இதுவும் தலைமகட்குரிய கிளவி யுணர்த்திற்று. மேலதற்கொரு புறனடை: தலைமகனது சோர்வு காத்தல் தலைமகட்குக் கடனாதலால் தன் மகனுக்குத் தாயாகிய காமக்கிழத்தியுயர்புந் தன்னுயர்பாகும்; இருவருந் தலைமகன் பணித்த மொழிகோடல் இயல்பாகலான்; என்றவாறு. சோர்வாவது ஒழுக்கத்திற் சோர்வு. அது பரத்தையிற் பிரிவு. அதனை மறையாது காமக்கிழத்தி ஆற்றில் தலைமகற்குக் குறைபாடு வரும் என்பதனால். அவளை யுயர்த்தி யவ்வொழுக்கம் பிறர்க்குப் புலனாகாமை யேற்றுக் கோடல் வேண்டுமெனக் கூறுதலுந் தனக்கு இழிபு ஆகாது உயர்ச்சியாம் என்றாவாறு. இது மேலதற்குக் காரணங் கூறிற்று. (33)
|