களவியல்

126அன்ன வகையான் உணர்ந்தபின் அல்லது
பின்னிலை முயற்சி பெறாள் என1 மொழிப.

இதுவும் தோழிக்கு உரியதொரு திறன் உணர்த்துதல் நுதலிற்று .

மேற்சொல்லப்பட்ட கூறுபாட்டான் இருவர் மாட்டும் அன்புடைமை உணர்ந்தபின் அல்லது வழிபாட்டு நிலைமையாற் கூட்டத்திற்கு முயலப்பெறாள் தோழி என்றவாறு .

அஃதேல் , உள்ளப்புணர்ச்சியானின்று மெய்யுறாது கூட்டத்திற்கு முயல்வார் உளர் ஆயின் , அஃதெற்றாற்பெறும் எனின் ஆண்டும் இருவர் மாட்டுளதாகிய அன்புடைமையான் மன நிகழ்ச்சியுளவாக அந்நிகழ்ச்சி கண்டுழியும் முயலப்பெறுமென்று கொள்க . அதனானேயன்றே `முன்னுறவுணர்தல் ' என்னும் சூத்திரத்தினும் `புணர்ச்சியுடம்படுதல்' என்னாது `மதியுடம் படுதலொரு மூவகைய ' எனப் பொதுப்பட ஓதுவாராயிற் றென்க . அவ்வன்பினான் வருநிகழ்ச்சியுள்ள வழியும் இவ்விட மூன்றினும் காலமுண்மை அறியலாகும் .

(38)

1. பெறானென.