கற்பியல்

166தொல்லவை உரைத்தலும் நுகர்ச்சி ஏத்தலும்1
பல்லாற் றானும் ஊடலில் தகைத்தலும்2
உறுதி காட்டலும் அறிவுமெய்ந் நிறுத்தலும்
ஏதுவின் உரைத்தலும் துணியக்3 காட்டலும்
அணிநிலை உரைத்தலும்4 கூத்தர் மேன.

என்-எனின். கூத்தர்க்குரிய திறங் கூறுதல் நுதலிற்று.

தொல்லவை யுரைத்த லாவது - முன்புள்ளார் இவ்வாறு செய்வரெனக் கூறுதல்.

நுகர்ச்சி யேத்த லாவது - நுகர்ச்சி யிவ்வாறு இனிய தொன்றெனப் புகழ்தல்.

பல்லாற்றானும் ஊடலிற் றகைத்தலும் என்பது - பலநெறியானும் ஊடலினின்றுந் தலைமகளை மீட்டல்; அஃதாவது இவ்வாறு செய்தல் குற்றமென்றானும் அன்புடையார் செய்யாரென்றானும் மனைக்கிழத்தியர் செயலன்று என்றானும் இவ்வாறு கூறுதல்.

உறுதிகாட்ட லாவது - இவ்வூடல் தணிந்ததனாற் பயனிது வெனவும் நன்மை பயக்கும் எனவும் கூறுதல்.

அறிவு மெய்ந்நிறுத்தலாவது - தலைமகள் மெய்யின்கண் மிக்க துணிவினாற் கெட்டவறிவை இது தக்கதன்றென அறிவு கொளுத்துதல்.

ஏதுவினுரைத்தலும் என்பது - இவ்வாறு செய்யின் இவ்வாறு குற்றம் பயக்கும் என ஏதுவினாற் கூறுதல். அது பிறன் ஒருத்தி கெட்டபடி கூறுதல்.

துணியக்காட்டலாவது - அவள் துணியுமாறு காரணங் காட்டுதல்.

அணிநிலை யுரைத்தலாவது - இவ்வாறு உளதாகிய அணியைப் புலரவிடுகின்றதனாற் பயன் என்னையெனக் கூறுதல்.

இவை யெல்லாம் கூத்தர் மேலன என்றவாறு. அவர் எல்லா நெறியினாலும் புனைந்துரைக்க வல்ல ராதலான் அவர் மேலன என உரைத்தார். இவற்றிற்குச் செய்யுள் வந்தவழிக் கண்டுகொள்க. இந்நூல் வழக்குஞ் செய்யுளும்பற்றி நிகழ்தலின், இப்பொருண்மேல் வரும் வழக்குரை உதாரணமாம்.

(27)

(பாடம்) 1. ஏற்றலும்.

2. தணித்தலும்.

3. துணிவு.

4. அணிநிலை யுரைத்தலாவது முலையினும் தோளினும் முகத்திலும் எழுதுங்காற் புணர்ச்சிதோறும் அழித்தெழுதுமாறு இது எனக் கூறுதல். (தொல். பொருள். 16. நச்சி.)