களவியல்

116தன்னுறு வேட்கை கிழவன்முற் கிளத்தல்
எண்ணுங் காலைக் கிழத்திக் கில்லைப்
பிறநீர் மாக்களின் அறிய ஆயிடைப்1
பெய்ந்நீர் போலும் உணர்விற் றென்ப.

இது, தலைவிக்கு உரியதோர் இயல்புணர்த்துதல் நுதலிற்று.

தலைவி தனது வேட்கையைக் கிழவன் முன்பு சொல்லுதல் நினைக்குங் காலத்துக் கிழத்திக்கு இல்லை. அங்ஙனம் சொல்லாதவிடத்தும் புதுக்கலத்தின்கட் பெய்த நீர்போலப் புறம்பொசிந்து காட்டும் உணர்வினையு முடைத்து அவ்வேட்கை என்றவாறு.

எனவே, குறிப்பின் உணரநிற்கும்2 என்றவாறு. தலைவன் மாட்டுக் கூற்றினானும் நிகழப்படுமென்று கொள்ளப்படும்.

(28)

1. வாயுடைப்.

2. உணராநிற்கும்.