கற்பியல்

149புல்லுதல் மயக்கும் புலவிக் கண்ணும்
இல்லோர் செய்வினை இகழ்ச்சிக் கண்ணும்
பல்வேறு புதல்வர்க் கண்டுநனி உவப்பினும்
மறையின் வந்த மனையோள் செய்வினை
பொறையின்று பெருகிய பருவரற் கண்ணும்
காதற் சோர்விற் கடப்பாட் டாண்மையில்
1தாய்போற் கழறித் தழீஇய மனைவியைக்
காய்வின் றவன்வயிற் பொருத்தற் கண்ணும்
இன்னகைப் புதல்வனைத் தழீஇ இழையணிந்து
பின்னை2 வந்த வாயிற் கண்ணும்
மனையோ ளொத்தலின் தன்னோர் அன்னோர்
மிகையெனக்3 குறித்த கொள்கைக் கண்ணும்
எண்ணிய பண்ணையென் றிவற்றொடு பிறவும்
கண்ணிய காமக் கிழத்தியர் மேன.

என்-எனின் . 4காமக் கிழத்தியர் கூற்று நிகழும் இடம் உணர்த்திற்று.

புல்லுதன் மயக்கும் புலவி முதலாகச் சொல்லப்பட்ட இடத்தினும் அந்நிகரன பிறிவிடத்தினும் குறிக்கப்பட்ட கூற்றுக் காமக்கிழத்தியர் மேலன என்றவாறு.

கூற்றென்பது அதிகாரத்தான் வந்தது .

காமக்கிழத்தியராவார் பின்முறை ஆக்கிய கிழத்தியர் . அவர் மூவகைப்படுவர் ; ஒத்த கிழத்தியரும் இழிந்த கிழத்தியரும் வரையப் பட்டாரும் என . ஒத்த கிழத்தியர் முந்துற்ற மனையா ளன்றிக் காமம் பொருளாகப் பின்னுந் தன் குலத்துள்ளாள் . ஒருத்தியை வரைதல் . இழிந்தாராவார் - அந்தணர்க்கு அரச குலத்தினும் வணிககுலத்தினும் வேளாண் குலத்தினும் கொடுக்கப்பட்டாரும் , அரசர்க்கு ஏனையிரண்டு குலத்தினுங் கொடுக்கப்பட்டாரும் , வணிகர்க்கு வேளாண்குலத்திற் கொடுக்கப்பட்டாரும் , வரையப்பட்டார் - செல்வராயினார் கணிகைக் குலத்தினுள்ளார்க்கும் இற்கிழமை கொடுத்து வரைந்து கோடல் . அவர் கன்னியில் ` வரையப்பட்டாரும் அதன் பின்பு வரையப் பட்டாரும் என இருவகையர் . அவ்விருவரும் உரிமை பூண்டமையாற் காமக் கிழத்தியர்பாற் பட்டனர் . பரத்தையராவார் யாரேனின் , அவர் ஆடலும் பாடலும் வல்லராகி அழகு மிளமையுங் காட்டி இன்பழும் பொருளும் வெஃகி ஒருவர் மாட்டுந் தங்காதார் . இவருள்ளும் ஒருவரைப்பற்றி மறுதலைப் பெண்டிரைச் சார்த்திக் கூறுவனவும் காமக் கிழத்தியர் கூற்றின் பாற்படும் . இவற்றின் வேறுபாடு அவரவர் கூற்றானறிக , இச்சூத்திரத்திற் காமக்கிழத்தியென ஓதாது `கிழத்தியர் ' என ஓதுதலானும் பலவகையார் என்பது கொள்க.

புல்லுதன் மயக்கும் புலவிக்கண்ணும் என்பது புல்லுதலைக் கலக்கும் புலவிமாட்டுங் காமக்கிழத்தியர் கூற்று நிகழும் என்றவாறு.

அஃதாவது முதிராத புலவிமாத்திரமாகிய புணர்ச்சியை யுடன் பட்ட நெஞ்சத்தளாதல்.

உதாரணம்

"பொதுமொழி பிறர்க்கின்றி முழுதாளுஞ் செல்வர்க்கு
மதிமொழி யிடன்மாலை வினைவர்போல் வல்லவர்
செதுமொழி சீத்த செவிசெறு வாக
முதுமொழி நீராப்5 புலனா உழவர்
புதுமொழி கூட்டுண்ணும் புரிசைசூழ் புனலூர ;
ஊரன்மன் உரனல்லன் நமக்கென்ன உடன் வாளா6
தோரூர்தொக் கிருந்தநின் பெண்டிருள் நேராகிக்
களையாநின் குறிவந்தெங் கதவஞ்சேர்ந் தசைத்தகை
வளையின்வாய் யிடன் மாலை மகளிரை நோவேமோ
கேளலன் நமக்கவன் குறுகன்மி னெனமற்றெம்
தோளொடு பகைபட்டு நினைவாடு நெஞ்சத்தேம்;
ஊடியார் நலந்தேம்ப ஓடியெறிந் தவர்வயின்
மால்தீர்க்கும் அவன் மார்பென் றெழுந்தசொல் நோவேமோ
முகைவாய்த்த முலைபாயக்7 குழைந்தநின் றார்எள்ள
வகைவரிச் செப்பினுள் வைகிய கோதையேம்;
சேரியாற் சென்றுநீ சேர்ந்தவில் வினாயினன்
தேரொடு திரிதரும் பாகனைப் பழிப்பேமோ
ஒலி8 கொண்ட சும்மையான் மணமனை குறித்தெம்மில்
பொலிகெனப் புகுந்தநின் புலையனைக் கண்டயாம் ;
எனவாங்கு9
நனவினான் வேறாகு வேளா முயக்கம்
மனைவரிற் பெற்றுவந்து மற்றெந்தோள் வாட
இனைய ரென உணர்ந்தா ரென்றேக்கற் றாங்குக்
கனவினா னெய்திய செல்வத் தனையதே
ஐய எமக்குநின் மார்பு."

(கலித். 68)

இது மூவகையார்க்கும் பொது.

இல்லோர் செய்வினை யிகழ்ச்சிக் கண்ணும் என்பது - மனையகத்தோர் செய்த வினையை யிகழ்ந்து கூறுதற்கண்ணும் என்றவாறு.

பன்மையால் தலைமகனை யிகழ்தலுந் தலைமகளை யிகழ்தலுங் கொள்க.

உதாரணம்

"கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்
பழன வாளை கதூஉம் ஊரன்
எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்
கையுங் காலுந் தூக்கத் தூக்கும்
ஆடியிற் பாவை10 போல
மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே."

(குறுந். 8)

என்றும்,

"நன்மரங் குழீஇய நனைமுதிர் சாடிப்
பன்னாள் அரித்த கோஒய் உடைப்பின்11
மயங்கு மழைத் துவலையின்12 மறுகுடன் பனிக்கும்
பழம்பல் நெல்லின் வேளூர் வாயில்
நறுவிரை தெளித்த நாறிணர் மாலைப்
பொறிவரி இனவண் டூதல் கழியும்
உயர்பலி பெறூஉம் உருகெழு தெய்வம்
புனையிருங் கதுப்பின் நீகடுத் தோள்வயின்
அனையேன் ஆயின் அணங்குக என்என13
மனையோன் தேற்று மகிழ்நன் ஆயின்
யார்கொல் வாழி தோழி நெருநல்14
தார்பூண் களிற்றில் தலைப்புணை தழீஇ
வதுவை யீரணிப் பொலிந்த15 நம்மொடு
புதுவது வந்த காவிரிக்
கோடுதோய் மவிர்நிறை யாடி யோரே."

(அகம். 166)

என்றும் வரும். இவை தலைவனை இகழ்ந்தன.

"அளியர் தாமே மகிழ்நநின் பெண்டிர்
தாமவற் பிணித்தல் தேற்றார் நாமழச்
செய்தார் அகலம் வவ்வினர் இவரென
எம்பழி அறையுநர் போலத்
தம்பழி தூற்றும் பெரும்பே தையரே."

"எரிஅகைந் தன்ன தாமரைப் பழனத்துப்
பொரி அகைந்16 தன்ன பொங்குபல சிறுமீன்
வெறிகொள் பாசடை யுணீஇயர் பைப்பயப்
பறைதபு முதுசிரல் அசைபுவந் திருக்குந்
துறைகேழ் ஊரன் பெண்டுதன் கொழுநனை
நம்மொடு புலக்கும் என்ப நாமது17
செய்யா மாயின் உய்யா மையின்18
செறிதொடி தெளிர்ப்ப வீசிச் சிறிதவண்
உலமந்து19 வருகஞ் சென்மோ தோழி
ஒளிறுவாள் தானைக் கொற்றச் செழியன்
வெளிறில கற்பின் மண்டமர் அடுதொறும்20
களிறுபெறு வல்சிப் பாணன் எறியுந்
தண்ணுமைக் கண்ணின் அலைஇயர்தன் வயிறே."

(அகம் . 106)

இவை பரத்தை கூற்று.

பல்வேறு புதல்வர்க் கண்டுநனி யுவப்பினும் என்பது - பலவகைப் புதல்வரைக் கண்டு மிகவும் உவந்து கூறியவழியு மென்றவாறு.

உதாரணம்

"நயந்தலை மாறுவார் மாறுக மாறாஅக்
கயந்தலை மின்னுங் கதிர்விடு முக்காழ்ப்
பயந்தஎங் கண்ணார யாங்காண நல்கித்
திகழொளி21 முத்தங் கரும்பாகத் தைஇப்
பவழம் புனைந்த பருதி சுமப்பக்
கவழம் அறியாநின் கைபுனை வேழம்
புரிபுனை பூங்கயிற்றிற் பைபய வாங்கி
அரிபுனை புட்டிலி னாங்கணித் தீங்கே
வருகஎம் பாக மகன்;
கிளர்மணி யார்ப்பார்ப்பச் சாஅய்ச்சாஅய்ச் செல்லுந்
தளர்நடை காண்டல் இனிதுமற் றின்னாதே
உளமென்னா நுந்தைமாட் டெவ்வம் உழப்பார்
வளைநெகிழ் பியாங்காணுங் கால்;
ஐய , காமுரு நோக்கினை அத்தத்தா என்னுநின்
தேமொழி கேட்டல் இனிதுமற் றின்னாதே
உய்வின்றி22 நுந்தை நலனுணச் சாஅய்ச் சாஅய்மார்
எவ்வநோய் யாம்காணுங் கால்;
ஐய, திங்கட் குழவி வருகென யான் நின்னை
அம்புலி காட்டல் இனிதுமற் றின்னாதே
நல்காது நுந்தை புறமாறப் பட்டவர்
அல்குல்வரி யாங்காணுங் கால்;
ஐயஎம், காதில் கனங்குழை வாங்கிப் பெயர்தொறும்
போதில் வறுங்கூந்தற் கொள்வதை நின்னையான்
ஏதிலார் கண்சாய நுந்தை வியன்மார்பில்
தாதுதேர் வண்டின் கிளைபாடத் தைஇய
கோதை பரிபாடக் காண்கும்."

(கலித். 80)

என வரும்.

மறையின் வந்த மனையோள் செய்வினை பொறையின்று பெருகிய பருவரற் கண்ணும் என்பது - களவின் வருகின்ற மனையோன் செய்வினை பொறையின்றிப் பெருகிய துன்பத்தின் கண்ணும் என்றவாறு.

உதாரணம்

"வாளை வாளிற் பிறழ நாளும்
பொய்கை நீர்நாய் வைகுதுயில் ஏற்குங்
கைவண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த
வயல்வெள் ஆம்பல் உருவ நெறித்தழை
ஐதக லல்குல் அணிபெறத் தைஇ
விழவிற் செலீஇயர் வேண்டு மன்னோ
யாணர் ஊரன் காணுநன் ஆயின்
வரையா மையோ அரிதே வரையின்
வரைபோல் யானை வாய்மொழி முடியன்
வரைவேய் புரையும் நற்றோள்
அளிய தோழி தொலையுந பலவே."

(நற்றிணை.390)

இது, பரத்தையராகி வந்த காமக்கிழத்தியர் கூற்று.

காதற் சோர்விற் கடப்பாட் டாண்மையிற் றாய்போற்கழறித் தழீஇய மனைவியைக் காய்வின் றவன்வயிற் பொருத்தற்கண்ணும் என்பது - காதற் சோர்வினாலும் ஒப்புர வுடைமை யானுந் தாய் போற் கழறிப் பொருத்தப்பட்ட மனைவியைக் காய்தலன்றித் தலைமகன்மாட்டுப் பொருத்தற்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.

இதுவும் அவள் கூற்று. காதல் சோர்வு என்பது தன்மாட்டுக் காதல் சோர்தல். இது தலைமகன் மாட்டுத் துனியுளவழி நிகழும் நிகழ்ச்சி.

உதாரணம்

"வயல்வெள் ஆம்பல் சூடுதரு புதுப்பூக்
கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில்
ஓய்விடு நடைப்பக டாரும் ஊரன்23
தொடர்புநீ வெஃகினை யாயின் என்சொற்
கொள்ளல் மாதோ முள்ளெயிற் றோயே
நீயே பெருநலத் தகையே அவனே
நெடுநீர்ப் பொய்கை நடுநாள் எய்தித்
தண்கமழ் புதுமலர் ஊதும்24
வண்டென மொழிப மகனென் னாரே."

(நற்றிணை.290)

இது காமக்கிழத்தியாகிய தலைமகட்கு முன் வரையப்பட்ட பரத்தை கூற்று.

இன்னகைப் புதல்வனைத் தழீஇ யிழையணிந்து பின்னை வந்த வாயிற் கண்ணும் என்பது - இனிய நகையையுடைய புதல்வனைத் தழீஇ இழையணிந்து பின்னை வந்த வாயிலின் கண்ணும் என்றவாறு. பின்னை என்றதனால் ஏனைய வாயில்களை மறுத்த வழியென்று கொள்க.

"புள்இமிழ் அகல்வயல் ஒலிசெந்நெ லிடைப்பூத்த
முள்ளரைத் தாமரை முழுமுதல் சாய்த்ததன்
வள்ளிதழ் உறநீடி வயங்கிய ஒருகதிர்
அவைபுக ழரங்கின்மே லாடுவாள் அணிநுதல்
வகைபெறச் செரீஇய வயந்தகமே போல்தோன்றும்
தகைபெறு கழனியந் தண்துறை யூரகேள்;
அணியொடு வந்தீங்கெம் புதல்வனைக் கொள்ளாதி
மணிபுரை செவ்வாய்நின் மார்பகல நனைப்பதால்
தோய்ந்தாரை அறிகுவல் யானெனக் கமழுநின்
சாந்தினாற் குறிகொண்டாள் சாய்குவள் அல்லளோ;
புல்லல்எம் புதல்வனைப் புகலகல்25 நின்மார்பின்
பல்காழ்முத் தணியாரம் பற்றினன் பரிவானாள்
மாணிழை மடநல்லார் முயக்கத்தை நின்மார்பின்
பூணினாற் குறிகொண்டாள் புலக்குவள் அல்லளோ;
கண்டேஎம் புதல்வனைக் கொள்ளாதி நின்சென்னி
வண்டிமிர் வகையினர் வாங்கினன் பரிவானால்
நண்ணியார்க் காட்டுவ திதுவெனக் கமழுநின்
கண்ணியாற் குறிகொண்டான் காய்குவள் அல்லளோ;
எனவாங்கு,
பூங்கண் புதல்வனைப் பொய்பல பாராட்டி
நீங்காய் இகவாய் நெடுங்கடை நில்லாதி
ஆங்கே யவர்வயின் சென்றீ அணிசிதைப்பான்
ஈங்கெம் புதல்வனைத் தந்து."

(கலித். 79)

என வரும்.

மனையோன் ஒத்தலின் தன்னோரன்னோர் மிகையெனக் குறித்த கொள்கைக் கண்ணும் என்பது - தான் மனையாளை ஒத்தலாற் றன் போல்வார் தலைவற்கு மிகையெனக் குறித்த கோளின்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.

உதாரணம்

"அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற விளைகனி
குண்டுநீர் இலஞ்சிக் கெண்டை கதூஉந்
தண்டுறை ஊரன் பெண்டினை யாயின்
பலவா குகநின் நெஞ்சிற் படரே
ஓவா தீயு மாரி வண்கைக்
கடும்பகட்டியானை நெடுந்தேர் அஞ்சி
கொன்முனை இரவூர் போலச்
சிலவா குகநீ துஞ்சு நாளே."

(குறுந்.91)

என வரும்.

எண்ணிய பண்ணை26 யென் றிவற்றோடு என்பது - எண்ணப் பட்ட விளையாட்டு என்று சொல்லப்பட்ட இவற்றோடென்றவாறு.

விளையாட்டாவது ஆறுங் குளனுங் காவும் ஆடுதல்.

உதாரணம்

"கூந்தல் ஆம்பல் முழுநெறி யடைச்சிப்
பெரும்புனல் வந்த இருந்துறை விரும்பி
யாம்ஃ தயர்கம்27 சேறுந் தானஃ
தஞ்சுவ துடைய ளாயின் வெம்போர்
நுகம்படக் கடக்கும் பல்வேல் எழினி
முனையான் பெருநிரை போலக்
கிளையொடு நுகர்கதன்28 கொழுநன் மார்பே."

(குறுந்.80)

பிறவும் என்றதனால் தலைமகட்குரித்தாகச் சொல்லப்பட்டவற்றுள் ஒப்பன கொள்ளப்படும்.அவற்றுட் சில வருமாறு :-

"ஞாலம் வறந்தீர" என்னும் மருதக் கலியுள்,

"அடக்கமில் போழ்தின்கண் தந்தைகா முற்ற
தொடக்கத்துத் தாயுழைப் புக்கான்"


எனவும்,

"வழிமுறை தாயுழைப் புக்கான்"
எனவும்,

"தலைக்கொண்டு நம்மொடு காயுமற் றீதோர்29
புலத்தகைப் புத்தேளில் புக்கான்"

(கலித்.82)

எனவும் ,
கூறுதலிற் புதல்வனை யீன்றாள் மூன்றாங் காமக்கிழத்தி யாயினவாறும் இவன்மாட்டுத் தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனைமாயப் பரத்தை யுள்ளிக் கூற்றுநிகழ்ந்தவாறுங் கண்டு கொள்க. பிறவும் அன்ன. தோழி கூற்றும் இவட்கு ஒக்கும்.

(10)

(பாடம்) 1. தாய்போல் தழீஇக் கழறியம் மனைவியைக்

2. பின்னர்.

3. மிகைபடக்.

4. 149 ஆம் சூத்திரம் ( 259 ஆம் பக்கம் ) காமக்கிழத்தியராவர் கடனறியும் வாழ்க்கையுடைராகிக் காமக் கிழமைபூண்டு இல்லறம் நிகழ்த்தும் பரத்தையர் . அவர் பலராதலிற் பன்மை யாற்கூறினார் . அவர் தலைவனது இளமைப் பருவத்திற் கூடி முதிர்ந்தோரும் , அவன் தலைநின்று ஒழுகப்படும் இளமைப் பருவத்தோரும் , இடைநிலைப் பருவத்தோரும் , காமஞ்சாலா இளமையோரும் எனப் பலபகுதியாம் . இவரைக் கண்ணிய காமக்கிழத்தியர் எனவே கண்ணாத காமக்கிழத்தியரும் உளராயிற்று . அவர் கூத்தும் பாட்டும் உடையராகி வரும் சேரிப் பரத்தையரும் , குலத்தின்கண் இழிந்தோரும் , அடியரும் வினைவல பாங்கினரும் பிறருமாம்.

(தொல் . பொருள் , 157 . நச்சி)

(பாடம்) 5. நீரால்.

6. எமக்கென்ன உடன்வரா.

(பாடம்) 7. முகைவாய.

8. வலி.

9. ஆங்க.

10. ஆடிப்பாவை.

11. கோதுடைவைப்பின்.

12. திவலை.

(பாடம்) 13. எம்மென.

14. நெருனைத்.

15. பொலிந்து.

16. பொரிமுகைந்.

17. புல்குவமென்பல் அதுநாம்.

18. உய்யா மரபின்.

19. உலம்வந்து.

20. தொறும்.

21. திவளொளி.

(பாடம்) 22. எய்வின்றி.

(பாடம்) 23. ஒய் நடைமுதுபகடு ஆரும் ஊரன்.

24. கதூஉம்.

25. புகலநீ.

26. எண்ணிய பண்ணை - தலைவற்குத் தகும் என்று ஆய்ந்த யாறும் குளனும் காவும் ஆடிப் பதியிகந்து நுகர்வன போல்வனவற்றுக்கண் தாமும் விளையாடுதற்கண்ணும்.

(தொல். பொருள். 151. நச்சி)

27. யாமஃதையர்கம்.

28. காக்கதன்.

29. றிஃதோர்.