. இதுவும் தலைவிமாட்டுச் சொல் நிகழுமிடம் உணர்த்துதல் நுதலிற்று. தலைவன் இயற்கைப்புணர்ச்சி புணர்ந்து நீங்குகின்றான் . இன்ன நாள் வரைந்து கொள்வல் எனக் கூறித் தோழியிற் கூட்டத்திற்கு முயலாது தணந்தவழி யதனைத் தோழி ஐயப்படுங் குறிப்புத் தோன்றாமை மறைத்தொழுகிய தலைவி அவன் வருந்துணையும் ஆற்றாது வருத்தமுறினும் வரையாத நாளின்கண் மறைந்தொழுகா நின்ற தலைவன் செவிலி முதலாயினாரை முட்டினவழியும் இவ்வொழுக்கத்தினை நின் தோழிக்கு உரையெனத் தலைவன் கூறியவழியும் தலைவி தானே கூறுங் காலமும் உள என்றாவாறு . உம்மை எதிர்மறையாதலாற் கூறாமை பெரும்பான்மை. காலமும் என்றது இவ்வொழுக்கம் புறத்தார்க்குப் புலனாங் காலம் . அக்காலத்துத் தோழி மதியுடம்படாமல் அறிவிக்கும் என்றவாறு . இனி வரைவிடை வைத்த காலத்து வருத்தமுற்றவழிக் கூறிய செய்யுள் : - "புனவன் துடவைப்2 பொன்போற் சிறுதினைக் கடியுண் கடவுட் கிட்ட சில்குரல் அறியா துண்டனம் மஞ்ஞை3 யாடுமகள் வெறியுறு வனப்பின் வேர்த்துற்று நடுங்குஞ் சூர்மலை நாடன் கேண்மை நீர்மலி கண்ணொடு நினைப்பாகின்றே " ( குறுந் .105) என வரும்.வரையா நாளிடை வந்தோன் முட்டியவழித் தலைவி கூறியதற்குச் செய்யுள் : - "தாழை குருகீனுந் தண்ணந் துறைவனை மாழைமான் நோக்கின் மடமொழி - நூழை நுழையு மடமகன் யார்கொலென் றன்னை புழையும் அடைத்தாள் கதவு . " ( கைந்நிலை . 59 ) எனவும் ,"அறியா மையின் அன்னை அஞ்சிக் குழையன் கோதையன் குறும்பைந் தொடியன் விழவயர் துணங்கை தழுவுகஞ் செல்ல நெடுநிமிர் தெருவிற் கைபுகு கொடுமுடை4 நொதும லாளன் கதுமெனத் தாக்கலின் கேட்பார்5 உளர்கொல் இல்லைகொல் போற்றென யாணது 6 பசலை என்றனள் அதனெதிர் நாணிலை எலுவ என்றுவந்7 திசினே செறுநரும் விழையுஞ் செம்ம லோனென நறுநுதல் அரிவை போற்றேன் சிறுமை பெருமையில் காணாது துணிந்தே." ( நற்றிணை . 50) எனவும் வரும் , இதன்கண் என்றானென ஒரு சொல் வருவிக்க . உரையெனத் தோழிக்கு உரைத்தற்குச் செய்யுள் :- "பொன்இணர் வேங்கை கவினிய பூம்பொழிலுள் நன்மலை நாடன் நலம்புனைய - மென்முலையாய் போயின திந்நாள் புனத்து மறையினால் ஏயினார் இன்றும்8 இனிது ". ( ஐந்திணையைம் . 11 ) என வரும் .இன்னும் , `உரையெனத் தோழிக் குரைத்துற் கண்ணும் ' என்பதற்குத் தலைவற்கு உரையெனத் தோழிக்கு உரைத்தற் கண்ணும் என்றுமாம். உதாரணம்:- "என்னைகொல் தோழி அவர்கண்ணும் நன்கில்லை அன்னை முகனும் அதுவாகும் - பொன்னலர் புன்னையம் பூங்கானற் சேர்ப்பனைத் தக்கதோ நின்னல்ல தில்லென் றுரை". (ஐந்தினையெழு. 56) என வரும்.(22)
1. " வரைவிடை வைத்த காலத்து வருந்தினும் " என்பதனைத் தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடல்.(தொல்.பொ.165) என்னுந் தந்திரவுத்தியாகக் கொண்டு அதன்கண் வேறுபட வருவன எல்லாம் கொள்க . (தொல். 17 - 29. நச்சி) (பாடம்) 2. தொடவை. 3. அறியாதுண்டமஞ்ஞை. 4. கொடிமுடி. 5. கேட்டார். 6. யானது. 7. தூணிலை எலுவமென்றுவந். 8. இன்னும்.
|