இது, பாங்கற் கூட்டம் நிகழுமிடம் உணர்த்துதல் நுதலிற்று. மேல், தோழியிற் கூட்டத்தின் விகற்பங் கூறினாராகலின், ஈண்டுத் துணை யென்றது பாங்கன் ஆயிற்று. மூன்று நாளல்லது துணையின்றிக் களவிற் புணர்ச்சி செல்லாது; அந் நாளகத்தும் துணையை நீக்கவும் படாது என்றவாறு. எனவே, எதிரப்பட்ட2 தலைவன் இயற்கைப் புணர்ச்சி புணர்வதன் முன் பாங்கற்கு உணர்த்தவும் பெறும் என்றவாறு. உதாரணம் மேற்காட்டப்பட்டது. (32)
1. இது முந்நாளைப்பிரிவாகிய பூப்பிடைப்பிரிவு வந்துழித் தலைவி கூறியது . இனி அல்லகுறிப்பட்டுழி ஒரு நாளும் இரண்டு நாளும் இடையீடாம் என்றுணர்க. பூப்பு நிகழாத காலத்துக் களவொழுக்கம் பூப்பு நிகழ்காலம் வரையப்பட்ட தென்று உரைப்பாரும் உளர். இவ்விதி அந்தணருக்குக் கூறியதன்று. அரசர் வணிகர் ஆகியவர்க்குச் சிறுபான்மை யாகவும் ஏனை வேளாளர் ஆயர் வேட்டுவர் முதலியோர்க்குப் பெரும்பான்மை யாகவும் கூறிய விதியென்றுணர்க . என்னை பூப்பு நிகழுங் காலத்து வரையாது களவொழுக்கம் நிகழ்த்தினார்க்கு , ` அந்தரத்தெழுதிய எழுத்தின் மான , வந்த குற்றம் வழிகெட ஒழுகலும் ' ( தொல் . கற்பி . 5 ) என்பதனாற் பிராயிசித்தம் பெறுதும் . இதனானே அந்தணர் மகளிர்க்கும் பூப்பெய்தியக்கால் அறத்தொடு நின்றும் வரைதல் பெறுதும். (தொல். கள. 31. நச்சி) (பாடம்) 2. எதிர்படத்.
|