கற்பியல்

141கொடுப்போர் இன்றியுங் கரண முண்டே
புணர்ந்துடன் போகிய காலை யான.

இது மேலதற்கொரு புறனடை .

கொடுப்போரின்றியும் , கரண நிகழ்ச்சி உண்டு ; புணர்ந்துடன் போகிய காலத்து என்றவாறு .

எனவே கற்பிற்குக் கரணநிகழ்ச்சி ஒருதலையாயிற்று. இதனானே கொடுப்போ ரில்வழியும் கரணநிகழ்ச்சி உண்மையும் ஒழுக்கக் குறைபாடு இன்மையும் கொள்க .

"பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு
தொல்மூ தாலத்துப் பொதியில் தோன்றிய
நாலூர்க் கோசர் நன்மொழி போல
வாயா கின்றே தோழி யாய்கழற்
சேயிலை வெள்வேல் விடலையொடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே . "

( குறுந் . 15)

இதனுள் விடலையொடு மடந்தைநட்பு பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொண்டு நாலூர்க் கோசர் நன்மொழிபோல வாயாயிற்று எனச் செவிலி நற்றாய்க்குக் கூறினமையானும் விடலை எனப் பாலை நிலத்திற்குரிய தலைவன் பெயர் கூறினமையானும் கொடுப்போரின்றியும் கரணம் நிகழ்ந்தவாறு காண்க.

(2)