என்றது, நற்றாய்க்கு உரியதொரு மரபுணர்த்துதல் நுதலிற்று. நற்றாய் களவொழுக்கம் அறிவுறுத்தல் செவிலியோ டொக்கும் என்றவாறு. செவிலி கவலுந்துணைக் கவலுத லல்லது தந்தையையும் தன்னையன்மாரையும்போல வெகுடலிலள் என்றவாறு. அவர் வெகுள்வரோ எனின், "காமர் கடும்புனல் " எனத்தொடங்கும் கலித்தொகைப் பாட்டினுள், "அறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட என்னையர்க் குய்த்துரைத்தாள் யாய்". (கவித்.39) எனத் தாய் வெகுளாமை காணப்பட்டது. "அவரும் தெரிகணை நோக்கிச் சிலைநோக்கிக் கண்சேந்து ஒருபக லெல்லாம் உருத்தெழுந் தாறி". (கலித்.39) என்றதனான் வெகுட்சி பெற்றாம். (48)
|