களவியல்

111உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும்
செயிர்தீர் காட்சிக்1 கற்புச்சிறந் தன்றெனத்
தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு
காமக் கிழவன் உள்வழிப் படினும்
தாவில் நன்மொழி கிழவி கிளப்பினும்
ஆவகை பிறவும் தோன்றுமன் பொருளே.
இதுவும் அது.

உயிரினும் நாண் சிறந்தது; அதினினும் குற்றந் தீர்ந்த காட்சியினையுடைய கற்புச் சிறந்தது; என முன்னோர் கூற்றை யுட்கொண்டு தலைவனுள்ள விடத்துச்செல்லலும்2 வருத்த மில்லாச் சொல்லைத் தலைவி சொல்லுதலுமாகிய அவ்வகை பிறவுந் தோன்றும் அவை பொருளாம் என்றவாறு.

மன் ஆக்கத்தின்கண் வந்தது. எனவே இவ்வாறு செய்தல் பொருளல்ல என்று கூறற்க என்றவாறு. இதனுள் நாணத்தினும் கற்புச் சிறந்த தென்றவாறு.

நொது மலர் வரைவு நோக்கிக் கூறுவது:-

"அளிதோ தானே நாணே நம்மொடு
நனிநீடு உழந்தன்று மன்னே இனியே
வான்பூங் காம்பின் ஓங்கு மணற் சிறு சிறை
தீம்புனல் நெரிதர வீழ்ந்துக் காஅங்குத்
தாங்கும் அளவைத் தாங்கிக்
காம நெரிதரக் கைந்நில் லாதே."

(குறுந். 149)

"கோடீ ரிலங்குவளை நெகிழ நாடொறும்3
பாடில கலிழுங் கண்ணொடு புலம்பி
ஈங்கிவண் உறைதலும் உய்குவம் ஆங்கே
எழுஇனி வாழியென் நெஞ்சே முனாஅது
குல்லைக் கண்ணி வடுகர் முனையது
பலவேற் கட்டி நன்னாட்டு உம்பர்
மொழிபெயர் தேஎத்த ராயினும்
வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே."

(குறந். 11)


இது காமக்கிழவ னுள்வழிப் படுதல்.

தாவில் நன்மொழி கூறியதற்குச் செய்யுள்:-

"மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்
கொடியோர்த் தெறூஉம் என்ப யாவதுங்
கொடியர் அல்லர்எம் குன்றகெழு நாடர்
பசைஇய பசந் தன்று நுதலே
ஞெகிழிய4 ஞெகிழ்ந்தன்று தடமென் தோளே".

(குறுந். 87)

என வரும்.
(23)

1. சிறுபான்மை வேறுபட்டு வருவனவற்றைக் கற்புச் சிறப்ப நாண் துறந்தாலும் , குற்றம் இன்று என்றற்குச் `செயிர் தீர் ' என்றார். நன்மொழி என்றார் கற்பிற்றிரியாமையின்; அவை இன்னோரன்னவழி நெஞ்சொடு கிளத்தல்போல்வன - (தொல், கள . 22. நச்சி)

(பாடம்) 2. செல்லவும்.

3. நாளும்.

4. ஞெகிழ.(பாடம்).