இது, தலைமகட் குரியதொரு கிளவி யுணர்த்திற்று. காமக்கிழத்திமாட்டுத் தாய்போற் கழறித் தழீஇக் கோடல் மனைக்கிழத்திக்கும் உரித்து கவவால்1 வருத்த முற்ற காலத் தென்றவாறு; அஃதாவது புலவாவழி என்றவாறு. இவ்வாறு கூறுவது தலைமகன் முதிர்ந்தவழி என்று கொள்க. உம்மை இறந்தது தழீஇயிற்று. உதாரணம் "வயல்வெள் ளாம்பல் சூடுதரு2 புதுப்பூக் கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில் ஓய்விடு3 நடைப்பக டாரும் ஊரன் தொடர்பு நீ வெஃகினை யாயின் என்சொற் கொள்ளல் மாதோ முள்ளெயிற் றோயே நீயே பெருநலத் தகையே அவனே நெடுநீர்ப் பொய்கை நடுநா ளெய்தித் தண்கமழ் புதுமலர் ஊதும் வண்டென மொழிப மகனென் னாரே." (நற்றிணை. 260) என்பது கொள்க. `கவவொடு மயங்கிய காலை' என்பதற்குச் செய்யுள் வந்தவழிக் காண்க.(32)
1. அவன் முயக்கத்தால் மயங்கிய காலத்து (தொல்.பொருள்.173. நச்சி. ) 2. சூடுதெரி. 3. ஓய்வுடை.
|