கற்பியல்

144கரணத்தின் அமைந்து முடிந்த காலை
நெஞ்சுதளை அவிழ்ந்த புணர்ச்சிக்கண்ணும்
எஞ்சா மகிழ்ச்சி இறந்துவரு பருவத்தும்
அஞ்ச வந்த உரிமைக் கண்ணும்
நன்னெறிப் படருந் தொன்னலப் பொருளினும்
பெற்ற தேஎத்துப் பொருமையின் நிலைஇக்1
குற்றஞ் சான்ற பொருளெடுத் துரைப்பினும்
நாமக் காலத் துண்டெனத் தோழி
ஏமுறு கடவுள் ஏத்திய மருங்கினும்
அல்லல் தீர ஆர்வமோ டளைஇச்2
சொல்லுறு பொருளின் கண்ணுஞ் சொல்லென
ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது
வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கென
அடிசிலும் பூவுந் தொடுத்தற்3கண்ணும்
அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும்
அந்தமில் சிறப்பிற் பிறர்பிறர் திறத்தினும்
ஒழுக்கங் காட்டிய குறிப்பினும் ஒழுக்கத்துக்
களவினுள் நிகழ்ந்த அருமையைப் புலம்பி
அலமர லுள்ளமொ டளவிய இடத்தும்
அந்தரத் தெழுதிய எழுத்தின் மான
வந்த குற்றம் வழிகெட ஒழுகலும்
அழியல்அஞ்சலென் றாயிறு பொருளினுந்
தானவட் பிழைத்த பருவத் தானும்
நோன்மையும் பெருமையும் மெய்கொள வருளிப்4
பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தித்
தன்னி னாகிய தகுதிக் கண்ணும்
புதல்வற் பயந்தபுனிறுதீர்5பொழுதின்.
நெய்யணி மயக்கம் புரிந்தோள் நோக்கி
ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியுஞ்
செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற் கண்ணும்
பயங்கெழு துணையணைப் புல்லிப் புல்லாது6
உயங்குவனள்7 கிடந்த கிழத்தியைக் குறுகி
அல்கல் 8முன்னிய நிறையழி பொழுதின்
மெல்லன் சீறடி புல்லிய இரவினும்
உறலருங் குரைமையின் 9 ஊடன்மிகுத் தோளைப்
பிறபிற பெண்டிரிற் பெயர்த்தற் கண்ணும்
பிரிவின் எச்சத்துப் புலம்பிய இருவரைப்
பரிவு நீக்கிய10பகுதிக் கண்ணும்
நின்றுநனி பிரிவின் அஞ்சிய பையுளுஞ்
சென்றுகை இகந்துபெயர்த் துள்ளிய வழியுங்
காமத்தின் வலியுங் கைவிடின் அச்சமுந்
தானவட் பிழைத்த நிலையின் கண்ணும்
உடன்சேறற் செய்கையொ டன்னவை பிறவும்
மடம்பட வந்த தோழிக் கண்ணும்
வேற்றுநாட்டகல்வயின் விழுமத்தானும்
மீட்டுவர வாய்ந்த வகையின் கண்ணும்
அவ்வழிப் பெருகிய சிறப்பின் கண்ணும்
பேரிசை யூர்திப்பாகர் பாங்கினுங்
காமக் கிழத்தி மனையோள் என்றிவர்
ஏமுறு கிளவி சொல்லிய எதிருஞ்
சென்ற தேஎத் துழப்புநனி விளக்கி
இன்றிச் சென்ற தன்னிலை கிளப்பினும்
அருந்தொழில் முடித்த செம்மற் காலை
விருந்தோடு நல்லவை வேண்டற் கண்ணும்
மாலை யேந்திய பெண்டிரும் மக்களுங்
கேளிர் ஒழுக்கத்துப் புகற்சிக் கண்ணும்
ஏனைய வாயிலோ ரெதிரொடு தொகைஇப்11
பண்ணமைபகுதிமுப் பதினொரு மூன்றும்
எண்ணருஞ் சிறப்பிற் கிழவோன் மேன.

இது, தலைவற்கு உரிய கிளவியெல்லாந் தொகுத்துணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்)கரணத்தினமைந்து முடிந்த பின்பு, நெஞ்சுதளை யவிழ்ந்த புணர்ச்சி முதலாக ஏனைய வாயிலோ ரெதிரொடு கூடிப் பண்ணுத லமைந்த பகுதியினையுடைய முப்பத்தின் மூன்றிடத்தினும் கூறல் எண்ணுதற்கரிய சிறப்பினையுடைய கிழவோன் மேலன என்றவாறு.

இடம் என்பது வகையிற் கூறியவதனால் உரைக்கப்பட்டது . கூற்றென்பது வருகின்ற சூத்திரத்தினும் கொணர்ந்துரைக்கப்பட்டது.

கரணத்தி னமைந்து முடிந்த காலை என்பது - ஆசான் புணர்ந்த கரணத்தினால் வதுவை முடிந்தபின் என்றவாறு.

நெஞ்சு தளையவிழ்த லாவது - தலைவியைத் தலைவன் கண்ணுற்றஞான்று தலைவன்மாட்டு உளதாகிய பெருமையும் உரனும் தலைவிமாட்டு உளதாகிய அச்சமும் நாணும் மடனும் ஏதுவாக இயற்கைப்புணர்ச்சி இடையீடுபட்டுழி வேட்கை தணியாது வரைந் தெய்துங்காறும் இருவர்மாட்டும் கட்டுண்டு நின்ற நெஞ்சம் கட்டு விடப்படுதல் இயற்கைப் புணர்ச்சி புணரந்த தலைவன் அலரறி வுறுக்கப்பட்டு . நீங்கி வரைந் தெய்துங்காலும் புணர்ச்சி வேட்கை யாற் செல்கின்ற நெஞ்சினை இருவரும் வேட்கை தோற்றாமல் தளைக்கப்பட்டதனைத் தளை என்றலும் ஒன்று. இவையிரண்டினும் மிகுதி பொருளாகக் கொள்க.

உதாரணம்

"உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை12
பெருஞ்சோற் றமலை நிற்ப நிரைகால்
தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமிரி
மனைவிளக் குறுத்து மாலை தொடரிக்
கனையிருள் அகன்ற கவின்பெறு காலைக்
கொள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள்
கேடில் விழுப்புகழ் நாள்தலை வந்தென
உச்சிக் குடத்தர் புத்தகல் மண்டையர்
பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தரப்
புதல்வரப் பயந்த திதலையல் வயிற்று
வாலிழை மகளிர் நால்வர் கூடிக்
கற்பினின்13 வழாஅ நற்பல உதவிப்
பெற்றேற் பெட்கும் பிணையை ஆகென
நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி
பல்லிருங் கதுப்பின் நெல்லோடு தயங்க
வதுவை நன்மணங் கழிந்த பின்றைக்
கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து
பேரிற் கிழத்தி யாகெனத் தமர்தர
ஓரிற் கூடிய வுடன் புணர் கங்குற்
கொடும்புறம் வளைஇக் கோடிக் கலிங்கத்து
ஒடுங்கினள் கிடந்தனள் ஓர்புறந் தழீஇ
முயங்கல் விருப்பொடு முகம்புதை திறப்ப
அஞ்சினள் உயிர்த்த காலை யாழநின்
நெஞ்சம் படர்ந்தது14 எஞ்சா துரையென
இன்னகை இருக்கைப் பின்யான் வினவலின்
செஞ்சூட் டொண்குழை வண்காது துயல்வர
அகமலி உவகையள் ஆகிமுகன் இகுத்து
ஒய்யென15இறைஞ்சி யோளே மாவின்
மடங்கொள் மதைஇய நோக்கின்
ஒடுங்கீ ரோதி மாஅ யோளே. "

(அகம் 89)

இதனுள் `முயங்கல் விருப்பொடு முகம்புதை திறப்ப அஞ்சினள் உயிர்த்தகாலை' என்பதனால் இயற்கைப் புணர்ச்சி இன்மையும், `அகமலி யுவகையாகி முகனிகுத்து ஒய்யென விறைஞ்சி ' என்பதனால் உள்ளப் புணர்ச்சி யுண்மையும் அறிக, பிறவும் அன்ன.

எஞ்சா மகிழ்ச்சி யிறந்துவரு பருவத்தும் என்பது-ஒழியாத மகிழ்ச்சி மிக்கு வருங்காலத்துத் தலைவன்கட் கூற்று நிகழும் என்றவாறு.

உதாரணம்

"குனிகாயெருக்கின் குவிமுகிழ் விண்டலோடு
பனிவார் ஆவிரைப் பன்மலர் சேர்த்தித்
தாருங் கண்ணியுந் ததைஇத் தன்னிட்டு
ஊரும் மடவோன் உலர்வன் கொல்லென
நீர்த்துறைப் பெண்டிர் நெஞ்சழிந் திரங்கினும்
உணரா ளூர்தோறு
அணிமடற் கலிமா மன்றத் தேறித்தன்
அணிநலம் பாடினும் அறியா ளென்றியான்
பெருமலை நெடுங்கோ டேறிப் பெறுகென்று
உருமிடித் தீயின் உடம்புசுடர் வைத்த
என்னுறு விழுமம் நோக்கிப் பொன்னொடு
திருமணி இமைக்குங் கோடுயர் மனந்தலை
இரவுடைப் பெண்டி ரிடும்பை நோக்கித்
தெளிவுமனங் கொண்ட தீதறு காட்சி
வெளியன் வேள்மான் விளங்குகரி போல
மலிகடல் உடுத்த மணங்கெழு நனந்தலைப்
பலபா ராட்டவும் படுவ மாதேர்
கடைந்து கவித்தன்ன கால்வீங்கு கருங்கட்
புடைதிரள் வனமுலை புலம்பல் அஞ்சிக்
காமர் நுழை நுண் நுசுப்பின்
தாமரை முகத்தியைத் தந்த பாலே."

(குண நாற்பது)

என வரும்.

அஞ்சவந்த உரிமைக்கண்ணும் என்றது-தலைவன் தானும் பிறரும் அஞ்சும்படியாகத் தலைவிமாட்டு உளதாகிய கற்பாகிய உரிமைக்கண்ணும் என்றவாறு.

உதாரணம் வந்தவழிக் காண்க.

நன்னெறிப்படரும் தொன்னலப் பொருளினும் என்றது நன்னெறிக்கட் செல்லாநின்ற தொன்னலப் பொருண்மைக் கண்ணும் என்றவாறு.

நன்னெறியாவது அறம் பொருளின்பம் வழுவாத நெறி. தலைமகன் சிறப்புத் தொன்றுதொட்டு வருதலிற் குடிநலத்தைத் தொன்னல மென்றார். இதனாற் சொல்லியது அறம் பொருள் இன்பங்களை வழாமல் தன் குலத்திற்கேற்ற மனைவாழ்க்கையைத் தலைமகள் நடத்துதற்கண்ணும் தலைவன் கண் கூற்று நிகழும் என்றவாறு.

உதாரணம்

"தடமருப் பெருமை மடநடைக் குழவி
தூண்தொறும் யாத்த காண்தகு நல்லில்
கொடுங் குழை பெய்த செழுஞ்செய் பேதை16
சிறுதாழ் செறித்த மெல்விரல் சேப்ப
வாளை ஈர்ந்தடி வல்லிதின் வகைஇப்17
புகையுண் டமர்த்த கண்ணள் தகைபெறப்
பிறைநுதற் பொறித்த சீறு நுண் பல்வியர்
அந்துகில் தலையில் துடையினள் நப்புலந்து
அட்டி லோளே அம்மா அரிவை
எமக்கே வருகதில் விருந்தே சிவப்பாள் அன்று18
சிறியமுள் எயிறு தோன்ற
முறுவல் கொண்ட முகங்காண் கம்மே."19

(நற்றிணை. 120)

இதனுள் ஊடற்குறிப்பின ளாகிய தலைவி மனைவாழ்க்கைத் தருமமாகிய விருந்து புறந்தருதல் விருப்பினளாதலின் நன்னெறிப் படர்தல் ஆயிற்று .

பெற்ற தேஎத்துப் பெருமையின் நிலைஇக் குற்றஞ்சான்ற பொருள் எடுத்துரைப்பினும் என்றது - வரைந்து பெற்றவழித் தலைவியைப் பெருமையின்கண்ணே நிறுத்திக் களவுக் காலத்துக் குற்றஞ்சான்ற பொருளை யெடுத்துக் கூறிய வழியும் என்றவாறு.

உதாரணம்

"அதிரிசை யருவிய பெருவரைத் தொடுத்த
பல்தேன் இறாஅல் அல்குநர்க் குதவு
நுந்தை நன்னாட்டு வெந்திறல் முருகென
நின்னோய்க் கியற்றிய வெறிநின் தோழி
என்வயி னோக்கலிற் போலும் பன்னாள்
வருந்திய வருத்தந் தீரநின்
திருந்திழைப் பணைத்தோள் புணர்ந்துவந் ததுவே."

இதனுள் `நுந்தை நன்னாட்டு' என்றதனால் தலைவி பெருமையும் நின்னோய்க்கியற்றிய வெறி நின்கோழி யென்வயினோக்கலிற் போலும் என்றதனால் குற்றஞ்சான்ற பொருள் என்பது அறிந்து கொள்க.

நாமக் காலத் துண்டெனத் தோழி ஏமுறு கடவுள் ஏத்திய மருங்கினும் என்பது - அச்சக்காலத்து நமக்குத்துணையாயிற்றெனத் தோழி ஏமுறு கடவுளை ஏத்துதற்கண்ணும் தலைவன்கட் கூற்று நிகழும் என்றவாறு .

உதாரணம் வந்தவழிக் காண்க .

அல்லல் தீர ஆர்வமொடு அளைஇச் சொல்லுறு பொருளின் கண்ணும் என்பது - தலைவி தன் துன்பந்தீர ஆர்வத்தொடு பொருந்தச் சொல்லப்பட்ட பொருண்மைக்கண்ணும் தலைவன் கூற்று நிகழும் என்றவாறு. என்றது களவுக்காலத்து வருந்திய வருத்தந்தீரத் தனது காதல் மிகுதி தோன்றச் சொல்லுதற் பொருளின்கண்ணும் என்றவாறு.

உதாரணம்

"யாயும் ஞாயும்20 யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதுஞ்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே"

(குறுந்.40)

என வரும்.

சொல்லென ஏனது சுவைப்பினும் நீ கை தொட்டது வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கென அடிசிலும் பூவுந்தொடுத்தற்கண்ணும் என்பது - யாதானும் ஒன்றை நுகரினும் நீ கையால் தொட்டது வானோர் அமிழ்தம் புரையும், இதற்குக் காரணம் சொல்லுவாயாக என்று அடிசில் தொடுத்தற்கண்ணும் பூத்தொடுத்தற்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதனால், சாந்து முதலியனவும் கொள்க.

உதாரணம் வந்தவழிக் காண்க.

"வேம்பின் பைங்காயென் தோழி தரினே
தேம்பூங் கட்டி"

(குறுந்.196)

எனத் தலைவன் கூறினமை தோழி கூறலானும் அறிக.

அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும் அந்தமில் சிறப்பிற் பிறர் பிறர் திறத்தினும் ஒழுக்கம் காட்டிய குறிப்பினும் என்பது - பார்ப்பார் கண்ணும் சான்றோர் கண்ணும் மிக்க சிறப்பினையுடைய பிறராகிய அவரவரிடத்தும் ஒழுகும் ஒழுக்கத்தைக்21குறிப்பினால் காட்டிய இடத்தினும் என்றவாறு.

உதாரணம் வந்தவழிக் கண்டு கொள்க.

ஒழுக்கத்துக் களவினுள் நிகழ்ந்த அருமையைப் புலம்பி அலமா லுள்ளமோ டளவியவிடத்தும் என்பது - ஒழுக்கத்தினுங் களவுக்காலத்து நிகழ்ந்த அருமையைத் தனித்துச் சுழன்ற உள்ளத்தோடே உசாவிய விடத்தும் என்றவாறு .

உதாரணம் வந்தவழிக் காண்க .

அந்தரத் தெழுதிய வெழுத்தின் மான வந்த குற்றம் வழி கெட ஒழுகலும் என்பது - களவுக்காலத்தொழுகிய ஒழுக்கக் குறைபாட்டான் நிகழ்ந்த குற்றத்தை ஆகாயத் தெழுத்துப் போல வழிகெட ஒழுகுதற்கண்ணும் என்றவாறு .

உதாரணம் வந்தவழிக் காண்க .

அழியல் அஞ்சலென் றாயிரு பொருளினுந் தானவட்பிழைத்த பருவத்தானும் என்பது - அழியல் , அஞ்சல் என இயற்கைப்புணர்ச்சிக்கட் கூறிய அவ்விரு பொருளைப் பிழைத்த காலத்தினும் தலைவன்கண் கூற்று நிகழும் என்றவாறு .

அஃதாவது , புறப்பெண்டிர் மாட்டுப் பிரிதல் .

"நகுகம் வாராய் பாண பகுவாய்
அரிபெய்22 கிண்கிணி ஆர்ப்பத் தெருவில்
தேர்நடை பயிற்றுந் தேமொழிப் புதல்வன்
பூநாறு செவ்வாய் சிதைத்த சாந்தமொடு
காம நெஞ்சந் துரப்ப யாந்தம்
முயங்கல் விருப்பொடு குறுகினேம் ஆகப்
பிறவனப் புற்ற23 மாசறு திருநுதல்24
நாறிருங்கதுப்பினெங் காதலி வேறுணர்ந்து
வெரூஉமான் பிணையின் ஒரீஇ 25
யாரை யோவென்று26இகந்துநின் றதுவே"

(நற்றிணை . 250)

என வரும்.

நோன்மையும் பெருமையும் மெய்கொள வருளிப் பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தித் தன்னினாகிய தகுதிக்கண்ணும் என்பது - பொறைமையும் பெருமையும் மெய்யெனக் கொள்ளுமாறு அருளி ஆராய்தல் அமைந்த வாயிலொடு பொருந்தித் தலைவன் தன்னான் ஆகிய தகுதிக்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.

அருளிப் பொருந்திக் கூறும் எனக் கூட்டுக. எனவே தலைமகன் எனபதூஉந் தலைமகள் என்பதூஉம் எஞ்சி நின்றன . கூற்று என்றது அதிகாரத்தான் வந்தது . அஃதாவது பொறுத்தல் வேண்டும் எனவும் சிறுமை செய்தல் குற்றம் எனவும் கூறுதலும் , தலைமகள் தன்னால் வந்ததனை என்னால் வந்தது நீ என் செய்தனை? இவள் வெகுடற்குக் காரணம் என்னை? என ஆராய்தலிற் பொருந்திய தோழி என்க. பொருந்தலாவது வேறு படாது உடம்படுதல். அவை வருமாறு :-

`யாரினுங்காதலம் என்றேனா27 ஊடினாள்
யாரினும் யாரினும் என்று."

(குறள் . 1314)

"தும்முச்செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்28
எம்மை மறைத்திரோ என்று"

(குறள் . 1318 )

"இம்மைப் பிறப்பில்29 பிரியலம் என்றேனாக்30
கண்ணிறை நீர்கொண் டனன்"

(குறள் 1315)

"தன்னை யுணர்த்திங் காயும் பிறர்க்குநீர்
இந்நீரர் ஆகுதிர் என்று."

(குறள் . 1319)

"கோட்டுப்பூச் சூடினுங் காயும் ஒருத்தியைக்
காடிய சூடினீர் என்று."

(குறள் . 1313)

என வரும்,

பிறவும் அன்ன.

புதல்வற் பயந்த புனிறுதீர் பொழுதின் நெய்யணி மயக்கம் புரிந்தோள் நோக்கி ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியுஞ் செய் பெருஞ் சிறப்பொடு சேர்தற்கண்ணும் என்பது - புதல்வனைப் பயந்த ஈன்றணிமை நீங்கினபொழுதின்கண் நெய்யணி மயக்கம் புரிந்தவளைக் குறித்து முனிவர் மாட்டும் அமரரைக் குறித்தும் செய்யாநிற்கும் பெரிய சிறப்பொடு சேர்தகண்ணும் கூற்று நிகழும் என்றவாறு ,

நெய்யணி மயக்கமாவது வாலாமை நீங்கி நெய்யணிதல் நோக்கிச் சேர்தல் எனக் கூட்டுக.

"வாராய் பாண நகுகம் நேரிழை
கடும்புடைக் கடுஞ்சூல் நங்குடிக் குதவி
நெய்யோ டிமைக்கும் ஐயவித் திரள்காழ்
விளங்குநகர் விளங்கக் கிடந்தோட் குறுகிப்
புதல்வனை யீன்றெனப் பெயர்பெயர்த்து அவ்வரித்
திகலை அல்குல் முதுபெண்டாகித்
துஞ்சுதி யோமெல் அஞ்சில ஒதியெனப்
பன்மாண் அகட்டிற் 31 குவளை ஒற்றி
உள்ளினென் உறையும் 32 என்கண்டு மெல்ல
முகைநாள் முறுவல் தோற்றித் 33
தகைமலர் உண்கண் புடைத்துவந் ததுவே "

( நற்றிணை . 370)

என வரும் ,

பயங்கெழு துணைமணைப் புல்லிப் புல்லாது உயங்குவனள் கிடந்த கிழத்தியைக் குறுகிய அல்கல் முன்னிய நிறைவழி பொழுதின் மெல்லென் சீறடி புல்லிய இரவினும் என்பது - தலைவன் பரத்தையிற் பிரிந்துழி ஊடற் கருத்தினளாய்ப் பயங் கெழுதுணை அணையைப் பல்லிப் புல்லாது வருந்திக் கிடந்த தலைவியைக் கிட்டித் தங்குதலைக் குறித்த நிறையழிபொழுதில் தலைவியது மெல்லென்ற சீறடியைப் புல்லிய இரத்தற்கண்ணும் தலைவன் கூற்று நிகழும் என்றவாறு .

உதாரணம்

" ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொல் என்று."

[குறள் . 1307]

" ஊடுக மன்னோ ஒளியிழை யாம்இரப்ப
நீடுக மன்னோ இரா."

[குறள் . 1329]

" ஊடலில் தோன்றுஞ் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்."

[குறள் . 1322]

உறலருங்குரைமையி னூடன் மிகுத்தோளைப் பிறபிற ணெ்டிரிற் பெயர்த்தற்கண்ணும் என்பது - ஊடல் மிகுத் தோளை உறுதற்கருமையாற் பிறபிற பெண்டிர் ஏதுவாக ஊடல் உணர்த்தற்கண்ணும் என்றவாறு

"புனவளர் 34 பூங்கொடி யுன்னாய் " என்னும் மருதக் கலியுள் ,

"ஒருத்தி புலவியாற் புல்லா திருந்தாள் அலவுற்று
வண்டினம் ஆர்ப்ப இடைவிட்டுக் காதல்
தண்தார் அகலம் புகும்"

[கலி . 92]

எனப் பிறபிற பெண்டிரைக் காட்டித் தலைவன் ஊடலுணர்த்திய வாறு அறிந்து கொள்க.

பிரிவினெச்சத்துப் புலம்பிய விருவரைப் பரிவு நீக்கிய பகுதிக்கண்ணும் என்பது - பிரிவு நிமித்தமாக வருந்திய மனையாளையும் காமக் கிழத்தியையும் அவ் வருத்தத்து நின்று நீக்கிய பகுதிக்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு; அஃதாவது பிரிவேன் என்றல்.

"பொன்னும்மணியும் போலும் யாழநின்
நன்னர் மேனியும் நாறிருங் கதுப்பும்
போதும் பணையும்35 போலும் யாழநின்
மாதர் உண்கணும் வனப்பின் தோளும்
இவைகாண் தோறும் அகமலிந்து யானும்
அறநிலை பெற்றோர் அனையேன் அதன்தலைப்
பொலந்தொடிப் புதல்வனும் பொய்தல் கற்றனன்
வினையும் வேறுபுலத்து இலனே36 நினையின்
யாதனிற் பிரிவாம் மடந்தை37
காதல் தானுங் கடலினும் பெரிதே."

[நற்றிணை . 166]

இக்கூற்று இருவர் மாட்டும் ஒக்கும்.

38 நின்றுநனி பிரிவின் அஞ்சியு பையுளும் என்பது - நிலைநிற்க மிகப் பிரியும் பிரிவின்கண் அஞ்சிய நோயின்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.

"ஆள்வழக்கற்ற சுரத்திடைக் கதிர்தெற
நீளெரி பரந்த நெடுந்தாள் யாத்துப் 39
போழ்வளி முழங்கும் புல்லென் உயர்சினை
முடைநசை இருக்கைப் பெடைமுகம் நோக்கி
ஊன்பதித் 40 தன்ன வெருவரு செஞ்செவி
எருவைச் சேவல் கரிபுசிறை தீய
வேனின் நீடிய வேயுயர் நனந்தலை
நீயுழந் 41 தெய்துஞ் செய்வினைப் பொருட்பிணி
பல்லிதழ் மழைக்கண் மாஅ யோள்வயிற்
பிரியிற் 42 புணர்வ தாயிற் பிரியாது
ஏந்துமுலை முற்றம் வீங்கப் பல்லூழ்
சேயிழை தெளிர்ப்பக் கவைஇ நாளும்
மனைமுதல் வினையொடும் உவப்ப
நினைமாண்43 நெஞ்சம் நீங்குதல் மறந்தே."

(அகம் 51)

என வரும்,

சென்று கையிகந்து பெயர்த்துள்ளிய வழியும் என்பது - மேற் கூறியவாறினைக் கையிசந்து முன்னொருகாற் சென்று மீட்டும் அந்நெறியினைப்போக நினைந்தவழியும் கூற்று நிகழும் என்றவாறு.

"இருங்கழி முதலை மேஎந்தோல் அன்ன
கருங்கால் ஓமைக் காண்பின் பெருஞ்சினைக்
கடியுடை நனந்தலை ஈன்றிளைப் பட்ட
கொடுவாய்ப் பேடைக் கல்கிரை தரீஇ 44
மான்றுவேட் டெழுந்த செஞ்செவி எருவை
வான்தோய் சிமைய விறல்வரைக் கவாஅன்
துளங்குநடை மரையா வலம்படத் தொலைச்சி
ஒண்செங் குருதி யுவறியுண் டருந்துபு
புலவுப்புலி துறந்த கலவுக்கழி கடுமுடை
கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும்
புல்லிலை மராஅத்த அகன்சேண் அத்தங்
கலந்தரல் உள்ளமொடு கழியக் காட்டிப்
பின்நின்று துரக்கும் நெஞ்சம் நின்வாய்
வாய்போற் பொய்ம்மொழி எவ்வமென் களைமா 45
கவிரிதழ் அன்ன காண்பின் செவ்வாய்
அந்தீங் கிளவி ஆயிழை மடந்தை
கொடுங்குழைக் கமர்த்த நோக்கம்
நெடுஞ்சேண் ஆரிடை விலங்கு ஞான்றே."

(அகம் . 3)

என வரும்.

காமத்தின் வலியும் என்பது - பொருளினுங் காமம் வலியுடைத்து என உட்கொண்ட வழியும் கூற்று நிகழும் என்றவாறு.

உதாரணம்

"விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும்
அரிது பெறு சிறப்பிற் புத்தேள் நாடும்
இரண்டுந் தூக்கிற் சீர்சா லாவே
பூப்போல் உண்கண் பொன்போல் மேனி
மாண்வரி அல்குற் குறுமகள்
தோள்மாறு படூஉம் வைகலோ டெமக்கே."

(குறுந் . 101)

என வரும்.

கைவிடின் அச்சமும் என்பது - தலைவியைக் கைவிட்டவழி அவளது உயிர்ப்பொருட்டு அஞ்சுதற்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.

உதாரணம்

"அளிநிலை பொறாஅது அமரிய முகத்தள்
விளிநிலை கேளாள் தமியள் மென்மெல்
நலமிகு சேவடி நிலம்வடுக் கொளாஅக் 46
குறுக வந்துதன் கூரெயிறு தோன்ற
வறிதகத் தெழுந்த வாயல் முறுவலள்
கண்ணிய துணரா அளவை ஒண்ணுதல்
வினை தலைப் படுதல் செல்லா நினைவுடன் 47
முளிந்த ஓமை முதையலங் காட்டுப்
பளிங்கத் தன்ன பல்காய் நெல்லி
மோட்டிரும் பாறை ஈட்டுவட் டேய்ப்ப
உதிர்வன படூஉங் கதிர்தெறு கவாஅன்
மாய்த்த போல மழுகு நுனை தோற்றிப்
பாத்தி அன்ன குடுமிக் கூர்ங்கல்
விரல்நுதி சிதைக்கும் நிரைநிலை யதர
பரன்முரம் பாகிய பயமில் கானம்
இறப்ப எண்ணுதி ராயின் 48 அறத்தாறு
அன்றென மொழிந்த தொன்றுபடு கிளவி
அன்ன வாக வென்னுநள் போல
முன்னம் காட்டி முகத்தின் உரையா
ஓவச் செய்தியின் ஒன்றுநினைந் தேற்றிப்
பாவை மாய்த்த பனிநீர்நோக்கமொடு
ஆகத் தொடுக்கிய புதல்வன் புன்தலைத்
தூநீர் பயந்த துணையமை பிணையல்
மோயினள் உயிர்த்த காலை மாமலர்
மணியுரு இழந்த அணியழி தோற்றம்
கண்டே கடிந்தனஞ் செலவே ஒண்தொடி
உழையம் ஆகவும் இனைவோள்
பிழையலள் மாதோ பிரிதுநாம் எனினே."

(அகம் . 5)

என வரும்,

தானவட் பிழைத்த நிலையின்கண்ணும் என்பது - தலைவன் தலைவியை நின்னிற் பிரியேன் என்ற சொல்லிற் பிழைத்த நிலையின்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.

பிழைத்தலாவது பிரிதல்:

"வயங்குமணி பொருத வகையமை வனப்பிற்
பசுங்காழ் அல்குல் மாஅ யோளொடு
வினைவனப் 49 பெய்திய புனைபூஞ் சேக்கை
விண்பொரு நெடுநகர்த் தங்கி இன்றே
இனிதுடன் கழிந்தன்று மன்னே நாளைப்
பொருந்தாக் கண்ணேம் புலம்புவந் துறுதரச்
சேக்குவங் கொல்லோ நெஞ்சே சாத்தெறிந்து
அதர்கூட் டுண்ணும் அணங்குடைப் பகழிக்
கொடுவில் ஆடவர் படுபகை வெரீஇ
ஊரெழுந் துலறிய பீரெழு முதுபாழ்
முருங்கை மேய்ந்த பெருங்கை யானை
வெரிந்ஓங்கு சிறுபுறம் உரிஞ 50 ஒல்கி
இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென
மணிப்புறாத் துறந்த மரஞ்சோர் மாடத்து
எழுதணி கடவுள் போகலிற் புல்லென்று
ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன் திணைப்
பானாய் துன்னிய 51 பறைக்கட் 52 சிற்றில்
குயில்காழ் சிதைய மண்டி அயில்வாய்க்
கூர்முகச் சிதலை வேய்ந்த
போர்முடி நல்லிறைப்53 பொதியி லானே."

(அகம் . 167)

என வரும்.

உடன் சேறற் செய்கையொடு என்பது - உன் போக வேண்டுமெனச் சொல்லிய வழியும் என்றவாறு . ஒடு எண்ணின் கண் வந்தது .

"செருமிகு சினவேந்தன்" என்னும் பாலைக் கலியுள்,

"எல்வளை எம்மொடு நீவரின் யாழநின்
மெல்லியல் மேவந்த சீறடித் தாமரை
அல்லிசேர் ஆயிதழ் அரக்குத்தோய்ந் தவைபோலக்
கல்லுறின் அவ்வடி கறுக்குந அல்லவோ."

(கலித் 13)

அன்னவை பிறவும் மடம்பட 54 வந்த தோழிக்கண்ணும் என்பது - மேற்சொல்லப் பட்டவையிற்றினும் மடமைபட வந்த தோழிமாட்டும் கூற்று நிகழும் என்றவாறு.

அவையாவன:

"இல்லென இரந்தோர்க்கொன் றீயாமை இழிவெனக்
கல்லிறந்து செயல்சூழ்ந்த பொருள்பொரு ளாகுமோ."

(கலித் . 2)

என வரும் .

இந்நிகரன கூறியவழித் தலைவன் கூற்று நிகழும் . இவ்வழிக் கூறுங் கூற்றுக் காமமாகத் தோன்றாது பொருளாகத் தோன்றும் . காமத்திற்கு மாறாகக் கூறல் வேண்டுதலின் ,

"இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பந் துடைத்தூன்றுந் தூண்."

(குறள் . 615)

என வரும் .

அஃதாவது , பிரிவு ஒருப்பட்ட பின்புபோவேமோ தவிர்வேமோ எனச் சொல்லும் மனநிகழ்ச்சி .

உதாரணம்

"உண்ணா மையின் உயங்கிய மருங்கின்56
ஆடாப் படிவத் தான்றோர் போல
வரைசெறி 57 சிறுநெறி நிரைபுடன் செல்லும்
கான யானை கவினழி குன்றம்
இரந்துபொருள் தருதலும் ஆற்றாய் சிறந்த
சில்ஐங்58கூந்தல் நல்லகம் பொருந்தி
ஒழியின் வறுமை யஞ்சுதி அழிதக59
உடைமதி வாழிய நெஞ்சே நிலவென
நெய்கனி நெடுவேல் எஃகிலை இமைக்கும்
மழைமருள் பஃறேல் மாவண் சோழர்
கழைமாய் காவிரிக் கடல்மண்டு பெருந்துறை
இறவொடு வந்து கோதையொடு பெயரும்
பெருங்கடல் ஓதம் போல
ஒன்றிற் கொள்ளாய் சென்றுதரு பொருட்கே."

(அகம் 123)

என வரும்,

மீட்டுவர வாய்ந்த வகையின் கண்ணும் என்பது - பிரிந்த தலைவன் மீட்டு வரவு வாய்ந்த வகையின்கண்ணும் என்றவாறு .

` வரவு ' என்பது கடைகுறைந்தது.

உதாரணம்

"தாழிருள் துமிய மின்னித் தண்ணென
வூழுறை இனிய சிதறி ஊழிற்
கடிப்பிடு 60 முரசின் முழங்கி இடித்திடித்துப்
பெய்யினி வாழியோ பெருவான் யாமே
செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு
இவளின் மேவின மாகிக் குவளைக்
குறுந்தாள் நாள்மலர் நாறும்
நறுமென் கூந்தல் மெல்லணை யேமே"

(குறுந். 270)

இது வந்து புகுந்த தலைவன் கூற்று.

அவ்வழிப் பெருகிய சிறப்பின்61 கண்ணும் என்பது - தலைவன் பிரிந்துழிப் பெருகிய சிறப்பினும் கூற்று நிகழும் என்றவாறு.

"கோடல் எதிர்முகைப் பசுவீ முல்லை
நாறிதழ்க் குவளையொ டிடைப்பட விரைஇ
ஐதுதொடை மாண்ட கோதை போல
நறிய நல்லோள் மேனி
முறியினும் வாயது முயங்குகம் இனியே62"

(குறுந். 62)

என வரும்.

பேரிசை யூர்திப் பாகர் பாங்கினும் என்பது - தானுற்றவின்பத்தினைப் பாகற்குக் கூறுதற்கண்ணும் என்றவாறு.

உதாரணம்

"மறத்தற் கரிதால் பாக பன்னாள்
வறத்தொடு பொருந்திய63 உலகுதொழிற் கொளீஇய
பழமழை64 பொழிந்த புதுநீர் அவல
நாநவில் பல்கிளை கறங்க நாவுடை65
மணியொலி கேளாள்66 வாணுதல் அதனால்
ஏகுமின் என்ற இளையர் வல்லே
இல்புக் கறியுந ராக67 மெல்லென
மண்ணாக் கூந்தல் மாசறக் கழீஇச்
சில்போது கொண்டு பல்குரல் அழுத்திய
அந்நிலை புகுதலின் மெய்வருத் துறாஅ68
அவிழ்பூ முடியினள்69கவைஇய
மடமா அரிவை மகிழ்ந்தயர் நிலையே."

(நற்றிணை.42)

என வரும்.

காமக் கிழத்தி மனையோ ளென்றிவ 70ரேமுறு கிளவி சொல்லிய வேதிரும் என்பது-காமக் கிழத்தியும் மனையாளும் என்று சொல்லு மிருவரும் பாதுகாவலாகக் கூறிய கூற்றி னெதிரும் தலைவன் கூற்று நிகழும் என்றவாறு.

இவ்விருவரும் இல்லுறை மகளிராதலின், தலைவன்மாட்டு நிகழுமவை இருவருக்கும் ஒக்கும் என்க.

அஃதாவது வழிவந்தவா றென்னை யெனவும் வருத்தமுற்றி ரெனவும் இந்நிகரன பல கூறுதல்.

உதாரணம்

"எரிகவர்ந் துண்ண என்றூழ் நீளிடை
அரிய வாயினும் எளிய அன்றே
அவ்வுறு நெஞ்சங் கவவுநனி விரும்பிக்
கடுமான் திண்டேர் கடைஇ
நெடுமா னோக்கிநின் உள்ளியாம் வரவே."

(ஐங்குறு.360)

என வரும்.

சென்ற தேஎத் துழப்பு நனிவிளக்கி யின்றிச் சென்ற தன்னிலை கிளப்பினும் என்பது-தான் சென்ற தேயத்து வருத்தத்தை மிகவும் விளக்கித் தலைவியை யொழித்துச் சென்ற தன்னிலை கிளப்பினும் கூற்று நிகழும் என்றவாறு.

உதாரணம்

"ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழிப்படர்ந்து
உள்ளியும் அறிதிரோ எம்மென யாழநின்
முள்ளெயிற்றுத் துவர்வாய் முறுவல் அழுங்க
நோய்முந் துறுத்து நொதுமல் மொழியல்நின்
ஆய்நலம் மறப்பேனோ71 மற்றே சேணிகந்து
ஒலிகழை பிசைந்த ஞெலிசொரி ஒண்பொறி
படுஞெமல் புதையப் பொத்தி நெடுநிலை
முளிபுல் மீமிசை வளிசுழற் றுறாஅக்72
காடுகவர் பெருந்தீ ஓடுவயின் ஓடலின்
அதர்கெடுத் தலறிய சாத்தொ டொராங்கு
மதர்புலி வெரீஇய மையல் வேழத்து
இனந்தலை மயங்கிய நனந்தலைப் பெருங்காட்டு
ஞான்றுதோன் றவிர்சுடர் மான்றாற்73 பட்டெனக்
கட்படர் ஓதி நிற்படர்ந் துள்ளி
அருஞ்செல வாற்றா ஆரிடை ஞெரேரெனப்
பரந்துபடு பாயல் நவ்வி பட்டென74
இலங்குவளை செறியா இகுத்த நோக்கமொடு
நிலங்கிளை நினைவினை நின்ற நிற்கண்டு
இன்னகை இனைய மாகவும் எம்வயின்
ஊடல் யாங்குவந் தன்றென யாழநின்
கோடேந்து புருவமொடு குவவுநுதல் நீவி
நறுங்கதுப் புளரிய நன்னர் அமையத்து
வறுங்கை காட்டிய வாயல் கனவின்
ஏற்றேக் கற்ற உலமரல்75
போற்றா யாகலின் புலத்தியால் எம்மே."

(அகம் . 39)

என வரும்.

அருந்தொழின் முடித்த செம்மற் காலை விருந்தொடு நல்லவை வேண்டற்கண்ணும் என்பது-அரிய வினையை முடித்து வந்த தலைமைக் காலத்து விருந்தினரோடு கூட நல்லவற்றைக் கிளத்தி விருப்பமுறுதற்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.

உதாரணம் வந்தவழிக் காண்க.

மாலை ஏந்திய பெண்டிரு மக்களுங் கேளி ரொழுக்கத்துப் புகற்சிக்கண்ணும் என்பது-தலைவனை எதிர்கொண்டு மங்கலமாக மாலையேந்தி நின்ற பெண்டிரும் மக்களும் கேளிரும் ஒழுகும் ஒழுக்கத்து விருப்பத்தின்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.

கேளிரும் என்னும் உம்மை எஞ்சி நின்றது. ஈண்டு ஒழுக்க மாவது-சொல்லாது பெயர்ந்தீர் என்றானும், இளமையும் காமமும் நோக்காது பெயர்ந்தீர் என்றானும் கூற இதற்குக் காரணம் என்னை எனத் தலைவன் வந்துழி அவர் நிகழ்த்தும் நிகழ்ச்சி.

உதாரணம்

உள்ளினென் அல்லனோ யானே உள்ளி
நினைந்தனென் அல்லனோ பெரிதே நினைந்து
மருண்டனென் அல்லனோ உலகத்துப் பண்பே
நீடிய மராத்த கோடுதோய் மலநிறை76
யிறைத்துணைச் சென்றற் றாங்கம்
மனைப்பெருங்77 காமம் மீண்டுகடைக் கொளவே"

(குறுந்.99)

என வரும்.

ஏனைய வாயிலோ ரெதிரோடு தொகைஇ என்பது-பெண்டிரு மல்லாத வாயில்களாயினார் எதிர் கூறும் கூற்றும் தலைவன் மாட்டு நிகழும் என்றவாறு.

இவை யெல்லாம் காமப்பொருளாகத் தோன்றா, அவர் செயல் பொருளாகத் தோன்றும் .

உதாரணம் வந்தவழிக் காண்க.

78 பண்ணமைப் பகுதிப் பதினொரு மூன்றும் எண்ணருஞ் சிறப்பிற் கிழவோன் மேன என்பது-செய்தலமைந்த பகுதியினையுடைய முப்பத்துமூன் றிடத்தினும் நிகழும் கூற்று மிக்க சிறப்பினையுடைய கிழவோன் மேலன என்றவாறு.

மிக்க சிறப்பினையுடைய கிழவோன் மேலன என்றமையால், மிகாத சிறப்பினையுடையார்மாட்டு இவையெல்லாம் ஒருங்கு நிகழ்தலில் என்று கொள்க. செயலமை பகுதி என்றதனான். இவ்விடங்களின் வரும் பொருள் வேறுபாடுகட்கும் இவையே இடமாகக் கொள்க.


1. நிலைஇயக்.
2. டளைஇயச்.
3. தொடுதற்.
4. அருளிய.
5. புதல்வர்ப்பயந்த புனிறு தேர்.
6. துணையணை புல்லிய புல்லாது
7. உயங்கவள்
8. புல்கென
9. குண்மையின்
(பாடம்) 10. பிரிவின் நீக்கிய
11. ஏனைவாயில் எதிரோடு தொகைஇயப்
12. விதவைப்
13. கற்பின்.
14. பயந்த
15. ஏயென
16. பேழை
17. வகையிறப்.
18. சிவப்பார்ந்த
19. கும்மே
20. யாயும்.
21. 'பிறர்பிறர்' என்றார் தேவர் மூவர் என்பது பற்றி, தன்னையன்றித்தெய்வம் தொழாதாளை இத்தன்மையோரைத் தொழல் வேண்டும்என்று தொழுது காட்டினான். குறிக்கொளுங்கூற்றல் உரைத்தலிற் குறிப்பினும் என்றார். உதாரணம் வந்துழிக் காண்க.(தொல். பொருள் 146.நச்சி)
22. வரிபெய்.
23. புனற்ற.
24. சுடர் நுதல்.
25. நோக்கி.
26. யாரையோவென.
27. என்மோ.
28. நுமருள்ள.
29. பிறப்போ.
30. என்றேமா.
31. படைமானகட்டிற்.
32. உள்ளுறை.
33. ஒன்றி.
34. புள்வளர்.
35. மணையும்.
36. புலத்திலேன்.
37. யாதினிற்பிரிகோ மடந்தை.
38. முன்னில்லா தொருசிறைப்போய் நின்று நீட்டித்துப் பிரிவினால் தலைவன் அஞ்சிய நோயின் கண்ணும் ; இது துனி .(தொல் . பொருள் . 146 . நச்சி)
39. நெடுநிலை யாஅத்துப்.
40. ஊண்பழித்.
41. மலையுழந்.
42. பிரியப்.
43. நினைமா.
44. தரீஇயர்.
45. எம் எவ்வங்களை இயர்.
46. நிலம்வரக் கொள்ளாக்.
47. செல்லல் நினைவுடன்.
48. எண்ணினிராயின்.
49. வினைபொலி.
50. உரிஞ்ச.
51. துள்ளிய.
52. படைக்கட்.
53. நல்லிழைப்.
54. உடன் கொண்டு போதல் முறைமை யன்றென்று அறியாமற் கூறலின் , மடம்பட என்றார்.

(தொல். பொருள், 144. நச்சி)

55. விழுமமாவன :- பிரியக்கருதியவன் பள்ளியிடத்துக் களவிற் கூறுவனவும் . போவேமோ தவிர்வேமோ என வருந்திக் கூறுவனவும் ; இவள் நலன் திரியும் என்றவும் பிரியுங்கொல் என்று ஐயுற்ற தலைவியை ஐயந்தீரக் கூறலும் , நெஞ்சிற்குச் சொல்லி அழுங்குதலும் பிறவுமாம்.

(தொல். பொருள் . 146 . நச்சி )


56. மருங்குல்.
57. வரை சார்.
58. சில்லிருங்.
59. அளித்தக உடையை.
60. கடிப்பிகு.
61. சிறப்பாவன பகைவென்று திறை முதலியன கோடலும் பொருள் முடித்தலும் துறைபோகிய ஒத்தும் பிறவுமாம்.

(தொல்.பொருள். 146. நச்சி.)


62. முயங்கற்கும் இனிதே.
63. வருந்திய.
64. மழைபெயல் வல்வர.
65. கறங்கு மாண்வினை.
66. கொள்ளாள்.
67. கறிபுணர்வாக.
68. துராஅய்.
69. வீழ்பூ முடியாள்.
70. வருத்தமுற்ற கிளவியின் எதிரிடத்தும் கூற்று நிகழ்த்தும். காமக்கிழத்தி விரைந்து கூறும் என்றற்கு அவளை முற்கூறினார்.

(தொல்.பொருள்.146.நச்சி)


71. மறப்பனோ.
72. றுறாவிற்.
73. மான்றாட்.
74. யற்றென.
75. உலம்வரல்.
76. மரத்தகோடு தோய்மலிர்நிறை.
77. றா அங்கனைப்பெருங்.
78. பண்ணிக்கொள்ளும் பகுதியாவன , யாம் மறைந்து சென்று இவனைக் கண்ணைப் புதைத்தால் தலைநின்றொழுகும் பரத்தையர் பெயர் கூறுவன் என்று உட்கொண்டு காமக் கிழத்தியாதல் தலைவியாதல் சென்று கண்புதைத்துழித் தலைவன் கூறுவனவும் பள்ளியிடத்து வந்திருந்து கூறுவனவும் பிரிந்த காலத்து இவளை மறந்தவாறு என் என்ற தோழிக்குக் கூறுவனவும் , ஊடற்குக் காரணம் என் என்று தோழி வினாய வழிக் கூறுவனவும் , பிறவுமாம் .[ தொல் . பொருள் . 146 . நச்சி]