கற்பியல்

170பின்முறை ஆகிய1 பெரும்பொருள்2 வதுவைத்
தொன்முறை மனைவி எதிர்ப்பா டாயினும்
மின்னிழைப் புதல்வனை வாயில்கொண்டு புகினும்
இறந்த துணைய கிழவோன் ஆங்கட்3
கலங்கலு முரியன் என்மனார் புலவர்.

இது, தலைமகற் குரியதொரு மரபுணர்த்திற்று.

உதாரணம்

"இம்மை உலகத் திசையொடும் விளங்கி
மறுமை யுலகமும் மறுவின் றெய்துப
சேறுநரும் விழையுஞ் செயிர்தீர் காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்ம லோரெனப்
பல்லோர் கூறிய4 பழமொழி யெல்லாம்
வாயே யாகுதல்5 வாய்த்தனந் தோழி
நிரைதார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு
வதுவை அயர்தல் வேண்டிப் புதுவதின்
இயன்ற அணியன் இத்தெரு இறப்போன்
மாண்தேர் மாமணி கறங்கக் கடைகழிந்து
காண்டல் விருப்பமொடு தளர்புதளர் போடும்
பூங்கட் புதல்வனை நோக்கி நெடுந்தேர்
தாங்குமதி வலவ என்றிழிந்தனன் தாங்காது
மணிபுரை செவ்வாய்6 மார்பகம் சிவணப்
புல்லிப் பெரும செல்லினி அகத்தெனக்
கொடுப்போற் கொல்லான் கலுழலின் தடுத்த
மாநிதிக் கிழவனும் போன்மென மகனொடு
தானே புகுதந் தோனே யானது
படுத்தனென் ஆகுதல் நாணி இடித்திவன்
கலக்கினன் போலுமிக் கொடிய னெனச்சென்
றலைக்குங் கோலொடு குறுகித் தலைக்கொண்
டிமிழ்கண் முழவின்7 இன்சீ ரவர்மனைப்
பயிர்வன போலவந் திசைப்பவுந் தவிரான்
கழங்கா டாயத் தன்றுநம் அருளிய
பழங்கண் ணோட்டமும் நலிய
அழுங்கினன் அல்லனோ அயர்ந்ததன் மணனே8"

(அகம்.69)

என வரும்.
(31)

1. ஆக்கிய.

2. இளமைப் பருவம் கழியாத காலத்து அக்காதல் மீளாதாகலின், பெரும் பொருள் என்றார். (தொல். பொருள். 172. நச்சி.)

(பாடம்) 3. கிழவோன் இறந்தது நினைஇ ஆங்கண்.

(பாடம்) 4. கூறும்.

5. யாக.

6. மணி மருளவ்வாய்.

7. டிமிழ் கிரல்முரசின்.

8. அயர்ந்தனன் மனனே.