களவியல்

125குறையுற உணர்தல் முன்னுற உணர்தல்
இருவரும் உள்வழி அவன்வர வுணர்தலென
மதியுடம் படுதல்1 ஒருமூ வகைத்தே.

இது, தலைவன் புணர்ச்சி யுண்மை தோழி அறியுந் திறன் பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று.

தலைவன் குறையுற வுணர்தலும் அவன் குறையுறாவழித் தலைவி குறிப்புக்கண்டு உணர்தலும் தானும் தலைவியுங் கூடியிருந்துழித் தலைவன் வந்தமைகண்டு உணர்தலும் என மூவகைத்துத் தோழி அறிவுடம்படுதற்கண்டு என்றவாறு.

மதியுடம்படுதல் எனினும் புணர்ச்சியுணர்தல் எனினும் ஒக்கும் , இம்மூன்றினும் ஒன்று கண்டுழி அவரவர் குறிப்பினாற் புணர்ச்சியுணரும் என்றவாறு . ` குறையுணர்தல் ' முன்வைத்தார் நன்கு புலப்படுதலின் `முன்னுறவுணர்தல்' அதன்பின் வைத்தார் , தலைவி வேறுபாடு கண்டு பண்டையிற்போலாள் என்னும் நிகழ்ச்சியான் முற்றத் துணிவின்மையின் , ` இருவரு முன்வழி யவன் வரவுணர்தல் ' அதன்பின் வைத்தார் . ஆண்டுப்புதுவோன் போலத் தலைவன் தருதலானும் தலைவி கரந்த உள்ளத்தளாய் நிற்குமாதலானும் அத்துணைப் புலப்பாடின்மையின் , அக்கருத்தினானே மேற்சொல்லப்பட்ட தோழி கூற்று மூவகையாகப் பொருள் உரைத்ததென்று கொள்க .

(37)


1. படுத்தல்.