என்-எனின். செவிலிக்குரிய கூற்று வருமா றுணர்த்திற்று. இறந்த காலத்தினும் நிகழ்காலத்தினும் எதிர்காலத்தினும் தன்குலத்திலுள்ளார் வழிகொள்ளுமாறு நல்லவை கூறுதலும் அல்லவை கடிதலுஞ் செவிலிக்கு உரித்து என்றவாறு. இறந்தகால முதலியவற்றாற் கூறுதலாவது முன்புள்ளார் இவ்வாறு செய்து நன்மை பெற்றார் இவ்வாறு செய்து தீமை பெற்றார் எனவும், இப்பொழுது இன்னோர் இவ்வாறு செய்து பயன்பெறா நின்றாரெனவும், இவ்வாறு செய்தார் பின்பு நன்மை தீமை பெறுவர் எனவும் கூறுதல். அவை, அறனும் பொருளும் இன்பமும் பற்றி நிகழும்; அவையாவன ; தலைமகன்மாட்டும் உலகத்தார் மாட்டும் ஒழுகும் திறன் கூறுதல். அவை, மனையாளைப் பற்றி வருதலிற் காம தந்திரத்துட் பாரியாதி காரமெனக் கூறப்பட்டன. அறம்பற்றி வருதல் திருவள்ளுவப்பயன் முதலிய சான்றோர் செய்யுட்களுள் அறப்பகுதியிற் கூறப்பட்டன. உதாரணம்"தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்". (குறள். 56) எனவும்,"தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை". (குறள். 55) எனவும்,"மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை". (குறள். 51) எனவும்,"கட்கினியாள் காதலன் காதல் வகைபுனைவாள் உட்குடையாள் ஊர்நாண் இயல்பினாள் - உட்கி இடனறிந் தூடி இனிதின் உணரும் மடமொழி மாதராள் பெண்". (நாலடி. 384) இதனுள், `கட்கினியாள்' என்றதனான் கோலஞ்செய்தல் வேண்டுமெனக் கூறியவாறாம்."அடிசிற் கினியாளை அன்புடை யாளைப் படிசொற் பழிநாணு வாளை - அடிவருடிப் பின்துஞ்சி முன்னுணரும் பேதையை யான் பிரிந்தால் என்துஞ்சுங் கண்கள் எனக்கு". எனவும் வரும், இவை நல்லவை யுரைத்தல்."எறியென் றெதிர் நிற்பாள் கூற்றம் சிறுகாலை அட்டில் புகாதாள் அரும்பிணி - அட்டதனை உண்டி உதவாதாள்1 இல்வாழ்பேய் இம்மூவர் கொண்டானைக் கொல்லும் படை". (நாலடி. 363) எனவும்,"தலைமகனில் தீர்ந்தொழுதல்2 தான்பிறர்இல் சேறல் நிலைமையில்தீப் பெண்டிரில் சார்தல்3 - கலனணிந்து வேற்றூர் புகுதல் விழாக்காண்டல் நோன்பெடுத்தல்4 கோற்றொடியார்5 கோள் அழியும் ஆறு". (அறநெறிச்.94) எனவும் வரும். இந்நிகரன அல்லவை கடிதலாம்.பிறவும் அன்ன. (12)
(பாடம்) 1. யுவவாதாள். 2. தீர்ந்துறைதல். 3. சேர்தல். 4. நோன்பிடுதல். 5. நோற்றொடியாள்.
|