இது, மேல் அதிகரிக்கப்பட்ட நிலத்தினானும் காலத்தினானும் ஆகிய திணை மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) திணைமயக்குறுதலும் கடிநிலை இல - ஒரு திணைக்கு உரிய முதற்பொருள் மற்றோர் திணைக்குரிய முதற்பொருளோடு சேரநிற்றலும் கடியப்படாது1 நிலன் ஒருங்கு மயங்குதல் இல் என மொழிப - ஆண்டு நிலன் சேரநிற்றல் இல்லை என்று சொல்லுவர், புலன் நன்கு உணர்ந்த புலமையோர் - புலன் நன்கு உணர்ந்த புலமையோர். எனவே, காலம் மயங்கும் என்றவாறாயிற்று. அதற்குச் செய்யுள்; "தொல்ஊழி தடுமாறித் தொகல்வேண்டும் 2பருவத்தான் பல்வயின் உயிரெல்லாம் படைத்தான்கட் பெயர்ப்பான்போல் எல்லுறு தெறுகதிர் மடங்கித்தன் கதிர்மாய நல்லற நெறிநிறீஇ உலகாண்ட அரசன்பின் அல்லது மலைந்திருந் தறநெறி நிறுக்கல்லா மெல்லியான் பருவம்போல் மயங்கிருள் தலைவர எல்லைக்கு வரம்பாய இடும்பைகூர் மருள்மாலை; பாய்திரை பாடோவாப் பரப்புநீர்ப் பனிக்கடல் தூவறத் துறந்தனன் துறைவனென் றவன்திறம் நோய்தெற உழப்பார்கண் இமிழ்தியோ எம்போலக் காதல்செய் தகன்றாரை உடையையோ நீ; மன்றிரும் பெண்ணை மடல்சேர் அன்றில் நன்றறை கொன்றனர் அவரெனக் கலங்கிய என்துயர் அறிந்தனை நரறியோ எம்போல இன்துணைப் பிரிந்தாரை உடையையோ நீ;
பனியிருள் சூழ்தரப் பைதலஞ் சிறுகுழல் இனிவரின் உயருமன் பழியெனக் கலங்கிய தனியவர் இடும்பைகண் டினைதியோ எம்போல இனியசெய் தகன்றாரை உடையையோ நீ; எனவாங்கு, அழிந்தயல் அறிந்த எவ்வம் மேற்படப் பெரும்பே துறுதல் களைமதி பெரும வருந்திய செல்லல்தீர் திறனறி ஒருவன் மருந்தறை கோடலிற் கொடிதே யாழநின் அருந்தியோர் நெஞ்சம் அழிந்துக விடினே" (கலி - நெய்.12) எனவரும்,[முதல் ஏகாரம் அசைநிலை. இரண்டாம் ஏகாரம் ஈற்றசை.] (14)
1. ஒரு நிலமே மயங்குமாறாயிற்று. உரிப்பொருள் மயக்குறுதல் என்னாது திணை மயக்குறுதலும் என்றார். ஓர் உரிப் பொருளோடு ஓர் உரிப்பொருள் மயங்குதலும், ஓர் உரிப்பொருள் நிற்றற்கு உரிய இடத்து ஓர் உரிப்பொருள் வந்து மயங்குதலும், இவ்வாறே காலம் மயங்குதலும் கருப்பொருள் மயங்குதலும் பெறுமென்றற்கு; திணையென்றது அம் மூன்றனையுங் கொண்டே நிற்றலின். 2.(பாடம்) 2. பருவத்தாற்.
|