கற்பியல்

145அவனறி வாற்ற அறியும் ஆகலின்
ஏற்றற் கண்ணும் நிறுத்தற் கண்ணும்
உரிமை கொடுத்த கிழவோன் பாங்கின்
பெருமையில் திரியா வன்பின் கண்ணும்
கிழவனை மகடூஉப் புலம்புபெரி தாகலின்
அலமரல் பெருகிய காமத்து மிகுதியும்
இன்பமும் இடும்பையும் ஆகிய இடத்துங்
கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி
நயந்த கிழவனை நெஞ்சு புண்ணுறீஇ
நளியி னீக்கிய விளிவரு நிலையும்
புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு
அகன்ற கிழவனைப் புலம்புநனி காட்டி
இயன்ற நெஞ்சந் தலைப்பெயர்த் தருக்கி
எதிர்பெய்து மறுத்த ஈரத்து மருங்கினுந்
தங்கிய ஒழுக்கத்துக் கிழவனை வணங்கி
எங்கையர்க் குரையென இரத்தற் கண்ணுஞ்
செல்லாக் காலைச் செல்கென விடுத்தலும்
காமக் கிழத்தி தன்மகத் தழீஇ
ஏமுறு விளையாட் டிறுதிக் கண்ணுஞ்
சிறந்த செய்கை அவ்வழித் தோன்றி
அறம்புரி நெஞ்சமொடு1 தன்வர வறியாமைப்
புறஞ்செய்து பெயர்த்தல் வேண்டிடத் தானுந்
தந்தையர் ஒப்பர் மக்களென் பதனால்
அந்தமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கினுங்2
கொடியோர் கொடுமை சுடுமென ஒடியாது
நல்லிசை நயந்தோர் சொல்லோடு தொகைஇப்
பகுதியின் நீங்கிய தகுதிக் கண்ணுங்
கொடுமை ஒழுக்கங் கோடல் வேண்டி
அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக்
காதல் எங்கையர் காணின் நன்றென
மாதர் சான்ற வகையின் கண்ணுந்
தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை
மாயப் பரத்தை உள்ளிய வழியுந்
தன்வயின் சிறப்பினு3 மவன்வயின் பிரிப்பினும்
இன்னாத் தொல்சூள் எடுத்தற் கண்ணுங்
காமக் கிழத்தி4 நலம்பா ராட்டிய
தீமையின் முடிக்கும் பொருளின் கண்ணும்
கொடுமை யொழுக்கத்துத்5 தோழிக் குரியவை
வடுவறு சிறப்பிற் கற்பில் திரியாமைக்
காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும்
ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்
வாயிலின் வரூஉம் வகையோடு தொகைஇக்
கிழவோள் செப்பல் கிழவ தென்ப.

என்-எனின், கற்பின்கண் தலைவி கூற்று நிகழும் இடம் தொகுத்துணர்த்துதல் நுதலிற்று.

ஏற்றல் முதலாக வாயிலின் வரூஉம் வகையோடு கூடத் தலைவி கூறல் உரியதாகும் என்றவாறு.

அவனறி வாற்ற அறிவு மாகலின் ஏற்றற் கண்ணும்6 என்பது - தலைவனது நினைவைத் தலைவி மிக அறியுமாகலின் அவளை யுயிர்த்துக் கூறுதற்கண்ணும் தலைவி கூற்று நிகழும்.

உதாரணம்

"நின்ற சொல்லர் நீடுதோன் றினியர்
என்றும் என்தோள் பிரிபறி7 யலரே
தாமரைத் தண்தா தூதி மீமிசைச்
சாந்தின் தொடுத்த8 தீந்தேன் போலப்
புரைய மன்ற புரையோர் கேண்மை
நீரின் றமையா உலகம் போலத்
தம்மின் றமையா நந்நயந் தருளி
நறுநுதல் பசத்த லஞ்சிச்
சிறுமை உறுபவோ9 செய்பறி யலரே."

(நற்றிணை. 1)
என வரும்.

நிறுத்தற் கண்ணும் என்பது - தலைவனது பண்பினைத் தோழி கூறியவாற்றால் தான் நிறுத்துக் கூறுதற்கண்ணும் என்றவாறு.

உதாரணம்

"முடவுமுதிர்10 பலவின் குடமருள் பெரும்பழம்
பல்கினைத் தலைவன் கல்லாக் கடுவன்
பாடிமி ழருவிப் பாறை மருங்கின்
ஆடுமயில் முன்ன11 தாகக் கோடியர்
விழவுகொள் மூதூர் விறலி12 பின்றை
முழவன்13 போல அகப்படத் தழீஇ
இன்துணைப் பையிருங் குன்ற நாடன்
குடியன் குடையன் கூடுநர்ப் பிரியலன்
கெடுநா மொழியலன்14 அன்பினன் எனநீ
வல்ல கூறி வாய்வதிற் புணர்த்தோய்
நல்லை காணில் காதலந் தோழி
கடும்பரிப் புரவி நெடுந்தேர் அஞ்சி
நல்லிசை நிறுத்த நயவரும் பனுவல்
தொல்லிசை நிறீஇய உரைசால் பாண்மகன்
எண்ணுமுறை நிறுத்த பண்ணின் உள்ளும்
புதுவது புனைந்த15 திறத்தினும்
வதுவை நாளினும் இனியனால் எமக்கே."

(அகம். 352)
என வரும்.

உரிமை கொடுத்த கிழவோன் பாங்கின் பெருமையில் திரியா அன்பின் கண்ணும் என்பது - தலைவிக்கு உரிமையைக் கொடுத்த கிழவோன்மாட்டுப் பெருமையிற் றிரியா அன்பின் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.

உதாரணம்

"நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரற்
கருங்கோற் குறிஞ்சிப்பூக் கொண்டு
பெருந்தே னிழைக்கும் நாடனொடு நட்பே".

(குறுந். 3)
என வரும்.

கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின் அலமரல் பெருகிய காமத்து மிகுதியும் என்பது - தலைவனைத் தலைவி நீங்கித் தனிமையுறுதல் பெரிதாகலின் ஆண்டு அலமரல் பெருகிய காமத்தின் மிகுதியின்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.

உதாரணம்

"நீர்நீ டாடிற் கண்ணும் சிவக்கும்
ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்
தணந்தனி ராயின்16 எம் இல்லுய்த்துக் கொடுமோ
அந்தண் பொய்கை எந்தை எம்மூர்க்
கடும்பாம்பு வழங்குந் தெருவில்
நடுங்கஞர் எவ்வங் களைந்த எம்மே".

(குறுந். 354)
எனவும்,

"என்கைக் கொண்டு தன்கண் ஒற்றியுந்
தன்கைக் கொண்டென் நன்னுதல் நீவியும்
அன்னை போல இனிய கூறியும்
கள்வர் போலக் கொடியன் மாதோ
மணியென இழிதரும் அருவிப் பொன்னென
வேங்கை தாய17 ஓங்குமலை அடுக்கத்து
ஆடுகழை நிவந்த பைங்கண் மூங்கில்
ஓடுமழை கிழிக்குஞ் சென்னிக்18
கோடுயர் பிறங்கல் மலைகிழ வோனே,

(நற்றிணை - 28)
எனவும்,

"மனைநடு வயலை வேழம் சுற்றும்
துறைகேழ் ஊரன் கொடுமை நாணி
நல்லன் என்றும் யாமே
அல்ல னென்னும்என் தடமென் தோளே."

(ஐங்குறு - 11)
எனவும்,

"வீழுநர் வீழப் படுவார்க்19 கமையுமே
வாழுநம் என்னுஞ் செருக்கு."

(குறள். 1193)
எனவும் வரும்.

இன்பமும் இடும்பையும் ஆகிய இடத்துக்கு என்பது - தலைவிக்கு இன்பமும் துன்பமும் ஒருங்கு நிகழும் வழியும் கூற்று நிகழும் என்றவாறு.

உதாரணம்

"இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால்20 புணர்வு."

(குறள்- 1152)
எனவும்,

"குக்கூ என்றது கோழி அதனெதிர்
துட்கென் றற்றென் தூஉ21 நெஞ்சம்
தோள்தோய் காதலர்ப் பிரிக்கும்
வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே."

(குறுந்-157)
எனவும் வரும்.

22கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி நயந்த கிழவனை நெஞ்சு புண்ணுறீஇ நளியின் நீக்கிய இளிவரு நிலையும் என்பது - புதல்வன் றோன்றிய நெய்யணி நயந்த கிழவனை நெஞ்சுபுண்ணுறுமாறு பண்ணிச் செறிவு நீக்கிய இளிவந்த நிலையின்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.

இளிவந்த நிலையாவது தன்னை அவமதித்தான் என்னுங் குறிப்பு.

உதாரணம்

"கரும்புநடு பாத்திக் கதிர்த்த23 ஆம்பல்
சுரம்புபசி களையும் பெரும்புனல் ஊர
புதல்வனை யீன்றவெம் மேனி
முயங்கல்மோ தெய்யநின்24 மார்புசிதைப் பதுவே."

(ஐங்குறு. 65)
என வரும்.

புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு அகன்ற கிழவனைப் புலம்பு நனிகாட்டி இயன்ற நெஞ்சந் தலைப்பெயர்த் தருக்கி எதிர்பெய்து மறுத்த ஈரத்து மருங்கினும் என்பது - விருப்பமுடைய உள்ளத்தோடே புகுவோரது நலத்தின் பொருட்டு அகன்ற கிழவனைத் தனது தனிமை மிகவுங் காட்டி அவன்மாட்டுச் செல்கின்ற நெஞ்சத்தை மீட்டு அருகப்பண்ணி அவன் காதலித்தாளை எதிர்பெய்துகொண்டு புணர்ச்சியை மறுத்த ஈரத்தின் கண்ணும் கூற்று நிகழும்.

ஈரமாவது முற்றும் மறாமை.

"கடல்கண் டன்ன கண்ணகன் பரப்பின்
நிலம்பக வீழ்ந்த வேர்முதிர் கிழங்கின்
கழைகண் டன்ன தூம்புடைத் திரள்கால்
களிற்றுச் செவியன்ன பாசடை மருங்கில்
கழுநிவந் தன்ன கொழுமுகை இடைஇடை
முறுவல் முகத்திற் பன்மலர் தயங்கப்
பூத்த தாமரைப் புள்ளிமிழ் பழனத்து
வேப்புநனை அன்ன நெடுங்கண் நீர்ஞெண்டு
இரைதேர் வெண்குருகு அஞ்சி அயலது
ஒலித்த பகன்றை இருஞ்சேற் றள்ளல்
திதலையின் வரிப்ப ஓடி விரைந்துதன்25
ஈர்மலி மண்ணளைச் செறியும் ஊர
மனைநகு வயலை மரனிவர்26 கொழுங்கொடி
அரிமலர் ஆம்பலோ டார்தழை தைஇ
விழவாடு மகளிரொடு தழுவணிப் பொலிந்து
மலரேர் உண்கண் மாணிழை முன்கைக்
குறுந்தொடி துடக்கிய நெடுந்தொடர் விடுத்தது
உடன்றனள் போலுநின் காதலி எம்போல்
புல்உளைக் குடுமிப் புதல்வற்பயந்து
நெல்லுடை நெடுநகர் நின்னின் றுறைய
என்ன கடத்தளோ மற்றே தன்முகத்து
எழுதெழில் சிதைய அழுதனள் ஏங்கி
வடித்தென உறுத்த தித்தப் பல்லூழ்
நொடித் தெனச் சிவந்த மெல்விரல் திருகுபு
கூர்நுனை மழுகிய எயிற்றள்
ஊர்முழுது நுவலுநிற் காணிய சென்மே."

(அகம். 176)
என வரும்.

தங்கிய ஒழுக்கத்துக் கிழவனை வணங்கி எங்கையர்க்கு உரையென இரத்தற்கண்ணும் என்பது - பிறள்மாட்டுத் தங்கிய ஒழுக்கத்துக் கிழவனைத் தாழ்ந்து எங்கையர்க்கு உரையென வேண்டிக் கோடற்கண்ணுங் கூற்று நிகழும் என்றவாறு.

`அகன்றுறை' என்னுங் கலியுள்,

"நோதக்காய் எனநின்னை நொந்தீவார் இல்வழித்
தீதிலேன் யானெனத் தேற்றிய வருமதின்
ஞெகிழ்தொடி இளையவர் இடைமுலைத்27 தாதுசேர்ந்து
இதழ்வனப் பிழந்தநின் கண்ணிவந் துரையாக்கால்
..........................................
....................................................
மண்டுநீர் ஆரா மலிகடல் போதுநின்28
தண்டாப் பரத்தை தலைக்கொள நாளும்
புலத்தகைப் பெண்டிரைத் தேற்றிமற் றியாமெனில்29
தோலாமோ நின் பொய் மருண்டு."

(கலித். 73)
எனக் கூறுதலால் தான் தாழ்ந்தவாறும், எங்கையர்க்கு உரை இற்றெனக் கூறியவாறும் காண்க.

"நினக்கே அன்றஃ தெமக்குமார் இனிதே
நின்மார்பு நயந்த நன்னுதல் அரிவை
வேண்டிய குறிப்பினை ஆகி
ஈண்டுநீ யருளாது ஆண்டுறை தல்லே."

(ஐங்குறு. 49)
இதுவும் அது.

செல்லாக் காலைச் செல்கென விடுத்தலும் என்பது - தலைவன் போகாத காலத்துப் போவெனக் கூறுதலும் என்றவாறு.

உதாரணம்

"பூங்கண் புதல்வனைப் பொய்பல பாராட்டி
நீங்காய் இகவாய் நெடுங்கடை நில்லாதி
ஆங்கே அவர்வயிற் சென்றீ30 அணிசிதைப்பான்
ஈங்கெம் புதல்வனைத் தந்து."

(கலித். 79)
என வரும்.

காமக் கிழத்தி தன்மகத் தழீஇ ஏமுறு31 விளையாட்டு இறுதிக் கண்ணும் என்பது - காமக் கிழத்தி தலைவி மகவைத் தழீஇ ஏமுற்ற விளையாட்டின் இறுதிக்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.

உதாரணம்

"நாயுடை முதுநீர்க் கலித்த தாமரைத்
தாதின் அல்லி அயலிதழ்32 புரையும்
மாசில் அங்கை33 மணிமருள் அவ்வாய்
நாவொடு நவிலா நகைபுடு தீஞ்சொல்
யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனைத்
தேர்வழங்கு தெருவில் தமியோற் கண்டே
கூரெயிற் றரிவை குறுகினள் யாவருங்
காணுநர் இன்மையிற் செத்தனள் பேணிப்34
பொலங்கலஞ் சுமந்த பூண்தாங்கு இளமுலை
வருக மாளஎன் உயிரெனப் பெரிதுவந்து
கொண்டனள் நின்றோட் கண்டுநிலைச் செல்லேன்
மாசில் குறுமக ளெவன்பே துற்றனை
நீயுந் தாயை இவற்கென யான்தன்
கரைய வந்து விரைவனென்35 கவைஇக்
களவுடம் படுநரிற் கவிழ்ந்து நிலங் கிளையா
நாணி நின்றோள் நிலைகண் டியானும்
பேணினென்36 அல்லனோ மகிழ்ந வானத்து
அணங்கருங் கடவுள் அன்னோன் நின்
மகன்தா யாதல் புரைவதாங் கெனவே."37

(அகம். 16)
என வரும்.

சிறந்த செய்கை யவ்வழித் தோன்றி யறம்புரி நெஞ்சமொடு தன் வரவறியாமை புறஞ்செய்து பெயர்த்தல் வேண்டிடத் தானும் என்பது - சிறந்த செய்கையினையுடைய அவ்விடத்துத் தலைவன் தோன்றி அறம்புரி நெஞ்சத்தோடே தனது வரவைத் தலைவி யறியாளாக நின்று தலைவியைப் புறஞ்செய்து அவள் மாட்டுளதாகிய ஊடலைப் பெயர்த்தல் வேண்டின இடத்தும் தலைவிமாட்டுக் கூற்று நிகழும் என்றவாறு.

அவ்வழி என்றது - தலைவியுங் காமக் கிழத்தியைப் போலத் தன் மகனைக்கொண்டு விளையாடிய வழியும் என்றவாறு.

`மையற விளங்கிய' என்னும் மருதக் கலியுள்,

"பெரும விருந்தொடு கைதூவா வெம்மையும் உள்ளாய்
பெருந்தெருவில் கொண்டாடி ஞாயர் பயிற்றத்
திருந்துபு நீகற்ற சொற்கள் யாம்கேட்ப38
மருந்தோவா நெஞ்சிற் கமழ்தமயின் றற்றாப்39
பெருந்தகாய் கூறு சில."


எனவும்,

"எல்லிழாய்
சேய்நின்று நாங்கொணர்ந்த பாணன் சிதைந்தாங்கே
வாயோடி ஏனாதிப் பாடியும் என்றற்றாம்40
நோய்நாந் தணிக்கும் மருந்தெனப் பாராட்ட
ஓவா தடுத்தடுத்தத் தத்தாஎன் பான்41 மாண
வேய்மென்தோள் வேய்த்திறம் சேர்த்தலும் மற்றிவன்
வாயுள்ளிப் போகான் அரோ."

எனவும்,

"உள்ளி உழையே ஒருங்கு படைவிடக்
கள்வர் படர்தந் ததுபோலத் தாம்எம்மை
எள்ளுமார் வந்தாரே ஈங்கு."

(கலித். 81)
எனவும், இவ்வாறு வரும்.

தந்தையர் ஒப்பர் மக்கள் என்பதனால், அந்தமில் சிறப்பின் மகப்பழித்து42 நெருங்கினும் என்பது - தந்தையரை மக்கள் ஒப்பர் என்பதனால் அந்தமில்லாத சிறப்பினையுடைய மக்களைப் பழித்தற் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.

`மைபடு சென்னி மழகளிற் றோடை' என்னும் மருதக்கலியுள்,

"வீதல் அறியா விழுப்பொருள் நச்சியார்க்கு
ஈதன்43 மாட்டொத்தி பெருமற் றொவ்வாதி
மாதர்மெல் நோக்கின்44 மகளிரை நுந்தைபோல்
நோய்கூர நோக்காய் விடல்."

(கலித். 86)
என வரும்.

கொடியோர் கொடுமை சுடும் என ஒடியாது நல்லிசை நயந்தோர் சொல்லொடு தொகைஇப் பகுதியின் நீங்கிய தகுதிக் கண்ணும் என்பது - கொடியாரது கொடுமை சுடாநின்றதெனப் புணர்ச்சியை ஒடியாது புகழை விரும்பினோர் சொல்லோடே ஒருப்பட்டு வேறுபடுதலின் நீங்கிய தகுதிக்கண்ணும் என்றவாறு.

அஃதாவது, அக்காலத்துத் தக்கறிதல், புகழை விரும்பினோர் சொல்லும் சொல்லாவது, காமம் விரும்பும் பரத்தையரைப் போலாது அறத்தை விரும்புதல்.

உதாரணம்

`யாரிவனெங் கூந்தல்' என்னும் மருதக் கலியுள்,

"மாண மறந்துள்ளா நாணிலிக் கிப்போர்45
புறஞ்சாய்ந்து காண்டைப்பாய்46 நெஞ்சே உறழ்ந்திவனைப்
பொய்ப்ப விடேஎ மென47 நெருங்கில் தப்பினேன்
என்றடிசேர்தலு முண்டு"

(கலித். 89)
என்பது ஆற்றாமை வாயிலாகப் பகுதியி னீங்கிய தகுதி.

பாணன் முதலானோர்க்கு வாயில் நேர்ந்தது வந்தவழிக் காண்க.

"48கொடுமை யொழுக்கங் கோடல் வேண்டி யடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக் காத லெங்கையர் காணின் நன்றென மாதர் சான்ற வகையின்கண்ணும் என்பது - தலைவனது கொடுமை யொழுக்கத்தினைத் தலைவியே பொறுக்கவேண்டி அவளடிமேல் வீழ்ந்தவனை நெருங்கி நின்மாட்டுக் காதலையுடைய எங்கையர் காணின் இப்பணிதல் நன்றாமெனக் காதலமைந்த வகையின் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.

`நில்லாங்கு நில்லா' என்னும் மருதக் கலியுள்,

"நல்லாய் பொய்யெல்லாம் ஏற்றித் தவறு தலைப்பெய்து
கையொடு கண்டாய் பிழைத்தேன் அருளினி ;
அருளுகம் யாம்யாரே மெல்லா தெருள
அளித்துநீ பண்ணிய பூழெல்லா மின்னும்
விளித்துநின் பாண்ணோ டாடி யளித்தி49
விடலைநீ நீத்தலின்50 நோய்பெரி தேய்க்கும்
நடலைப்பட் டெல்லா நின்பூழ்."

(கலித். 95)

இதனுள் `கையொடு கண்டை பிழைத்தேனருள்' என அடிமேல் வீழ்ந்தவாறும், `அருளுகம் யாம்யாரேம்' எனக் காதலமைந்தவாறும் `நீ நீக்கலின் நின் பூழெல்லாம் நடலைப்பட்டு நோய்பெரிதேய்க்கும்' அவற்றை யின்னும் விளித்து நின் பாணனோடாடி யளித்துவிடும் எனவும், இப் பணிதல் நின் பெண்டிர்க்கு நன்றாகுமே எனவும் கூறியவாறு காண்க . ஈண்டுப் பூழ் என்றது குறிப்பினாற் பரத்தையரை.

தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை மாயப் பரத்தை உள்ளியவழியும் என்பது - தாயரைக் கிட்டிய நல்ல அணியையுடைய புதல்வனை மாயப் பரத்தை குறித்த வழியுங் கூற்று நிகழும் என்றவாறு.

புதல்வனைப் பரத்தைமை குறித்தலாவது, தலைவன் புறப் பெண்டிர் மாட்டுப் போகியவழி வெகுளுமாறு போலப் புதல்வனையும் அவரிடைச் சென்றவழி வெகுளல் . கண்ணிய நல்லணி யெனவே அவர் கொடுத்த நல்லணி யென்பது பெறுதும் . பரத்தைமை உள்ளாதவழி இவன் மாட்டுக் குறிப்பு நிகழாதாம். மாயமென்பது பரத்தைக்குப் பண்பாகி இனஞ் சுட்டாது வந்தது.

உதாரணம்

"உறுவளி தூக்கும் உயர்சினை மாவின்
நறுவடி யாரிற் றவைபோ லழியக்
கரந்தியான் அரக்கவுங் கைநில்லா வீங்கிச்
சுரந்தென் மென்முலைப் பால்பழு தாகநீ
நல்வாயிற் போத்தந்த பொழுதினான்51 எல்லாக்
கடவுட் கடிநகர் தோறும் இவனை
வலங்கொளீஇ வாவெனச் சென்றாய் விலங்கினை
ஈரமி லாத இவன்தந்தை பெண்டிருள்
யாரில் தவிர்ந்தனை கூறு;
நீருள் , அடைமறை யாயிதழ்ப் போதுபோற் கொண்ட
குடைநிழல் தோன்றுநின் செம்மலைக் காணூஉ
இவன்மன்ற யான்நோவ உள்ளங்கொண் டுள்ளா
மகனல்லான் பெற்ற மகனென் றகநகர்
வாயில் வரை இறந்து போத்தந்து52 தாயர்
தெருவில் தவிர்ப்பத் தவிர்ந்தனன் மற்றவர்
தத்தம் கலங்களுட் கையுறை என்றிவர்க்கு
ஒத்தவை ஆராய்ந்53 தணிந்தார் ; பிறன் பெண்டிர்,
ஈத்தவை கொள்வானாம்54 இஃதொத்தன் சீத்தை
செறுதக்கான் மன்ற பெரிது,
சிறுபட்டி, ஏதிலார் கைஎம்மை எள்ளுபு நீ தொட்ட
மோதிரம் யாவோயாங் காண்கு ;
அவற்றுள் , நறாஇதழ் கண்டன்ன செவ்விரற் கேற்பச்
சுறாவே றெழுதிய மோதிரம் தொட்டாள்
குறியறிந்தேன் காமன் கொடியெழுதி என்றுஞ்
செறியாப் பரத்தை இவன் தந்தை மார்பிற்
பொறியொற்றிக் கொண்டாள்வல் என்பது தன்னை
அறீஇய செய்த வினை ;
அன்னையோ , இஃதொன்று ;
முந்தை55 கண்டும் எழுகல்லா தென்முன்னர்
வெந்தபுண் வேலெறிந் தற்றா56 இஃதொன்று
தந்தை இறைத்தொடி மற்றவன் தன்கைக்கண்
தந்தாரியார் எல்லா இது ;
என்னெத்துக் காண்க பிறரும்57 இவற்கென்னும்
தன்னலம் பாடுவி தந்தாளா நின்னை
இதுதொடு கென்றவர் யார் ;
அஞ்சாதி, நீயுந் தவறிலை நின்கை இதுதந்த
பூவெழில் உண்கண் அவளுந் தவறிலள்
வேனிற் புனலன்ன நுந்தையை நோவார்யார்
மேனின்றும் எள்ளி இதுஇவன் கைத்தந்தாள்
தானியாரோ என்று வினவிய நோய்ப்பாலேன்
யானே தவறுடை யேன்."

(கலித். 84)
என வரும்,

58தன்வயிற் சிறப்பினும் அவன் வயிற் பிரிப்பினும் இன்னாத் தொல்சூள் எடுத்தற்கண்ணும் என்பது - தன்மாட்டு நின்ற மிகுதியானும் அவன்மாட்டு நின்ற வேறுபாட்டானும் இன்னாத பழைய சூளுறவைத் தலைவி யெடுத்தவழியும் கூற்று நிகழும் என்றவாறு.

தலைமகள் மாட்டு மிகுதியாதோ வெனின்,

"மனைவி உயர்வுங் கிழவோன் பணிவும்
நினையுங் காலைப் புலவியுள் உரிய."

(பொருளியல். 32)
என்றாராகலான், அக்காலத்து மிகுதியுளதாம்.

"தேர்மயங்கி வந்த தெரிகோதை அந்நல்லார்
தார்மயங்கி வந்த தவறாஞ்சிப் போர்மயங்கி
59நீயுறும் பொய்ச்சூள் அணங்காகின் மற்றினி
யார்மேல் விளியுமோ கூறு."

(கலித். 89)
என வரும்,

காமக் கிழத்தி நலம் பாராட்டிய தீமையின் முடிக்கும் பொருளின்கண்ணும் என்பது - காமக் கிழத்தி நிலத்தினைப் பாராட்டிய தீமையின் முடிக்கும் பொருளின்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.

நலம் பாராட்டுவாள் தலைவி, அவள் பாராட்டுதல் தீமை பற்றி வருதலான், அதனாற் சொல்லிமுடிப்பது பிறபொருளாயிற்று.

உதாரணம்

"கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
ஒள்ளிழை உயர்மணல் வீழ்ந்தென
வெள்ளாங் குருகை வினவு வோளே."

(ஐங்குறு. 122)

இதனான், அவள் மிக்க இளமைகூறித் தலைவனைப் பழித்தாளாம்; ஒருமுகத்தாற் புலந்தவாறு. இன்னுந் தலைமகள் நலம் பாராட்டிய வழிக் கூறவும் பெறும்.

"அணிற்பல் அன்ன கொங்குமுதிர் முண்டகத்து
மணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்ப
இம்மை மாறி மறுமை யாயினும்
நீயா கியர்எம் கணவனை
யான் ஆகியர்நின் நெஞ்சுநேர் பவளே."

(குறுந். 49)
என வரும்.

கொடுமை ஒழுக்கத்துத் தோழிக்குரியவை வருவது சிறப்பின் திரியாமைக் காய்தலும் உவத்தலும் பெட்டலும் ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும் என்பது - தலைவி கொடுமையொழுக் கத்துத் தோழிக்குக் கூறுதற் குரியவை குற்றமற்ற சிறப்பினையுடைய கற்பின்கண் திரியாது தலைவனைக் காய்தலும் உவத்தலும் நீக்கி நிறுத்தலும் பேணிக்கோடலும் அவ்விடத்து வரும் பலவாய் வேறுபட்டு வரு நிலையினும் தலைவி கூற்று நிகழும் என்றவாறு.

தோழிக்குரியவை என்றதனால் தோழிக்குக் கூறத்தகா தனவும் உள என்று கொள்க.

உதாரணம்

"நன்னலந் தொலைய நலமிகச் சாஅய்
இன்னுயிர் கழியினும் உரையல் அவர்நமக்
கன்னையும் அத்தனும் அல்லரோ தோழி
60புல்லிய தெவனோ அன்பிலங் கடையே."

(குறுந். 93)
இது காய்தல் பற்றி வந்தது.

"நாமவர் திருந்தெயி றுண்ணவும் அவர்நம
தேந்துமுலை யாகத்துச் சாந்துகண் படுப்பவுங்
கண்டுசுடு பரத்தையின் வந்தோற் கண்டும்
ஊடுதல் பெருந்திரு உறுகெனப்
பீடுபெறல் அருமையின் முயங்கி யேனே."

எனவும்,

"காணுங்கால் காணேன் தவறாய காணாக்காற்
காணேன் தவறல் லவை."

(குறள். 1286)
எனவும் இவை உவத்தல் பற்றி வந்தன.

"அடும்பவிழ் அணிமலர் சிதைஇமீன் அருந்துந்
தடந்தாள் நாரை யிருக்கும் எக்கர்த்
தண்ணந் துறைவற் றொடுத்து நன்னலங் கொள்வாம்
இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டக்
கொடுத்தவை தாஎனக் கூறலின்
இன்னா தோநம் மன்னுயிர் இழவே."

இது பிரித்தல் பற்றி வந்தது.

"நீரார்61 செறுவில் நெய்தலொடு நீடிய
நேரிதழ் ஆம்பல் நிரையிதழ் கொண்மார்
சீரார் சேயிழை ஒலிப்ப ஓடும்
ஓரைமகளிர் ஓதை வெரீஇ62 யெழுந்து
ஆர லார்கை அஞ்சிறைத் தொழுதி
உயர்ந்த பொங்கர் உயர்மரம் ஏறி
அமர்க்கண் மகளிர் அலப்பிய அந்நோய்
தமர்க்குரைப் பனபோற் பல்குரல் பயிற்றும்
உயர்ந்த போரின்63 ஒலிநல் லூரன்
புதுவோர்ப் புணர்தல் வெய்ய னாயின்
வதுவை நாளால் வைகலும் அஃதியான்
நோவேன் தோழி நோவாய் நீயென
எற்பார்த் துறுவோய் கேளினித் தெற்றென;
எல்லினை வருதி எவன்குறித் தனையெனச்
சொல்லா திருப்பேன் ஆயின் ஒல்லென
விரிஉளைக் கலிமான் தேரொடு வந்த
விருந்தெதிர் கோடலின் மறப்பல் என்றும்;
வாடிய பூவொடு வாரல்எம் மனையென
ஊடி யிருப்பே னாயின் நீடா
அச்சா றாகஉணரிய64 வருபவன்
பொய்ச்சூள் அஞ்சிப் புலவேன் ஆகுவல்;
பகலாண் டல்கினை பரத்த என்றியான்65
இகலி இருப்பே னாயின் தான்தன்
முதல்வன் பெரும்பெயர் முறையுளிப் பெற்ற
புதல்வற் புல்லிப் பொய்த்துயில் துஞ்சும்
ஆங்க;
விருந்தெதிர் கொள்ளவும் பொய்ச்சூள் அஞ்சவும்
அரும்பெறற் புதல்வனை முயங்கக் காணவும்
ஆங்கவிந்66 தொழியும்என் புலவி தாங்கா
தவ்வவ் விடத்தான் அவையவை காணப்
பூங்கண் மகளிர் புனைநலஞ் சிதைக்கும்
மாய மகிழ்நன்67 பரத்தைமை
நோவேன் தோழி கடன்நமக் கெனவே."

(கலித். 75)
இது பெட்பின்கண் வந்தது.

"நகையா கின்றே தோழி நெருநல்
மணிகண் டன்ன துணிகயந் துளங்க
இரும்பியன் றன்ன கருங்கோட் டெருமை
ஆம்பல் மெல்லடை கிழியக் குவளைக்
கூம்புவிடு பன்மலர் மாந்திக் கரைய
காஞ்சி நுண்டா தீர்ம்புறத் துறைப்ப68
மெல்கிடு கவுள அல்குநிலை புகுதரும்
தண்துறை யூரன் தண்டார் அகலம்
வதுவை நாளணிப் புதுவோர்ப் புணரிய
பரிவொடு வரூஉம் பாணன் தெருவில்
புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி அழிபட்69
டெம்மனை புகுதந் தோனே அதுகண்டு
மெய்ம்மலி உவகை மறையினென் எதிர்சென்
றிம்மனை யன்றஃ தும்மனை என்ற
என்னுந் தன்னும் நோக்கி
மம்மர் நெஞ்சினன் தொழுது70நின் றதுவே."

(அகம். 56)
இது மேற்கூறியவாற்றா னன்றிப் பிறவாற்றான் வந்தது.

"ஒலிபுனல் ஊரனை ஒருதலை யாக
வலிநமக் காவது வலியென் றொழியப்
பந்தர் மாட்டிய பரூஉச்சுடர் விளக்கத்துக்
கந்த முனித்தலைத் தும்பி ஆர்ப்பக்
காலை கொட்டிய தவர்தோற் சிறுபறை
மாலை யாமத்து மதிதர விடாது
பூண்டுகிடந்து வளரும் பூங்கட் புதல்வனைக்
காண்டலுங் காணான்தன் கடிமனை யானே."என வரும்.

71வாயிலின் வரூஉம் வகையொடு தொகைஇக் கிழவோன் செப்பல் கிழவதென்ப என்பது - வாயில்கள் மாட்டு வரூஉங் கூற்றுவகை யுளப்படத் தலைவி கூற்று நிகழும் என்றவாறு.

வாயில்களாவார்:- பார்ப்பார், பாங்கன், தோழி, செவிலி, பாணன், விறலி, இளையர், விருந்தினர், கூத்தர், அறிவர், கண்டோர்.

இவருள் தோழி வாயிலாதல் மேற்கூறுதலின் ஒழிந்த வாயில்கள் ஈண்டுக் கொள்ளப்படும்.

"அன்னாய் இவனோர் இளமா ணாக்கன்
தன்னூர் மன்றத் தென்னன் கொல்லோ
இரந்தூண் நிரம்பா மேனியோடு
விருந்தின் ஊரும் பெருஞ்செம் மலனே."

(குறுந். 33)
இது பாணன் வாயிலாக வந்துழிக் கூறியது.

"நீகண் டனையோ கண்டார்க் கேட்டனையோ
ஒன்று தெளிய நசையின மொழிமோ
வெண்கோட் டியானை சோணை படியும்
பொன்மலி பாடினீ பெறீஇயர்
யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே."

(குறுந். 75)
இது வருகின்றான் என்ற உழையர்க்குக் கூறியது:

"ஆடியல் விழவின் அழுங்கல் மூதூர்
உடையோர் பான்மையிற்72 பெருங்கை தூவா
வறனில் புலத்தி யெல்லித்73 தோய்ந்த
புகாப்புகர் கொண்ட புன்பூங்74 கலிங்கமொடு
வாடா மாலை துயல்வர ஓடிப்
பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல்
பூங்கண் ஆயம் ஊக்க75 ஊங்காள்
அழுதனள் பெயரும் அஞ்சி லோதி
நல்கூர் பெண்டின் சில்வளைக் குறுமகள்
ஊசல் உறுதொழிற் பூச லூட்டா
நயனின் மாக்களொடு குழீஇப்76
பயனின் றம்மவிவ் வேந்துடை அவையே."

(நற்றிணை. 60)
இது பாங்கனைக் குறித்துக் கூறியது.

"நெய்யுங் குய்யும் ஆடி மையொடு
மாசுபட் டன்றே கலிங்கமுந் தோளுந்
திதலை மென்முலைத் தீம்பால் பிலிற்றப்
புதல்வரப் புல்லிப் புனிறுநா றும்மே
வாலிழை மகளிர் சேரித் தோன்றும்
தேரோற் கொத்தனெம் அல்லேம் இதனாற்77
பொன்புரை நரம்பின் இன்குரற் சீறியாழ்
78எழாஅல் வல்லை யாயினுந் தொழாஅல்
புரையோ ரன்ன புரையு நட்பின்
இலையோர் கூம்புகை மருள்வோர் ஆங்குக்
கொண்டுசெல் பாணநின் தண்துறை யூரனைப்
பாடுமனைப் பாடல் கூடாது நீடுநிலைப்
புரவியும் பூணிலை79 முனிகுவ
விரகில மொழியல்யாம் வேட்டத்தில்80 வழியே."

(நற்றிணை 380)

81`வாயிலின் வரூஉம் வகை' என்றமையான், தன் ஆற்றாமையும் வாயில்களாக் கொள்ளப்படும் என்பது பெற்றாம்.

"புல்லேன் மகிழ்ந புலத்தலும் இல்லேன்82
கல்லா யானை கடுந்தேர்ச் செழியன்
படைமாண் பெருங்குள மடைநீர் விட்டெனக்
காலணைந் தெதிரிய கணைக்கோட்டு வாளை
அள்ளலங் கழனி உள்வா யோடிப்
பகடுசே றுதைத்த புள்ளிவெண் புறத்துச்
செஞ்சால் உழவர் கோற்புடை மதரிப்
பைங்காற் செறுவின் அணைமுதற் புரளும்
வாணன் சிறுகுடி அன்னஎன்
கோல்நேர் எல்வளை நெகிழ்ந்த83 நும்மே."

(நற்றிணை. 340)
இஃது ஆற்றாமை வாயிலாகச் சென்றாற்குக் கூறியது.

`புள்ளிமி ழகல்வயின்' என்ற மருதக் கலியுள்,

"பூங்கட் புதல்வனைப் பொய்பா ராட்டி
நீங்காய் இகுவாய் நெடுங்கடை நில்லாதி
ஆங்கே அவர் வயின் சென்றீ அணிசி தைப்பான்
ஈங்கெம் புதல்வனைத் தந்து."

(கலித். 79)

என்று புதல்வன் வாயிலாகக் கூறியது காண்க.

(6)

(பாடம்) 1. உள்ளமொடு.

2. நெருங்கலும்.

3. சிறைப்பினும்.

4. கிழத்தியர்.

5. ஒழுக்கம்.

6. அந்தணர் முதலிய மூவரும் தத்தமக்குரிய வேள்வி செய்யுங்கால் தம்மனைவியர் பலருள்ளும் தமக்கு ஒத்தாளை வேள்விக்கண் உரிமை வகையான் ஏனை மகளிரின் உயர்த்தச் செய்யுமிடத்தும். (தொல். பொருள். 174. நச்சி)

7. பிரிவரி.

8. கொண்ட.

9. உறுப.

(பாடம்) 10. முடமுதிர்.

11. முன்னத்.

12. விறலியர்.

13. முரல்வன.

14. நெடுநா மொழியன்.

15. புணர்ந்த.

(பாடம்) 16. தணந்தனையாயின்.

17. வீதரும்.

18. சேண.

19. படுவோர்க்.

20. உடைத்தவாம்.

21. றன்வென்றூய.

22. யானைக்கன்று போலும் புதல்வன் பிறத்தலான் உளதாகிய விருப்பத்தையுடைய நெய்யணிக்கு விரும்பிய தலைவனை நெஞ்சை வருத்தித் தன்னைச் செறிதலினின்றும் நீக்கிய இளிவந்த நிலைமைக் கண்ணும் (தொல். பொருள். 147. நச்சி)

(பாடம்) 23. பாத்தியிற்கலித்த.

24. முயங்கல் அதுவே தெய்யநின்.

25. ஓடாவிரைபுதன்.

26. மனைநடுவயலை மாணிவர்.

(பாடம்) 27. இளமுலைத்.

28. போலுநின்.

29. றியாமேல்.

(பாடம்) 30. சென்றி.

31. தான் ஏமுறுதற்குக் காரணமான விளையாட்டின் முடிவின்கண்ணும் அவள் எம்மைப் பாதுகாப்பீரோ என வினாயவழி அவனும் அதற்கு உடன்பட்டான் போலக் கூறுவன உளவாதலின், ஏமுறு விளையாட்டு என்றார். (தொல்.பொருள்.147.நச்சி.)

(பாடம்) 32. அவிரிதழ்.

33. அல்கேழ் மணிமருள் செவ்வாய்.

34. சேர்த்தனள் வேண்டிப்.

35. விரைவினன்.

36. பேணீனன்.

37. புரைவதால் எனவே.

(பாடம்) 38. `யான் கேட்க'.

39. `அமிழ்தயின்றற்றாப்'.

40. `பாடியோமென்றற்றால்'

41. என்பவன்.

42. மகனுக்கும் இது படும் என்று கருதிக் கூறலில் தலைவனைப் பழித்து என்னாது, மகப் பழித்து என்றார். (தொல். பொருள். 147. நச்சி.)

43. `நச்சியார் காதல்'

44. `மானோக்கின்'

(பாடம்) 45. `குப்போர்'

46. `கண்டைப்பாய்'

47. `விடேனென.'

48. காதல் எங்கையர் மாதர் சான்ற எனபனவற்றால் துனிகூறினார் . எனவே யாங் கண்டதனாற் பயனின்று என்றார் , (தொல் , பொருள் . 147 நச்சி)

49. `அளித்து.'

50. நீக்கலின்.

(பாடம்) 51. `போழ்தினான்.'

52. `போதந்து'

53. ஆய்பாய்ந்.

54. `கொள்வார்.'

55. முந்தையே.

56. `தற்றால்.'

57. `இவற்கெண்ணும்.'

58. தன்வயிற் சிறைப்பினும் - தலைவனில்தான் புதல்வற்குச் சிறந்தாளாகி அத்தலைவன்மாட்டும் அவன் காதலித்த பரத்தையார் மாட்டும் செல்லாமல் புதல்வனைத் தன்பாற் சிறைசெய்தற் கண்ணும் (தொல்.பொருள் . 147 .நச்சி)

59. `நீகூறும்.'

(பாடம்) 60. புலவி அஃ.

(பாடம்) 61. நீரேந்.

62. வெரீ.

63. போர்வின்.

64. றாகப்புணரிய.

65. பரத்தையென்றி.

66. ஆங்கலாங்.

67. மகிணன்ப.

68. திரைப்ப.

(பாடம்) 69. பழிபட்.

70. மருண்டு.

71. வாயில்களாவார் செய்யுளியலுட் கூறும் பாணன் முதலியோர். வகை என்றதனான் ஆற்றாமையும் புதல்வனும் ஆடை கழுவுவாளும் பிறவும் வாயிலாதல் கொள்க. (தொல்.பொருள்.147.நச்சி.)

(பாடம்) 72. பன்மையினி.

73. எல்லில்.

74. பூளைபூங்.

75. முயங்க.

76. கெழீஇப்.

77. பண்ணிலை.

78. இங்கிருந்து 1 3/4 பக்கம் ஏட்டில் எழுதப்பெறாது விடப் பட்டுளது. `புணர்ந்துடன் போகிய' என்ற சூத்திரமும். `தோழியுள்ளுறுத்த' என்ற சூத்திரமும், `பெறற்கரும்' என்ற சூத்திரமும். அதன் முதலிரண்டு அடிகளின் உரையும் மறைந்து விட்டன போலும். இப்பகுதிக்கு நச்சினார்க்கினியத்தைத் தழுவி உரையெழுதி (இ.மு.சோ) சேர்த்திருக்கின்றனர். இங்கே தரப்படுவது அவ்வாறு சேர்க்கப்பட்டதேயாம். `குற்றமில்லாத் தலைமகனைச் சுட்டிய தெய்வக் [கடன்] கொடுக்க வேண்டுமென்றலாம்' என்பது தொடங்கிய யேட்டுப் பிரதியிற் காணப்படுகின்றது.

79. இல்லேன் இதனால்.

80. வேட்டதில்.

81. இதில் 9வது அடிமுதல் 10வது அடிவரை நற்றிணைப் பதிப்புக்களில் இல்லை.

82. இலனேஎ.

(பாடம்) 83. ஞெகிழ்த்த.