கற்பியல்

175காமநிலை யுரைத்தலும் தேர்நிலை யுரைத்தலுங்1
கிழவோன் குறிப்பினை எடுத்துக் கூறலும்2
ஆவொடு பட்ட நிமித்தங் கூறலும்
செலவுறு கிளவியும் செலவழுங்கு கிளவியும்
அன்னவை பிறவும் பார்ப்பார்க் குரிய.

இது, பார்ப்பார்க் குரிய கிளவி யுணர்த்திற்று.

காமநிலை யுரைத்தலாவது - நீ பிரியின் இவள் காமமிகும் என்று கூறுதல்.

"அறனின்றி அயல்தூற்றும் அம்பலை" என்பதனுள்,

"உடையிவ ளுயிர்வாழாள் நீநீப்பின் எனப்பல
இடைகொண்டியாம் இரப்பவும் எமகொள்ளாய் ஆயினை
கடைஇய வாற்றிடை நீர்நீத்த வறுஞ்சுனை3
அடையொடு வாடிய அணிமலர் தகைப்பன"

(கலித். 3)

என வரும்.

தேர்நிலை யுரைத்தலாவது - ஆராய்ச்சி நிலையாற் கூறுதல்.

அது வருமாறு:-

"வேனி லுழந்த வறிதுயங் கோய்களிற்
வானீங்கு வைப்பின் வழங்காத்தேர் நீர்க்கவாஅம்
கானங் கடத்திர் எனக்கேட்பின் யானொன்
றுசாவுகோ ஐய சிறிது;
நீயே, செய்கினை மருங்கிற் செலவயர்ந் தியாழநின்
கைபுனை வல்வில் ஞாணுளர்4 தீயே
இவட்கே, செய்யுறு மண்டில மையாப் பதுபோல்5
மையில் வாள்முகம் பகப்பூ ரும்மே;
நீயே, வினைமாண் காழகம் வீங்கக் கட்டிப்
புனைமாண் மரீஇய6 அம்பு தெரிதியே
இவட்கே, சுனைமா ணீலங் காரெதிர் பவைபோல்
இனைநோக் குண்கண் நீர்நில் லாவே;
நீயே, புலம்பின்7 உள்ளமொடு பொருள்வயிற் செலீஇய8
வலம் படு திகிரி வாய்நீ வுதியே
இவட்கே அலங்கிதழ்க் கோடல் வீயுகு பவைபோல்
இலங்கே ரெல்வளை இறையூ ரும்மே;9
எனநின்
சென்னவை யரவத்து10 மினையவள் நீநீப்பின்
தன்னலங் கடை கொளப் படுதலின் மற்றிவள்
இன்னுயிர் தருதலும் ஆற்றுமோ
முன்னிய தேஎத்து முயன்றுசெய் பொருளே."

(கலித். 7)

கிழவோன் குறிப்பினை யெடுத்துக் கூறலும் என்பது - தலைவன் குறிப்பினைத் தலைவிக்கு விளங்கக் கூறலும் என்றவாறு.

ஆவொடு பட்ட நிமித்தங் கூறலும் என்பது - ஆவொடு பட்ட நிமித்தங் கூறுதலும் என்றவாறு `பட்ட நிமித்தம்' என்றதனால் எல்லா நிமித்தமுங் கொள்க.

செலவுறு கிளவி என்பது - செலவுற்ற சொல்லும் என்றவாறு. அஃதாவது தலைமகன் போயினான் என்று கூறுதல். இவற்றிற்கு இலக்கியம் வந்தவழிக் காண்க.

செலவழுங்கு கிளவி என்பது - செலவழுங்கல் வேண்டுமெனக் கூறுதல்.

உதாரணம்

"நடுவிகந் தொரீஇ நயனில்லான் வினைவாங்கக்
கொடிதோர்த்த மன்னவன் கோல்போல ஞாயிறு
கடுகுபு கதிர் மூட்டிக் காய்சினந் தெறுதலின்
உறலூறு கமழ்கடாஅத் தொல்கிய எழில்வேழம்
வறனுழு நாஞ்சில்போல் மருப்பூன்றி நிலஞ்சேர
விறன்மலை வெம்பிய போக்கறு வெஞ்சுரஞ்
சொல்லா திறப்பத் துணிந்தனிர்க் கொருபொருள்
சொல்லுவ துடையேன் கேண்மின் மற்றைஇய;
வீழுநர்க் கிறைச்சியாய் விரல்கவர் பிசைக்குங் கோல்
ஏழுந்தம் பயன்கெட இடைநின்ற நரம்பறூஉம்
யாழினும் நிலையிலாப் பொருளையும் நச்சுபவோ;
மரீஇத்தாங் கொண்டாரைக் கொண்டக்காற் போலாது
பிரியுங்காற் பிறரெள்ளப் பீடின்றிப் புறமாறும்
திருவினு நிலையிலாப் பொருளையும் நச்சுபவோ;
புரைதவப் பயனோக்கார் தம்மாக்கம் முயல்வாரை
வரைவின்றிச் செறும் பொழுதில் கண்ணோடா துயிர்வௌவும்
அரைசினும் நிலையிலாப் பொருளையும் நச்சுபவோ;
எனவாங்கு,
கச்சல் கூடாது பெரும இச்செல
வொழிதல் வேண்டுவல் சூழிற் பழியின்று
மன்னவன் புறந்தர வருவிருந் தோம்பித்
தன்னகர் விழையக் கூடின்11
இன்னுறழ் வியன்மார்ப அதுமனும் பொருளே".

(கலித் 8)

என வரும்.

இவை பார்ப்பார்க்குரிய தென்றவாறு. `ஓருபாற் கிளவியேனைப் பாற்கண்ணும்' (பொருளியல்-27) வரும் என்பதனால் தோழிமாட்டும் பாங்கன்மாட்டும் கொள்க.

(36)


1. தேர்நிலை என்றதனால் தேர்ந்து பின்னும் கலங்கினும் கலங்காமல் தெளிவுநிலை நாட்டலும் கொள்க. (தொல். பொருள். 176. நச்சி.)

(பாடம்) 2. எடுத்தனர் மொழிதலும்.

3. கடைய ஆற்றிடை நீரற்ற வறுஞ்சுனை.

4. ஞாணூர்.

5. மைபரப்பது போல்.

6. வரிய.

(பாடம்) 7. புலம்பியல்.

8. செலீஇயர்.

9. இறைவாரும்மே.

10. சொன்னவையாவது.

11. கூடல்.