கற்பியல்

146புணர்ந்துடன் போகிய கிழவோள் மனையிருந்து
இடைச்சுரத் திறைச்சியும் வினையும் சுட்டி
அன்புறு தக்க கிளத்தல் தானே
கிழவோன் செய்வினைக்கு அச்ச மாகும்.

என்-எனின், இதுவும் தலைமகட்குரிய கிளவிக்கட் படும் இலக்கணம் நுதலிற்று.

களவிற் புணர்ந்து உடன்போகிய தலைமகள் கற்புக் கடன்பூண் டொழுகுங்காலத்து மனைக்கணிருந்து தான் முன்னர் இடைச்சுரத்தில் தலைவனுடன் கண்ட கருப்பொருண் முதலியவற்றையும் அவற்றின் தொழிலையும் குறித்துக் கிழவன் அன்புறுதற்குக் தக்கவற்றைக் கூறுதலே தலைமகன் இயற்றுந் தொழிற்கு அஞ்சும் அச்சமாகும் என்றவாறு.

எனவே புணர்ந்துடன் போகாத தலைவி அங்ஙனமிருந்து கூறல் தலைவற்கு அவன் செய்வினைக்கண் அச்சமாகாதென்றவாறு.

உதாரணம்

"கான யானை தோல்நயந் துண்ட
பொரிதாள் ஓமை வளிபொரு நெடுஞ்சினை
அலங்கல் உலவை யேறி ஒய்யெனப்
புலம்புதரு குரல புறவுப்பெடை பயிரும்
அத்தம் நண்ணிய அங்குடிச் சீறூர்ச்
சேர்ந்தனர் கொல்லோ தாமே யாம்தமக்கு
ஒல்லேம் என்ற தப்பற்குச்
சொல்லா தகறல் வல்லு வோரே".

(குறுந். 79)

இதனுள் அஞ்சியவாறு காண்க. பிறவும் அன்ன.