களவியல்

117காமக் கூட்டந் தனிமையிற் பொலிதலின்
தாமே தூதுவ ராகலும் உரித்தே.

என்றது, களவிற்புணர்ச்சிக் குரியதொரு வேறுபாடுணர்த்துதல் நுதலிற்று.

மேற் சொன்னவாற்றால் பாங்கனுந் தோழியு நிமித்தமாகக் கூடுதலேயன்றித் தாமே தூதுவராகிய கூட்டங்கள் நிகழப்பெறும்; அதுசிறப்புடைத் தாதலால் என்றவாறு.

எனவே, பாங்கற் கூட்டம் தோழியிற் கூட்டம் என்பன நியமமில்லை; யார்மாட்டும் என்றவாறாம். தனிமையிற் பொலிதலின் என்றமையான் இது மிகவும் நன்று.

(29)