்போல்
திணிமண லெக்கர்மேல் ஓதம் பெயர்ந்து
துணி முந்நீர் துஞ்சா தது".

(ஐந்திணையெழு.60)

" நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து ".

(குறள். 1128)

எனவும் ,

" கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக் கறிந்து18.

( குறள் . 1127 )

எனவும் வரும் .

உறங்காமையும் உண்ணாமையும் கோலஞ் செய்யாமையும் வருத்தம் பிறவுஞ் சொல்லுதல் . இவ்வழி நீ வருந்தாது நின்மாட்டு அன்பு பெரிதுடையான் எனத்தோழி ஆற்றுவித்தவழி ஆற்றாமையாற் கூறியதற்குச் செய்யுள் : -

" சிறுதினை மேய்ந்த தறுகட் பன்றி
துறுகல் அடுக்கத்துத் துணையொடு வதியும்
இலங்குமலை நாடன் வரூஉம்
மருந்தும் அறியுங்கொல் தோழியவன் விருப்பே ".

(ஐங்குறு . 262 )

என வரும் .

பெற்றவழி மலியினு மென்பதற்குச் செய்யுள் :-

" அம்ம வாழி தோழி பன்மாண்
நுண்மணல் அடைகரை நம்மோ டாடிய
தண்ணந் துறைவன் மறைஇ
அன்னை அருங்கடி வந்துநின் றோனே ".

(ஐங்குறு . 115 )

எனவும் ,

முனைவளர் முதல19 என்னும் அகப்பாட்டினுள் ,

" ... ... ... வேட்டோர்க்கு
அமிழ்தத் தன்ன கமழ்தார் மார்பின்
வண்டிடைப் படாஅ முயக்கமுந்
தண்டாக் காதலும் தலைநாள் போன்மே ".

( அகம் . 322)

எனவும் ,

" பெயல்கண்20 மறைத்தலின் விசும்புகா ணலரே
நீர்பரந் தொழுகலின் நிலங்கா ணலரே
எல்லை சேறலின் இருள்பெரிது பட்டன்று
பல்லோர் துஞ்சும் பானாட் கங்குல்
யாங்குவந் தனையோ ஓங்கல் வெற்ப
வேங்கை கமழும்எம் சிறுகுடி
யாங்கறிந் தனையோ நோகோ யானே ".

( குறுந் . 355)

எனவும் ,

" அம்ம வாழி தோழி நலமிக
நல்ல வாயின அளியமென் தோள்கள்
மல்லல் இருங்கழி மலரும்21
மெல்லம் புலம்பன் வந்த வாறே "
(ஐங்குறு.120 )

எனவும் வரும் ,

வருந் தொழிற் கருமை வாயில் கூறியவழித் தலைவி கூறியதற்குச் செய்யுள் :-

" அருங்கடி அன்னை காவல் நீவிப்
பெருங்கடை இறந்து மன்றம் போகிப்
பகலே பலருங் காண வாய்விட்டு22
அகல்வயற் படப்பை அவனூர் வினவிச்
சென்மோ வாழி தோழி பன்னாள்
கருவி வானம் பெய்யா தாயினும்
அருவி ஆர்க்கும் அயந்திகழ் சிலம்பின்23
வான்தோய் மாமலை கிழவனைச்
சான்றோய் அல்லை என்றனம் வரற்கே ".

( நற்றிணை . 365)

என வரும் ,

கூறிய வாயில் கொள்ளாக்காலத்துத் தலைவியுரைத்தற்குச் செய்யுள் :-

" கல்வரை யேறிக் கடுவன் கனிவாழை
எல்லுறு போழ்தின் இனிய பழங்24 கவுட்கொண்
டொல்லென வோடு மலைநாடன் தன்கேண்மை
சொல்லச் சொரியும் வளை."

(கைந்நிலை. 7)

என வரும் .

மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு நினைத்தல் சான்ற அருமறை உயிர்த்தற்குச் செய்யுள் : -

" பலவின்25 பழம் பெற்ற பைங்கண் கடுவன்
எலவென்று26 இணைபயிரும் ஏகல்சூழ் 27வெற்பன்
புலவுங்கொல் தோழி புணர்வறிந் தன்னை
செவுங் கடிந்தாள் புனத்து ".

( திணைமொழி . 10 )

எனவும் ,

"பொழுதும் எல்லின்று பெயலும் ஓவாது
கழுதுகண் பனிப்ப வீசும் அதன்றலைப்
புலிப்பல் தாலிப் புதல்வர்ப் புல்லி
28அன்னாய் என்னும் அன்னையும் மன்னோ
என்மலைந் தனன்கொல் தானே தன்மலை
ஆரம் நாறு மார்பினன்
மாரி யானையின் வந்து நின்றோனே29."

எனவும் வரும் ,

இவை யெல்லாம் இயற்கைப் புணர்ச்சி புணர்ந்தபின் நிகழ்வன . உள்ளப் புணர்ச்சியான் உரிமை பூண்டிருந்தவரும் இவ்வாறு கூறப்பெறும் என்று கொள்க ; ஆண்டு மனநிகழ்ச்சி ஒருப்பட்டு நிற்றலின் .

உயிராக்காலத்து உயிர்த்தலும் உயிர்செல என்பது - இவ்வாறு கூறாக் காலத்து உயிர் செல்லுமாறு சொல்லுதலும் என்றவாறு .

ஈண்டு , உயிர்த்தல் என்பது சுவாதம் எனினும் அமையும் . இந்நிகழ்ச்சியைத் தோழிக்கு நாணத்தால் உரையாளாயின் , நோயட வருந்தும் என்றவாறு . உதாரணம் : -

"தழையணி அல்குல் தாங்கல் செல்லா
நுழைசிறு நுசுப்பிற் கெவ்வ மாக
அம்மெல் லாகம் நிறைய வீங்கிய30
கொம்மை வரிமுலை செப்புடன் எதிரின
யாங்கா குவள்கோல் பூங்குழை என்னும்31
அவல நெஞ்சமொடு சாவாக்
கவலை மாக்கட்டிப் பேதை யூரே."

(குறுந். 159)

இது யாங்காகுவ ளென32 உயிர்செலவு குறித்து நின்றது.

"இன்ன ளாயினள் நன்னுதல் என்றவர்த்
துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே
நன்றுமன் வாழி தோழிநம் படப்பை
நீர்வார் பைம்புதற் தலித்த
மாரிப் பீரத் தலர்சில33 கொண்டே"

(குறுந். 98)

என வரும்.

வேற்றுவரைவு... தன்பிழைப்பாகத் தழீஇத் 34தேறலும் என்பது - வேற்று வரைவு வரின் அது மாற்றுதல் முதலாகத் தமர் தற்காத்த காரணப் பக்கம் ஈறாக நிகழும்வழித் தன்குறி தப்பித் தலைவன் எதிர்ப்படுதலில்லாக் காலத்து வந்தவன் பெயர்ந்த வறுங்களம் நோக்கித் தன்குறையாக வுடம்பட்டுத் தேறுதலும் என்றவாறு.

ஆண்டுக் கலக்கமின்றித் தேறுமென்பது கூறினாராம்.

அவ்வழி வேற்று வரைவு வரின் அது மாற்றுதற்கண்ணும் என்பது - பிறனொருவன் வரைய வரின் அதனை மாற்றுதற்காகவும் தன்குறி தப்பும் என்றவாறு.

நெறிப்படு...மறைப்பினும் என்பது - கூட்டம் உண்மை வழக்கியலால் நாடுகின்ற காலத்து மெய் வேறுபாடு நிகழ்ந்துழி, தோழி அறியாமலும் செவிலி அறியாமலுந் தலைவி மறைப்பினும் என்றவாறு.

பொறியின்...இயல்பின் கண்ணும் என்பது - பொறி யென்பது ஊழ். ஊழாற் கட்டப்பட்ட புணர்ச்சியைக் குறித்து ஒற்றுமைப்பட்ட நண்பினானே தலைவன் வரைதற்குக் குறையுறுகின்றதனைத் தெளிந்த தலைவி செய்தற்கு அருமையமைந்த எண்வகையினாற் பெருமை இயைந்த இயல்பினளாகி நிற்றற் கண்ணும் என்றவாறு.

எண்வகையாவது மெய்ப்பாட்டியலுள் மனன் அழிவில்லாத கூட்டம் என ஓதுகின்ற.

`முட்டுவயிற் கழறல் முனிவு மெய்ந் நிறுத்தல்
அச்சத்தின் அகறல் அவன்புணர்வு மறுத்தல்
தூதுமுனி வின்மை துஞ்சிச் சேர்தல்
காதல் கைம்மிகல் கட்டுரை யின்மை".

(மெய்ப்பாட், 23)

என்பன. அவற்றுள்,

முட்டுவயிற் கழறல் ஆவது - களவொழுக்கம் நிகழா நின்றுழி நிலவு வெளிப்பாடு, காவலர் கடுகுதல் தாய்துஞ்சாமை ஊர்துஞ்சாமை , தலைவன் குறிவருதற்கு இடையீடுபடுதல், இவ்வழிக் களவொழுக்கத்தினாற் பயனின்மை கூறல். அவ்வாறுகூறி இனி இவ்வொழக்கம் அமையுமென வரைந்தெய்துதல்காறும் புணர்ச்சியை விரும்பாது கலக்கமின்றித் தெளிவுடையளாம்.

முனிவு மெய்ந்நிறுத்தல் ஆவது - இவ்வொழுக்கத்தினான் வந்த துன்பத்தைப் பிறர்க்குப் புலனாகாமை மெய்யின் கண்ணே நிறுத்தல் .

அவ்வழியும் வரைந்தெய்தல் சான்றமையும் புணர்ச்சியெனக் குறி வழிச் சொல்லாளாம் .

அச்சத்தின் அகறல் ஆவது - இதனைப் பிறரறிவர் என்னும் அச்சத்தினாலும் குறிவழிச் செல்லாளாம் .

அவன் புணர்வு மறுத்தல் ஆவது - தலைவன் புணர்ச்சியில் வழியும் குறிவழிச் செல்லாளாம்.

தூது முனிவின்னமை ஆவது - அவ்வழித் தலைவன்மாட்டுத் தூதாகி வருஞ்சொற்கேட்டலை முனிவின்மை .

துஞ்சிச்சேர்தல் ஆவது - உறங்காமையின்றி யுறக்கம் நிகழ்தல் .

காதல் கைம்மிகல் ஆவது - இவ்வாறு செய்யுங் காதல் அன்பின்மையன்றி அன்பு மிகுதல் .

கட்டுரை யின்மை ஆவது - கூற்று நிகழ்தலின்மை .

இவையெல்லாம் கலக்கமில்லாத நிலைமையாதலிற் பெருமை சான்ற இயல்பாயின .

பொய்தலையடுத்த மடவின் கண்ணும் என்பது - பொய்ம்மையால் மடலேறுவன் எனத் தலைவன் கூறியவழியும் வெறுத்த உள்ளத்தளாம். குறிவழிச் செல்லாளாம்.

கையறு தோழி கண்ணீர் துடைப்பினும் என்பது - தோழி கையினால் தலைவி கண்ணீர் துடைத்தவழியுங் குறிவழிச் சொல்லாளாம் .

வெறியாட்டிடத்து வெருவின் கண்ணும் என்பது - தலைவி வேறுபாடு எற்றினானாயிற்றெனச் செவிலி வெறியாட்டுவிக்க வரும் அச்சத்தினாலுங் குறிவழிச் செல்லாளாம் .

குறியின் ஒப்புமை மருடற் கண்ணும் என்பது - தலைவன் செய்த குறியை ஒப்புமைபற்றிச் சென்று அஃது அவ்வழி மருளுதற்கண்ணும் குறிவழிச் செல்லாளாம் .

அஃதாவன புள்ளெழுப்புதல் போல்வன. அவைபெற்றுப் புள்ளரவம்35 எழும் . அவ்வாறு மருளுதல் .

வரைவுதலை வரினும் என்பது - தலைவன் வரையவருகின்ற நாள் அணித்தாக வரினும் குறிவழிச் செல்லாளாம் .

கள வறிவுறினும் என்பது - களவினைப் பிறர் அறியினும் குறிவழிச் செல்லாளாம்.

தமர்தற்காத்த காரண மருங்கினும் என்ப - தன்னைத் தமர் காத்த காரணப் பக்கத்தினும் என்றவாறு .

அஃது ஐயமுற்றுக் காத்தல் .

அவற்றுள் வேற்றுவரைவு வரின் அது மாற்றுதற்குத் தலைவி கூறிய செய்யுள் :-

" அன்னை வாழிவேண் டன்னை புன்னை
பொன்நிறம் விரியும் பூக்கெழு துறைவனை
என்னை என்றும் யாமே இவ்வூர்
பிறிதொன் றாகக் கூறும்
ஆங்கும் ஆக்குமோ வாழிய பாலே . "

( ஐங்குறு . 110 )

என வரும் .

நெறிப்படு நாட்டத்து நிகழ்ந்தமை மறைத்தற்குச் செய்யுள் :

" துறைவன் துறந்தெனத் துறையிருந் தழுதஎன்
மம்மர் வாண்முக நோக்கி அன்னை நின்
அவலம் உரையென் றனளே36 கடலேன்
பஞ்சாய்ப் பாவை கொண்டு
வண்டலஞ் சிறுமனை37 சிதைத்ததென் றேனே "

என வரும் .

முட்டு வயிற் கழாற்குச் செய்யுள் : -

" இரும்பிழி மாரி38 அழுங்கன் மூதூர்
விழவின் றாயினுந் துஞ்சா தாகும்
மல்லல் ஆவணம் மறுகுடன் மடியின்
வல்லுரைக் கடுஞ்சொல் அன்னை துஞ்சான்
பிணிகோள் அருஞ்சிறை அன்னை துஞ்சில்
துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்
இலங்குவேல் இளையர் துஞ்சின் வைஎயிற்று
வலஞ்சுரித் தோகை ஞாளி மகிழும்
அரவவாய் ஞமலி மகிழாது மடியிற்
பகலுரு உறழ நிலவுக்கான்று39 விசும்பின்
அகல்வாய் மண்டிலம் நின்றுவிரி யும்மே
திங்கள் கல்சேர்பு கனையிருள் மடியின்
இல்லெலி வல்சி வல்வாய்க் கூகை
கழுதுவழங் கியாமத் தழிதகக் குழறும்
வளைக்கட் சேவல் வாளாது மடியின்
மனைச்செறி கோழி மாண்குரல் இயம்பும்
எல்லா மடிந்த காலை யொருநாள்
நில்லா நெஞ்சத் தவர்வா ரலரே , அதனால்
அரிபெய் புட்டில் ஆர்ப்பப் பரிசிறந்து
ஆதி போகிய பாய்பரி நன்மா
நொச்சி வேலித் தித்தன் உறந்தைக்
கல்முதிர் புறங்காட் டன்ன
பலமுட் டின்றால் தோழியங் களவே ".

( அகம்.122)
என வரும் .

முனிவு மெய்ந்நிறுத்தற்குச் செய்யுள் : -

" நோமே நெஞ்சே நோமே நெஞ்சே 40
இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி
அமைதற் கமைந்தநங் காதலர்
அமைவிலர் ஆகுதல் நோமே நெஞ்சே 41

".(குறுந் . 4)
என வரும் ,

அச்சத்தின் அகறற்குச் செய்யுள் : -

"பேணுப பேணார் பெரியோர் 42 என்பது
நாணுத்தக் கன்றது காணுங் காலை
உயிரார் அன்ன செயிர் நீர் நட்பின்
நினக்கியான் மறைத்தல் 43 யாவது மிகப்பெரிது
அழிதக் கன்றால் தானே கொண்கன்
யான்யாய் அஞ்சுவல் எனினுந் தான்எற்
பிரிதல் சூழான் மன்னே இனியே
கானல் ஆயம் அறியினும் ஆனாது
அலர்வது44 அன்றுகொல் என்னு மதனால்
புலர்வது கொல் அவன் நட்பென
அஞ்சுவல் தோழிஎன் னெஞ்சத் தானே ".

(நற்றிணை . 72 )
என வரும் ,

அவன் புணர்வு மறுத்தற்குச் செய்யுள் : -

" யாரு மில்லைத் தானே கள்வன்
தானது பொய்ப்பின் யான்எவன் செய்கோ
தினைத்தா ளன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்குங்
குருகும் உண்டுதாம் மணந்த ஞான்றே ".

( குறுந் . 25 )
என வரும் .

தூது முனிவின்மைக்குச் செய்யுள் :-

" புல்வீழ் இற்றிக் கல்லிவர் வெவ்வேர்
வரையிழி யருவியின் தோன்று நாடன்
தீதில் நெஞ்சத்துக் கிளவி நம்வயின்
வந்தன்று வாழி தோழி நாமும்
நெய்பெய் தீயின் எதிர்கொண்டு
தாம்வரைந் தனையமென விடுகம் தூதே "

( குறுத் . 109)
என வரும் ,

துஞ்சிச் சேர்தற்குச் செய்யுள் வந்தவழிக் காண்க .

காதல் கைம்மிகுதற்குச் செய்யுள் : -

" கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல்லான் தீம்பால் நிலத்துக் காஅங்கு
எனக்கு மாகா தென்னைக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டுந்
திதலை அல்குல் என் மாமைக் கவினே "

( குறுந் . 27 )
என வரும் .

கட்டுரையின்மைக்குக் கூற்று நிகழாது .

பொய்தலையடுத்த மடலின்கண் தலைமகள் கூறிய செய்யுள் வந்த வழிக் காண்க.

கையறு தோழி கண்ணீர் துடைத்தற்குச் செய்யுள் :

" யாம்எம் காமந் தாங்கவுந் தாம்தம்
கெழுதகை மையின் அழுதன தோழி
கன்றாற்றுப் படுத்த புன்தலைச் சிறாஅர்
மன்ற வேங்கை மலர்பத நோக்கி
ஏறா திட்ட ஏமப் பூசல்
விண்தோய் விடரகத் தியம்பும்
குன்ற நாடற் கண்டஎங் கண்ணே ".

(குறுந் . 241)
என வரும்,

வெறியாட்டிடத்து வெருவினாற் கூறியதற்குச் செய்யுள் : -

" நம்முறு துயரம் நோக்கி அன்னை
வேலவற்45 றந்தனள் ஆயினவ் வேலன்
வெறி கமழ் நாடன் கேண்மை
அறியுமோ தில்ல செறியெயிற் றேயே "

( ஐங்குறு , 241)
என வரும் .

குறியின் ஒப்புமை மருடற்குக் கூறிய செய்யுள் :-

"அணிகடல் தண்சேர்ப்பன் தர்ப்பரிமா பூண்ட
மணியரவம் என்றெழுந்து போந்தேன் - கனிவிரும்பும் 46
புள்ளரவங் கேட்டுப் பெயர்ந்தேன் ஒளியிழாய் 47
உள்ளுருகு நெஞ்சினேன் யான்48.

( ஐந்திணையைம் . 50 )

" ... ... ... ... ... ...
கனை பெயல்49நடுநாள்யான் கண்மாறக் குறிபெறாஅள்
புனையிழாய் என்பது நினக்குரைக்குந் தானென்ப
துளிநசை வேட்கையான் மிசைபாடும் புள்ளின்றன்
அளிநசைஇ ஆர்வுற்ற அன்பினேன் யானாக 50"

( கலித் . 46 )
என வரும் .

வரைவுதலை வந்தவழிக் கூறிய செய்யுள் : -

" கொல்லைப் புனத்த அகில் சுமந்து கல்பாய்ந்து
வானின் அருவி ததும்பக் கவினிய
நாடன் நயமுடையன்51 என்பதனால் நீப்பினும்
வாடல் மறந்தன தோள் . "

(ஐந்திணையெழு . 2)

நயமுடைய னென்றதனான் வரைவு தலைவந்தமை யறிந்து கூறினாளாம்.

" இலைபடர்52 தண்குளவி பேய்ந்த53 பொதும்பிற்
குலையுடைக் காந்தள் இனவண் டிமிரும்
வரையக நாடனும் வந்தான்மற் றன்னை
அலையும் அலைபோயிற் றின்று . "

( ஐந்திணையெழு . 3 )

களவறிவுற்றவழிக் கூறிய செய்யுள் : -

" யாங்கா குவமோ அணிநுதற் குறுமகள்
தேம்படு சாரல் சிறுதினைப் பெருங்குரல்
செவ்வாய்ப் பைங்கிளி கவர நீமற்று
எவ்வாய்ச் சென்றனை அவணெனக் கூறி
அன்னை யானாள் கழறமுன் னின்று
அரிவி ஆர்க்கும் பெருவரை நாடனை
அறியலும் அறியேன் காண்டலும் இலனே
வெதிர்புனை தட்டையேன் மலர்பூக் கொய்து
சுனைபாய்ந் தாடிற்றும் இலனென நினைவிலை
பொய்யல் அந்தோ வாய்த்தனை யதுகேட்டுத்
தலையிறைஞ் சினளே யன்னை
செலவொழிந்54 தனையா லணியைநீ புனத்தே55."

(நற்றிணை . 147)
என வரும்.

தமர் தற்காத்த காரணப் பக்கத்திற்குக் கூறிய செய்யுள் : -

` பெருநீர் அழுவத் தெந்தை தந்த ' என்னுங் களிற்றியானை நிரையுள் .

" பல்பூங் கானல் அல்கினம் வருதல்
கவ்வை நல்லணங் குற்ற இவ்வூர்க் 56
கொடிதறி பெண்டிர் சொற்கொண் டன்னை
கடிகொண்டனளே தோழி பெருந்துறை
எல்லையும் இரவும் என்னொது கல்லென
வலவன் ஆய்ந்த வண்பரி
நிலவுமணல் கொட்குமோர் தேருண் டெனவே ".

(அகம் 20 )
என வரும் .

தன்குறி தள்ளிய தெருளாக் காலை வந்தவன் பெயர்ந்த வறுங்களம் நோக்கித் தன் பிழைப்பாகத் தழீஇத் தேறியதற்குச் செய்யுள் : -

`இருள் கிழிப்பது போல் ' என்னும் களிற்றியானை நிரையுள் ,

" வாள்நடந் தன்ன வழக்கருங் கவலை
உள்ளுநர் உட்குங் கல்லடர்ச் சிறுநெறி
அருள்புரி நெஞ்சமோ டெஃகு துணையாக
வந்தோன் கொடியனும் அல்லன் தந்த
நீதவ றுடையையும் அல்லை நின்வயின்
ஆனா அரும்படர் செய்த
யானே தோழி தவறுடை யேனே "

( அகம் . 72 )
என வரும்.

வழுவின்று ... அன்னவுமுளவே என்பது - வழுவின்று நிலைஇய இயற்படு பொருண் முதலாக ` ஏமஞ்சான்ற உவகை ' யீறாகச் சொல்லப்பட்ட இடங்களில் தன்னிடத்து உரிமையும் அவனிடத்துப் பரத்தைமையும் அன்னவையும் நிகழப்பெறும் என்றவாறு .

அன்ன என்பது , அவைபோல்வன என்றவாறு .

ஓரிடத்துக்கண் என்றதனால் இவ்வாறு எல்லார் மாட்டும் எவ்விடத்தும் நிகழாது என்றவாறாம் . எனவே மேற் குறிப்பினும் இடத்தினுமல்லது (களவியல் 18) கூற்று நிகழாதென்பதனை மறுத்து ஓரிடத்துக் கூற்று நிகழும் என்றவாறாம் .

அவற்றுள் வழுவின்று நிலையே இயற்படு பொருளினும் என்பது தலைவனை இயற்பழித்தவழி அவன் குற்றமிலனாக நிலை நிறுத்தப்பட்ட இயற்படமொழிந்த பொருண்மைக் கண்ணும் தன்வயின் உரிமை தோன்றவும் அவன்வயிற் பரத்தைமையும் தோன்றவும் கூறும் தலைவி என்றவாறு .

இரண்டினுள் ஒன்றுதோன்ற உரைக்கு மென்றவாறு. எனவே இரண்டுந்தோற்ற வருவனவு முளவாம் .

பொழுது மாறும் ... சிந்தைக் கண்ணும் என்பது - தலைவன் வருங்காலமும் இடனும் குற்றமுளவாதலான் , ஆண்டு அழிவு வந்த சிந்தைக்கண்ணும் தலைமகள் தன்வயின் உரிமையும் அவன் வயிற் பரத்தைமையும் தோன்றக் கூறும் என்றவாறு .

காமஞ் சிறப்பினும் என்பது - தலைமகன்மாட்டு வேட்கை மிகினும் தன்வயின் உரிமையும் அவன்வயிற் பரத்தைமையும் உரைக்குந் தலைவி என்றவாறு.

அவன் அளி சிறப்பினும் என்பது - தலைவன் தலைவளி மிக்க வழியும் தன்வயின் உரிமையும். அவ்வையிற் பரத்தைமையும் தோன்றக் கூறும் என்றவாறு.

ஏமஞ்சான்ற உவகைக்கண்ணும் என்பது - ஏமம் பொருந்திய மகிழ்ச்சி வந்துழித் தன்வயின் உரிமையும் அவன்வயிற் பரத்தைமையும் தோன்றக் கூறும் என்றவாறு . அஃதாவது இவன் வரைந் தல்லது நீங்கான் என்னும் உவகை .

அவற்றுள் வழுவின்று நிலைஇய இயற்படு பொருட்கண் கூறியதற்குச் செய்யுள் : -

" அடும்பம லங்கொடி உள்பதைந் தொழிப்ப
வெண்மலர் விரிக்குந் தண்ணந் துறைவன்
கொடியன் ஆயினும் ஆக
அவனே தோழிஎன் னுயிர்கா வலனே "

( ஐங்குறு . தனி . 6)
என வரும் .

பொழுது மாறும் புரைவதன்மையின் அழிவுதலை வந்த சிந்தையால் தலைவி கூறிய செய்யுள் : -

" கொடுவரி வேங்கை பிழைத்துக்57 கோட்பட்டு
மடிசெவி வேழ இரிய - அடியோசை
அஞ்சி யொதுங்கும் அதருள்ளி ஆரிருள்
துஞ்சா சுடர்த்தொடி58 கண் "

( ஐந்திணையைம் . 16 )

" வளைவாய்ச் சிறுகிளி விழைதினை கடியச் 59
செல்கென் றாளே அன்னை என நீ
சொல்லின் எவனாந்60தோழி கொல்லை
நெடுங்கை வன்மான்61 கடும்பகல் உழந்த
குறுங்கை இரும்புலிக் கோள்வல்62 ஏற்றை
பைங்கட் செந்நாய் படுபதம் பார்க்கும்
ஆரிருள் நடுநாள் வருதி
சாரல் நாட வாரலோ எனவே "

(குறுந் . 141)
என வரும் .

காம மிக்கவழிக் கூறிய செய்யுள் : -

" அம்ம வாழி தோழி நலனே
இன்ன தாகுதல் கொடிதே பன்னை
அணிமலர் துறைதொறு விரிக்கும்63
மணிநீர்ச் சேர்ப்பனை மறவா தோர்க்கே.64".

( ஐங்குறு . 117 )
இது தன்வயின் உரிமை :

" நள்ளென் றன்றே யாமஞ் சொல்லவிந்து
இனிதடங் கினரே மாக்கள் முனிவின்றி
நனந்தலை உலகமுந் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே. "

இஃது அவன்வயிற் பரத்தைமை :

" கொடுந்தாள் அவலம்65 குறையாம் இரப்பேம்
ஒடுங்கா ஒலிகடற் சேர்ப்பன் - நெடுந்தேர்
கடந்த வழியைஎங் கண்ணாரக் காண
நடந்து சிதையாதி நீ ".

( ஐந்திணையைம் . 42 )

அவனளி சிறந்தவழித் தலைவி கூறிய செய்யுள் : -

" சேணோன் மாட்டிய நறும்புகை ஞெகிழி
வான மீனின் வயின்வயின் இமைக்கும்
ஓங்குமலை நாடன் சாந்த்துபுலர் அகலம்
உள்ளின் உள்நோய் மல்கும்
புல்லின் மாய்வ தெவன்கொல் அன்னாய் ".

( குறுந் . 150 )

" மன்றப் பலவின் சுளைவிளை தீம்பழம்66
உண்டுவந்து மந்தி முலை வருடக் கன்றமர்ந் (து )
ஆமா சுரக்கும்67 அணிமலை நாடனை
யாமாப் பிரிவ திலம் ".

( ஐந்திணையெழு . 4)
என வரும் .

ஏமஞ் சான்ற உவகைக்கண் கூறிய செய்யுள் : -

" ஓங்கல் இருவரைமேற் காந்தள் கடிகவினப்
பாம்பென ஓடி உருமிடிப்பக் கண்டிரங்கும்
பூங்குன்ற நாடன் புணர்ந்தவந் நாள்போலா
ஈங்கு நெகிழ்ந்த வளை ."

( திணைமொழி . 3 )
என வரும் ,

பரத்தைமை தோன்ற வந்ததற்குச் செய்யுள் :-

" ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
கணங்கொள் இடுமணற் காவி வருந்தப்
பிணங்கிருமோட்ட திரைவந் தளிக்கும்
மணங்கமழ் ஐம்பாலார் ஊடலை ஆங்கே
வணங்கி உணர்ப்பான் துறை . "

( கலித் . 131 )
என்னும் பாட்டினுள் தான் ஊடினாளாகவும் மகிழ்ந்தவாறும் அவன் வயிற் பரத்தைமை கூறியவாறும் காண்க.

இச்சூத்திரத்தாற் சொல்லியது ` மறைந்தவற் காண்டல்' முதலாக ஓதப்பட்ட அறுவகைப் பொருண்மையும் , ` கைப்பட்டுக் கலங்கல் ' முதலாகக் ' கூறியவாயில் கொள்ளாக் காலை ` ஈறாக வரும் மகிழ்ச்சியினால் மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழி எண்ணுதல் சான்ற அருமறையைச் சொல்லுதலும், இதுவாறும் எண்ணுந்தான் இரையாக் காலத்துத் தன்னுயிர் செல்லுமாறு உரைத்தலும் , ` வேற்றுவரைவு வரின் அது மாற்றுதல் ' முதலாகத் ' தமர் தற்காத்த காரணப்பக்கம் ` ஈறாகத் தன் குறி பிழைக்க நிற்கப் பெறும் எனவும் அவ்வழித் தலைவன் வந்து பெயர்ந்துழிக் கலக்கமின்றித் தெளிதலும் , ` வழுவின்று நிலைஇய இயற்படு பொருள் ' முதலாக ` ஏமம் சான்ற உவகை ' ஈறாகத் ` தான் உரியளாகிய நெறியும் தலைவன் அயலாகிய நிலையும் போல வரிற் சொல்லப்பெறும் எனவும் குறிப்பினும் இடத்தினும் அல்லது வேட்கை நெறிப்பட்டவாறாகத் தலைவிக்குக் கூற்று நிகழு மிடமும் உணர்த்தியவாறு .

(21)

(பாடம்)1. றாய்ச்சியர்.
(பாடம்)2. உரை.
3. காணாமை.
4. பயிர் பயிர்த்தெம்.
(பாடம்)5. தொன்முறை.
6. இனிது.
7.பிடிக்களிக்கும்.
(பாடம்)8.காண்பாராத்.
9.செல்வன்.
10.நாடே.
11.படப்பை.
12. குறியும் பொய்யாயின ஆயிழையாய்.
13. இருமுந்நீர்ப்.
14. தானென்க .
(பாடம்)15. உரைசால்.
16. வழங்கும்.
17. ஞெகிழ.
(பாடம்)18. கரப்பதறிந்து.
19. முதல்வன்.
20. கால்(பாடம்).
21. இருங்கழி நீர் அறல் விரியும்.
22. நாண் விட்டு.
23. கழைபயில் நனந்தலை.
24. கைக்கொண்.
25. பலவம்.
26. இலவென்று.
27. மெக்கல்.
(பாடம்)28. யீனா.
29. றனனே.
30. வீங்கிக்.
31. குவன்கொல் பூங்குழை யெண்ணும்.
32. னென.
33. சிலர்.
34. தேறுதலும்.
(பாடம்)35. புள்வரவு.
36. றோனே.
37. சிறுவன்.
38. மகாஅரிவ்.
39. உறழ்நிலாக் கான்று .
(பாடம்)40. நோமென்நெஞ்சே நோமென்நெஞ்சே ,
41. நோமென்நெஞ்சே.
42. பெரியார்.
43. மறைப்பது.
44 அலர்வந்து .
(பாடம்)45. வேலர்.
46. கணிவிரும்பும்.
47. அணி இழாய்.
48. ஆய்:(பாடம்) .
49. பெய்ந்.
50. பானாக .
51. நயனுடையன்.
52. இலையமர்.
53. குளவிவேய்ந்த .
54. செயலொழிந்.
55.அணியநம் புனத்தே.
56. குற்றத் திவ்வூர்க் .
(பாடம்)57. இணைத்துக்.
58. சுடர்க்கொடி.
59. கடீஇயர்.
60. எவனோ.
61. வளமான்.
62. கொலைவல்.
63. வரிக்கும்.
64. மறவாதீமே.
65. அலவன்.
66. தீங்கனி .
67. கறக்கும் .