கற்பியல்

168ஆற்றது பண்பும்1 கருமத்து வினையும்2
ஏவன் முடிபும் வினாவுஞ் செப்பும்
ஆற்றிடைக் கண்ட பொருளும் இறைச்சியுந்
தோற்றஞ் சான்ற அன்னவை பிறவும்
இளையோர்க் குரிய கிளவி யென்ப.

இஃது, இளையோர்க் குரிய கிளவியாமா றுணர்த்திற்று.

சூத்திரத்தாற் பொருள் விளங்கும்.

உதாரணம்

"விருந்தும் பெறுகுநள் போலுந் திருந்திழைத்
தடமென் பணைத்தோள் மடமொழி3 அரிவை
தளிரியற்4 கிள்ளை இனிதின் எடுத்த
வளராப் பிள்ளைத் தூவி அன்ன
வார்பெயல் வளர்த்த பைம்பயிர்ப் புறவிற்
பறைக்கண் அன்ன நிறைச்சுனை தோறும்
துளிபடு மொக்குள் துள்ளுவன5 சாலத்
தொளிபொரு பொகுட்டுத் தோன்றுவன மாய
வளிசினை6 உதிர்த்தலின் வெறிகொள்பு தாஅய்ச்
சிரற்சிற கேய்ப்ப அறற்கண் வரித்த
வண்டுண் நறுவீ துமித்த நேமி
தண்ணில மருங்கிற் போழ்ந்த வழியுள்
நிரைசெல் பாம்பின் விரைபுநீர் முடுகச்
செல்லு நெடுந்தகை தேரே
முல்லை மாலை நகர்புகல் ஆய்ந்தே"7

(அகம். 324)

என வரும். பிறவு மன்ன.
(29)

1. ஆற்றது பண்பும்-இளையோர் தண்ணிது வெய்து சேய்த்து அணித்து என்ற ஆற்றது நிலைமை கூறுதலும்; இறைச்சியும் ஆண்டு மாவும் புள்ளும் புணர்ந்து விளையாடுவனவற்றை அவ்விருவர்க்குமாயினும் தலைவற்கேயாயினும் காட்டியும் ஊறு செய்யும் கோள்மாக்களை அகற்றியும் கூறுவனவும். (தொல். பொருள். 170. நச்சி.)

(பாடம்) 2. விளைவும்.

3. மடமா.

4. தளரியற்.

5. எழுவன.

6. விரிசினை.

7. நகர்புக நயந்தே.