என்-எனின், கற்பின்கண் தோழிகூற்று நிகழும் இடம் தொகுத்துணர்த்துதல் நுதலிற்று. பெறற்கரும் சிறப்பு முதலாக மரபுடை யெதிரும் உளப்படப் பிறவும் ஈறாக மொழியப்பட்டவை யாவும் தோழிக்குரிய என்று கூறுவர் புலவர் என்றவாறு. பெறற்கரும் பெரும்பொருண் முடிந்தபின் வந்த தெறற்கரு5 மரபிற் சிறப்பின்கண்ணும் என்பது-பெறுதற்கு அரிய பெரும் பொருளை முடித்த பின்னர்த் தோன்றிய தெறுதற்கரிய மரபு காரணத்தால் தலைவனைச் சிறப்பித்துக் கூறுமிடத்தும் தோழிகூற்று நிகழும் என்றவாறு. பெரும்பொருள் - ஈண்டு வரைவிற்கேற்றது. தெறுதல் - அழல நோக்குதல். உதாரணம்"அயிரை பரந்த அந்தண் பழனத்து ஏந்தெழில் மலர்ந்த தூம்புடைத் திரள்கால் ஆம்பல் குறுநர் நீர்வேட் டாங்கிவள் இடைமுலைக் கிடந்து நடுங்க லானீர் தொழுதுகாண் பிறையில் தோன்றி யான் உமக்கு அரியம் ஆகிய காலைப் பெரிய நோன்றனிர் நோகோ யானே." (குறுந் . 178) என வரும்.அற்றமழிவு உரைப்பினும் என்பது - முற்காலத்துற்ற வருத்தத்தின் நீங்கினமை கூறினும் என்றவாறு. உதாரணம் "எரிமருள் வேங்கை இருந்த தோகை இழையணி மடந்தையில் தோன்று நாட இனிதுசெய் தனையால் நுந்தை வாழியர் நன்மனை வதுவை அயர இவள் பின்னிருங் கூந்தல் மலரணிந் தோயே." (ஐங்குறு. 294) என வரும்.அற்றம் இல்லாக் கிழவோற் சுட்டிய தெய்வக் கடத்தினும் என்பது - குற்றமில்லாத தலைமகனைச் சுட்டிய தெய்வக்கடன் கொடுத்தற்கண்ணும் என்றவாறு. உதாரணம்"நெஞ்சமொடு மொழிகடுத் தஞ்சுவர நோக்குந் தாயவட் டெறுதரக் காக்கவெம் மகனெனச் சிறந்த தெய்வத்து மறையுறை குன்ற மறைந்துநின் றிறைஞ்சினம் பலவே பெற்றனம் யாமே மற்றதன் பயனே."
"வாழி ஆதன் வாழி அவினி வேந்துபகை தணிக யாண்டுபல நந்துக எனவேட் டோளே யாயே யாமே மலர்ந்த பொய்கை முகைந்த தாமரைத் தண்துறை ஊரன் வரைக எந்தையுங் கொடுக்க எனவேட் டேமே." (ஐங்குறு. 6)
"திண்தேர் நள்ளி கானத் தண்டர் பல்ஆ பயந்த நெய்யில் தொண்டி முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெண்சோறு ஒருகலத்6 தேந்தனுஞ் சிறிதென் தோழி பெருந்தோள் நெகிழ் சூழ்ந்த7 செல்லற்கு விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே." (குறுந். 210) என வரும்.சீருடைப்பெரும்பொருள் வைத்தவழி மறப்பினும் என்பது - சீருடைய பெரும்பொருளானது இற்கிழமை; அதனைத் தலைமகன்மாட்டு வைத்தவிடத்து அவளை மறந்து ஒழுகினவழியும் என்றவாறு. அஃதாவது அறத்தினானாதல் பொருளினானாதல் அவனுக்காகிய இசையுங் கூத்தும் முதலியவற்றான் அத்திறம் மறத்தல் அவ்வழியுந் தோழி கூற்று நிகழும். உதாரணம்"பொங்குதிரை பொருத வார்மணல் அடைகரைப் புன்கால் நாவற் பொதப்புற இருங்கனி கிளைசெத்து மொய்த்த தும்பி பழஞ்செத்துப் பல்கால் அலவன் கொண்டகோட் கூர்ந்து8 கொள்ளா நரம்பின் இமிரும் பூசல் இரைதேர் நாரை யெய்திய9 விடுக்குந் துறைகெழு மாந்தை அன்ன இவள்நலம் பண்டும் இற்றே கண்டிசின் தெய்ய உழையிற் போகா தளிப்பினுஞ் சிறிய ஞெகிழ்ந்த கவின்நலங்10 கொல்லோ மகிழ்ந்தோர் கட்களிய 11செருக்கத் தன்ன காமங் கொல்லிவள் கண்பசந் ததுவே." என வரும்.அடங்கா வொழுக்கத் தவன்வயி னழிந்தோளை மடங்கக் காட்டுதற் பொருளின்கண்ணும் என்பது - அடங்கா வொழுக் கத்தையுடைய தலைவன்மாட்டு மனன் அழிந்தோளை யடங்கக் காட்டுதற்கு ஏதுவான பொருட்பக்கத்தினும் கூற்றுநிகழும் என்றவாறு. உதாரணம்"இதுமற் றெவனோ தோழி துனியிடை இன்னர் என்னும் இன்னாக் கிளவி இருமருப் பெருமை யீன்றணிக் காரான் உழவன் யாத்த குழவியின் அகலாது பாற்செய்12 பைம்பயிர் ஆரும் ஊரன் திருமனைப் பல்கடம் பூண்ட பெருமுது பெண்டிரே மாகிய நமக்கே." (குறுந். 181) என வரும்.13பிழைத்துவந் திருந்த கிழவனை நெருங்கி இழைத்தாங்காக்கிக் கொடுத்தற்கண்ணும் என்பது - பிழைத்து வந்திருந்த தலைமகனை நெருங்கித் தலையளிக்குமாறு கூறித் தலைமகன்மாட்டாக்கிக் கொடுத்தற்கண்ணுங் கூற்று நிகழும் என்றவாறு. உதாரணம்"பகலில் தோன்றும் பல்கதிர்த் தீயின் ஆய்பலஞ் செறுவில் தேன்ஊர் அன்ன இவள் நலம் புலம்பப் பிரிய14 அனைநல முடையளோ மகிழ்நநின் பெண்டே." (ஐங்குறு. 57)
"கோட்டிசின் வாழியோ மகிழ்ந ஆற்றுற மையல் நெஞ்சிற் கெவ்வந் தீர நினக்குமருந் தாகிய யான்இனி இவட்குமருந் தன்மை நோம்என் நெஞ்சே." (ஐங்குறு. 59) என வரும்.வணங்கிய மொழியான் வணங்கற் கண்ணும் என்பது - தாழ்ந்த இயல்பினையுடைய மொழியினான் வணங்குதற்கண்ணுங் கூற்று நிகழும் என்றவாறு. உதாரணம்"உண்துறைப் பொய்கை வராஅல் இனம்இரியுந் தண்துறை யூர தகுவதோ - ஒண்தொடியைப் பாராய் மனைதுறந் தச்சேரிச் செல்வதனை ஊராண்மை யாக்கிக் கொளல்." (ஐந்திணை யெழு. 52) எனவரும்.புறம்படுவிளையாட்டுப்15 புல்லிய புகர்ச்சியும் என்பது புறப்பட்ட விளையாட்டினைத் தலைவன் பொருந்திய புகர்ச்சிக் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. புகர்ச்சி - குற்றம். உதாரணம்"காலை எழுந்து கடுந்தேர் பண்ணி வாலிழை மகளிர் மரீஇய16 சென்ற மல்ல லூரன் எல்லினன் பெரிதென மறுவருஞ் சிறுவர் தாயே தெறுவ தம்மவித் திணைப்பிறத் தல்லே." (குறுந். 45) எனவரும்.சிறந்த புதல்வனைத் தேராது புலம்பினும் என்பது - இருவர்க்குஞ் சிறந்த புதல்வனை நினையாமையால் தலைமகன் தனிமையுறுதற் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. உதாரணம்"நெடுநா ஒண்மணி கடிமனை17 இரட்டக் குரையிலைப் போகிய விரவுமணற் பந்தர்ப் பெரும்பாண் காவல் பூண்டென ஒருசார்த் திருந்திழை மகளிர் விரிச்சி நிற்ப வெறியுற விரிந்த அறுவை மெல்லணைப் புனிறுநாறு செவிலியோடு புதல்வன் துஞ்ச ஐயலி அணிந்த நெய்யாட் டீரணிப் பசுநெய்18 கூர்ந்த மென்மை யாக்கைச் சீர்கெழு மடந்தை யீரிமை பொருந்த நள்ளென் கங்குற் கள்வன் போல அகன்துறை ஊரனும் வந்தனன் சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே." (நற்றினை. 40) எனவும்,"நுண்ஞாண் வலையிற் பரதவர் போத்தந்த பன்மீன் உணங்கல் கவருந் துறைவனைக் கண்ணினாற் காண அமையுங்கொல்19 என்றோழி வண்ணந்தா வென்கந் தொடுத்து." (ஐந்திணையெழு. 64) எனவும் வரும்.மாணலந் தாவென வருத்தற்கண்ணும் என்பது - நீ கொண்ட நலத்தினைத் தந்து போஎனக் கூறுதற்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. "விட்டென விடுக்கு நாள் தருக அது நீ நொந்தனை யாயின் தந்தனை சென்மோ குன்றத் தன்ன குவவுமணல் அடைகரை நின்ற புன்னை நிலந்தோய் படுசினை வம்ப நாரை சேக்குந் தண்கடற் சேர்ப்பநீ உண்டவென் நலனே." (குறுந். 236) என வரும்.பேணா வொழுக்கம் நாணிய பொருளினும் என்பது - தலைமகளைப் பேணாத ஒழுக்கத்தினால் தலைமகள் நாணிய பொருண்மைக் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. உதாரணம்"யாயா கியளே மாஅ யோளே மடைமாண் செப்பில் தமிய வைகிய பொய்யாப் பூவின் மெய்சா யினளே பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல் இனமீன் இருங்கழி யோதம் மல்குதொறும் கயமூழ்கு மகளிர் கண்ணின் மானுந் தண்ணந் துறைவன் கொடுமை நம்முள் நாணிக் கரப்பா டும்மே." (குறுந். 9) என வரும்.20சூள்வயிற் றிறத்தாற் சோர்வுகண் டழியினும் என்பது - தலைமகள் சூளுற்ற சூளுறவிற் சோர்வுகண்டு அழிந்து கூறினும் கூற்று நிகழும் என்றவாறு. உதாரணம்"எம்மணங் கினவே மகிழ்ந முன்றில் நனைமுது புன்கின் பூத்தாழ் வெண்மணல் வேலன் புனைந்த வெறிஅயர் களந்தொறுஞ் செந்நெல் வான்பொரி சிதறி அன்ன எக்கர் நண்ணிய எம்மூர் வியன்துறை நேரிறை முன்கை பற்றிச் சூரர மகளிரொ டுற்ற சூளே." (குறுந். 53) என வரும்.பெரியோரொழுக்கம் பெரிதெனக் கிளந்து பெறுதகையில்லாப் பிழைப்பினும் என்பது - பெரியோ ரொழுக்கம் பெரிதாகுமெனச் சொல்லித் தலைமகளைப் பெறுந்தகைமை யில்லாத பிழையின் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. உதாரணம்"வெள்ளி விழுத்தொடி மென்கரும் புலக்கை வள்ளி நுண்ணிடை வயின்வயின் நுடங்க மீன்சினை அன்ன வெண்மணற் குவைஇக் காஞ்சி நீழல் தமர்வளம் பாடி ஊர்க்குறு மகளிர் குறுவழி விறந்த இறாஅல்21 அருந்திய சிறுசிரல் மருதின் தாழ்சினை யுறங்குந் தண்துறை ஊர விழையா உள்ளம் விழையு மாயினும் என்றும், கேட்டவை தோட்டியாக மீட்டாங்கு அறனும் பொருளும் வழாமை22 நாடித் தற்றக வுடைமை நோக்கி மற்றதன் பின்னா கும்மே முன்னியது முடித்தல் அனைய பெரியோர் ஒழுக்கம் அதனால் அரிய பெரியோர்த் தெரியுங் காலை நும்மோர் அன்னோர் மாட்டும் இன்ன பொய்யொடு மிடைந்தவை தோன்றின் மெய்யாண் டுளதோஇவ் உலகத் தானே." (அகம். 286) என வரும்.அவ்வழி யறுதகை யில்லாப் புலவியின் மூழ்கிய கிழவோள் பால்நின்று கெடுத்தற் கண்ணும் என்பது - மேற் சொல்லிய வாற்றாற் றலைவன் பிழைத்தவழி அவனா லுறுந்தகைமையில்லாத புலவியின் மூழ்கிய தலைவி பக்கத்தாளாகி நின்று அதனைக் கெடுத்தற்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. உதாரணம்"மானோக்கி நீயழ நீத்தவன் ஆனாது நாணில னாயின் நலிதந் தவன்வயின் ஊடுவ தென்னோ வினி." (கலித்.87) என வரும்.உணர்ப்புவயின் வாரா வூடனுற் றோள்வயி னுணர்த்தல் வேண்டிய கிழவோன் பானின்று தான்வெகுண் டாக்கிய தகுதிக் கண்ணும் என்பது - தலைவன் ஊடல் தீர்க்கவும் அதன் வழி வாராத ஊடலுற்றோள்வயின் அவ்வூடலைத் தீர்த்தல் வேண்டிய தலைவன் பக்கத்தாளாகி நின்று தலைவனை வெகுண்டு நின்றுண்டாக்கிய தகுதிக்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. "உப்பமைந் தற்றால் புலவி அது சிறிது மிக்கற்றால் நீள விடல்." (குறள்.1302) என வரும்.அருமைக் காலத்துப் பெருமை காட்டிய எளிமைக்காலத் திரக்கத்தானும் என்பது - தாமரியராகக் களவுகாலத்துத் தமது பெருமையைக் காட்டிய தாம் எளியராகிய கற்புக்காலத்து இது இரக்கத்தின் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு . பெருமைகாட்டிய விரக்கம் எனக் கூட்டுக. இதனாற் சொல்லியது வாளாதே இரங்குதலன்றிப் பண்டு இவ்வாறு செய்தனை இப்பொழு திவ்வாறு செய்யாநின்றனை எனத் தமதுயர்ச்சியுந் தலைமகனது நிலை யின்மையுந் தோற்ற இரங்குதலாயிற்று. இதுவும் புலவிமாத்திரமன்றித் தலைவ னீங்கி யொழுகும் ஒழுக்கம் மிக்கவழிக் கூறுவதெனக் கொள்க. உதாரணம்"வேம்பின் பைங்காயென் தோழி தரினே தேம்பூங் கட்டி என்றனிர் இனியே பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர் தைஇத் திங்கள் தண்ணிய தரினும் வெய்ய உவர்க்கு மென்றனிர் ஐய வற்றால் அன்பின் பாலே." (குறுந். 196) என வரும்.பாணர் கூத்தர் விறலிய ரென்றிவர் பேணிச் சொல்லிய குறைவினை யெதிரும்23 என்பது - பாணராயினுங் கூத்தராயினும் விறலியராயினும் இத்தன்மையர் விரும்பிச் சொல்லிய குறையுறும் வினைக் கெதிராகவுங் கூற்று நிகழும் என்றவாறு. குறையுறும் வினை குறைவினையென ஒட்டிற்று; அது சொல்லிய என்னும் பெயரெச்சத்திற்கு முடிபாயிற்று. உதாரணம்"புலைமகன் ஆதலிற் பொய்ந்நின் வாய்மொழி நில்லல் பாண செல்லினிப் பரியல் பகல்எஞ் சேரிக் காணின் அகல்வய லூரன் நாணவும் பெறுமே." எனவும்."அணிநிறக் கெண்டை ஆடிடம் பார்த்து மணிநிறச் சிறுசிரல் மயங்குநம் பொய்கை விரைமல காற்றா லிருந்தினம் யாமென முழவிமிழ் முன்றில் முகம்புணர் சேர்த்தி எண்ணிக் கூறிய இயல்பினின் வழாஅது பண்ணுக் கொளப் புகுவ கணித்தோ பாண செவிநிறை உவகையேம் ஆக இது நாணன்மைக் குரைத்துச் சென் றீமே." எனவும் வரும் .நீத்தகிழவனை நிகழுமாறு படீஇயர் காத்த தன்வயிற் கண்நின்று பெயர்ப்பினும் என்பது - தலைவியை நீத்த கிழவனை அவளுடன் நிகழுமாறு படுத்தல் வேண்டி அவனைப் புறங்காத்த தன்னிடத்துற்ற தலைமகனைக் கண்ணோட்டமின்றிப் பெயர்த்தற்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. உதாரணம்"மனையுறு24 கோழிக் குறுங்காற் பேடை வேலிவெருகின மாலை யுற்றெனப் புகுமிடன் அறியாது தொகுபுடன் குழீஇய பைதற் பிள்ளைக் கிளைபயிர்ந் தாஅங் கின்னா திசைக்கும் அம்பலொடு வாரல் வாழியர் ஐயஎம் தெருவே. " (குறுந் . 139 ) என வரும் ,பிரியுங்காலை வெதிர்நின்று சாற்றிய மரபுடை எதிரும் உளப்பட என்பது - தலைவன் சேயிடைப் பிரியுங் காலத்து முன்னின்று சொல்லிய மரபுடை மாறுபாடும் என்றவாறு . எனவே அகத்திணையியலுட் கூறப்பட்டது களவுகாலத்தை நோக்கிக் கூறுதலான அயலிதாகக் கூறப்பெறும் என்பதூஉம் இவ்வோத்தினுட் செலவழுங்குவித்தல் பார்ப்பார்க் குரித்தாகக் கூறுதலானுங் கற்பினுட் பிரிவு மரபு கெடாமற் கூறவேண்டும் என்பதூஉங் கருத்து . மரபினாற் கூறுதலாவது குற்றேவன் முறைமையாற் கூறுதல். பிரிவை அகத்திணையியலுள் வைத்தனான். ஆண்டுக் கூறிய கிளவி இருவகைக் கைகோளிற்கும் பெரும்பான்மை யொக்கும் எனக் கொள்க . உடன்போக்கும் ஒக்குமோ எனின் , கற்பினுள் உடன்போக்கு உலகியலுட் பெரும்பான்மை யென்று கொள்க . இக்கூற்றுத் தலைமகன் மாட்டுந் தலைமகள் மாட்டுமாம் . "அறன்இன்றி அயல்தூற்றும் அம்பலை நாணியும் வறனீந்தி நீசெல்லும் நீளிடை நீனைப்பவும் இறைநில்லா வளையோட இதழ் சோர்பு25 பனிமல்கப் பொறைநில்லா நோயொடு புல்லென்ற நுதலிவன் விறல்நல னிழப்பவும் வினைவேட்டாய் கேளினி ; உடையிவள் உயிர்வாழாள் நீநீப்பின் எனப்பல இடைகொண்டியாம் இரப்பவும் எமகொள்ளா 26 யாயினை கடைஇய ஆற்றிடை நீர்நீத்த வறுஞ்சுனை அடையொடு வாடிய அணிமலர் தகைப்பன ; வல்லைநீ 27 துறப்பாயேல் வகைவாடும் இவளென ஒல்லாங்கியாம் உரைப்பவும் உணர்ந்தீயா யாயினை செல்லுநீ ளாற்றிடைச் சேர்ந்தெழுந்த மரம்வாடப் புல்லுவிட் டிறைஞ்சிய பூங்கொடி தகைப்பன ; பிணிபுநீ விடல் சூழிற் பிறழ்தரும் 28 இவளெனப் பணிபுலந் திறுப்பவும் பலசூழ்வா யாயினை துணிபநீ செலக்கண்ட ஆற்றிடை அம்மரத்து அணிசெல வாடிய அந்தளிர் தகைப்பன ; எனவாங்கு ; யாநிற் கூறவும் எமகொள்ளாய் ஆயினை ஆனா திவள்போல் அருள்வந் தவைகாட்டி மேல்நின்று மெய்கூறுங் கேளிர்போல் நீசெல்லுங் கானந் தகைப்ப செலவு. " (கலித். 3 ) என வரும் ,இனித் தலைமகட்குக் கூறியதற்குச் செய்யுள் ; "அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிறிதாற்றிப்29 பின்இருந்து30 வாழ்வார் பலர். " ( குறள் . 1160 ) என வரும் .பிறவும் வகைபட வந்த கிளவி யெல்லாந் தோழிக்குரிய வென்மனார் புலவர் என்பது - மேற்சொல்லப்பட்ட கிளவியன்றிப் பிற வாய்பாட்டாற் பாகுபட வந்த கிளவி யெல்லாந் தோழிக் குரிய என்றுரைப்பர் புலவர் என்றவாறு . வகைபடவந்த கிளவியாவன :- பிரிந்த தலைமகன் வருவனெனக் கூறுதலும் , பருவங்கண்டு கூறுதலும் , வற்புறுத்தலும் , நிமித்தங்கண்டு கூறுதலும் , வந்தான் எனக் கூறுதலும் , இந்நிகரனவும் , மேற்சொல்லப்பட்ட இடங்களிற் கூற்று வேறுபாடாகி வருவனவுங் கொள்க , அவற்றிற் களவுக்குங் கற்பிற்கும் பொதுவாகி வருவன அகத்திணையியலுட்கொள்க . கற்பிற்கே உரித்தாகி வருவன ஈண்டுக் கொள்க . "ஆமா சிலைக்கும் அணிவரை ஆரிடை ஏமாண் சிலையார்க் கினமா இரிந்தோடும் தாமாண்பில் வெஞ்சுரஞ் சென்றார் வரக்கண்டு வாய்மாண்ட பல்லி படும். " (கைந்நிலை . 18 ) இது நிமித்தங் கண்டு கூறியது ."வாளிலங் குண்கண் வைஎயிற் றோயே ஞாலங் காவலர் வந்தனர் காலை அன்ன மாலைமுந் துறத்தே." இது தலைவன் வந்தமை கூறியது , பிறவும் அன்ன . (9)
(பாடம்) 1. புகற்சியுஞ். 2. குள்நயத். 3. அவ்வயின். 4. காலை எதிர். 5. தலைவியையும் தலைவனையும் வழிபாடாற்றுதலின் ` தெறற்கரு மரபின் ' என்றார். தெறுதல்-அழன்று நோக்குதல். சிறப்பு, இவளை நீ ஆற்றுவித்தலின் எம் உயிர் தாங்கினேம் என்றாற்போல்வன. (தொல், பொருள். 150 நச்சி.) (பாடம்) 6. எழுகலத். 7. நெகிழ்த்த. (பாடம்) 8. கசர்ந்து. 9. எய்தி. 10. இவள்நலங். 11. கட்கழி. 12. பாஅல். 13. பிழைத்து வந்திருந்த கிழவனை - பரத்தையர் மனைக்கண் தங்கி உந்து அகனகர் புகுதாது புறத்திருந்த தலைவனை. (தொல். பொருள். 150. நச்சி.) 14. பிரியல். 15. விளையாட்டாவது யாறும் குளனும் காவும் ஆடிப் பதியிகந்து நுகர்தலாம். புல்லிய புகர்ச்சியும் தலைவன் பொருந்திய மனநிகழ்ச்சிக் கண்ணும். (தொல். பொருள். 150 . நச்சி.) (பாடம்) 16. தழீஇய. 17. கடுமனை. (பாடம்) 18. பசிநோய். 19. இயையுங்கொல். 20. சூள் நயத்திறத்தாற் சோர்வுகண்டு அழியினும் - கூடுதல் வேட்கை கூறுபாட்டால் தான் சூளுறக் கருதிய சூளுறவினது பொய்ம்மையைக் கருதித் தலைவி வருந்தினும் தோழிக்குக் கூற்று நிகழும். (தொல். பொருள். 105) (பாடம்) 21. ஆரல். 22. வழாஅமை. 23. எதிரும் என்றது அவர் வாயில் வேண்டியவழித் தோழி அவர்க்கு மறுத்தலும் மறுத்தாள் போல நேர்தலும் கூறியதாம். (தொல்.பொருள்.150.நச்சி.) (பாடம்) 24. யுறை. (பாடம்) 25. சேர்பு. 26. எம். 27. வல்லையில். 28. பிறழாகும். 29. பிரிதாற்றிப். 30. பின்ஒழிந்து.
|