கற்பியல்

150கற்புங் காமமும் நற்பா லொழுக்கமும்
மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்துபுறந் தருதலுஞ் சுற்றம் ஓம்பலும்
பிறவு1 மன்ன கிழவோள் மாண்புகள்
முகம்புகல் முறைமையிற் கிழவோற் குரைத்தல்
அகம்புகல் மரபின் வாயில்கட் குரிய.

என்-எனின், அகம்புகல் மரபினவாய வாயில்கள் கூற்று நிகழுமாறு உணர்த்திற்று.

கற்பு முதலாகச் சொல்லப்பட்டனவும் பிறவுமாகிக் கிழவோன்மாட்டுளதாகிய தன்மைகளை முகம்புகு தன்மையானே தலைமகற்கு உரைத்தல் அகம்புகு மரபின் வாயில்கட்குரிய என்றவாறு.

செய்யுளியலுள் "வாயி லுசாவே தம்முளுரிய " (சூ.161) என்பதனால், தலைமகற் குரைத்தலே யன்றித் தம்முள்தாம் கூறுதலும் உரியரென்று கொள்க.

"மதவலி யானை மறலிய பாசறை
இடிஉமிழ்2 முரசம் பொருகளத் தியம்ப
வென்றுகொடி எடுத்தனன் வேந்தனுங் கன்றொடு
கறவை புல்லினும் புறவுதொ றுகளக்3
குழல்வாய் வைத்தனர் கோவலர் வல்விரைந்
திளையர் ஏகுவனர்4 பரிய விரியுளைக்
கடுநடைப் புரவி வழிவாய் ஓட5
வலவன் வள்புவலி உறுப்பப் புலவர்6
புகழ்குறி7 கொண்ட பொலந்தா ரகலத்துத்
தண்கமழ் சாந்தம் நுண்டுகள் அணிய8
வென்றிகொள் உவகையொடு புகுதல் வேண்டின்
யாண்டுறை வதுகொல் தானே மாண்ட
போதுறழ்9 கொண்ட உண்கண்
தீதி லாட்டி திருநுதற் பசப்பே."

(அகம்.354)

எனவும்,

"கண்டிசின் பாண பண்புடைத் தம்ம
மாலை விரிந்த பசுவெண் ணிலவிற்
குறுங்காற் காட்டில் நறும்பூச் சேக்கை
பள்ளி யானையின் உயிர்த்தனன் நகையிற்
புதல்வற் புல்லினன்10 விறலவன்
புதல்வன் தாய்அவன் புறங்கவ வினளே."

(குறுந்.359)

எனவும்,

"யாயா கியளே மாஅ யோளே
மடைமாண் செப்பின் தமிய வைகிய
பொய்யாப் பூவின் மெய்சாயினளே
பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்
இனமீன் இருங்கழி ஓத மல்குதொறும்
கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்
தண்ணந் துறைவன் கொடுமை
நம்முள் நாணிக் கரப்பா டும்மே".

(குறுந்.9)

எனவும்,

"முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅ துடீஇக்
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்11
தான்துழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதல் முகனே."

(குறுந்.167)

எனவும்,

"கானல் கோழிக் கவர்குரற் சேவல்
நுண்பொறி12 எருத்தின் தண்சித ருறைப்பத்
தேநீர்13 வாரும் பூநாறு புறவிற்
சீறூ ரோளே மடந்தை வேறூர்
வேந்துவிடு தொழிலொடு வரினுஞ்14
சேர்ந்துவரல் அறியா செம்மல் தேரே".

(குறுந்.242)

எனவும்,

"பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால்
விரிகதிர்ப் பொற்கலத் தொருகை யேந்திப்
புடைப்பிற் சுற்றும் பூந்தலைச் சிறுகோல்
உண்ணெண் றோக்குபு புடைப்பத்15 தெண்ணீர்
முத்தரிப் பொற்சிலம் பொலிப்பத் தத்துற்
றருநரைக் கூந்தற் செம்முது செவிலியர்
பரீஇ மெலிந்16 தொழியப் பந்த ரோடி
ஏவல் மறுக்குஞ் சிறுவிளை யாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந்17 தனள்கொல்
கொண்ட கொழுநன் குடிவற னுற்றெனக்
கொடுத்த தந்தை18 கொழுஞ்சோ றுள்ளாள்
ஒழுகுநீர் நுணங்கறல் போலப்
பொழுதுமறுத் துண்ணுஞ்19 சிறுமது கையளே".

(நற்றிணை.110)

எனவும்,

"பாணர் முல்லை பாடச் சுடர்இழை
வாணுதல் அரிவை முல்லை மலைய
இனிதிருந் தனனே நெடுந்தகை
துனிதீர் கொள்கைத்தன் புதல்வனொடு பொலிந்தே".

(ஐங்குறு.408)

எனவும் வரும். இவையெல்லாம் வாயில்கள் தம்முட் கூறின. தலைவற்குக் கூறின வந்தவழிக் காண்க.

1. அன்னபிற ஆவன் - அடிசிற்றொழிலும், குடிநீர்மைக்கேற்ற வகையான் ஒழிந்த தலைமகளிரையும் மனமகிழ்வுறுத்தலும், காமக் கிழத்தியர் நண்பு செய்து நன்கு மதிக்கப்படுதலும் போல்வன.(தொல். பொருள். 151. நச்சி)

(பாடம்) 2. இடியுறழ்.

3. பல்லினம்புறவுதொறுத்துகளா.

4. ஏகுநர்.

5. வளிவாய் ஓட.

6. உலவிய.

7. சுரும்புகடி.

8. இரிய.

9. போதுடன்.

10. தழீஇனன்.

11. கமழத்.

12. ஒண்பொறி.

(பாடம்) 13. புதனீ.

14. செலினும்.

15. பிழைப்பத்.

16. பரிமெலிந்.

17. யாங்குணர்ந்.

18. தாதை.

19. துய்க்கும்.