இது, தலைவிக் குரியதொரு மரபுணர்த்திற்று. தலைவன் முன்னர்த் தன்னைப் புகழுங் கூற்று எவ்வழியானுங் கிழத்திக்கு இல்லை; முற்படக் கூறிய இரண்டிடமும் அல்லாதவழி யென்றவாறு. அவையாவன தலைவன் பரத்தையிற் பிரிந்து வந்தவழி இரத்தலுந் தெளித்தலும் என அகத்திணையியலுட் கூறிய இரண்டும். அவ்வழிப் புகழ்தலாவது; "ஒரூஉநீ எம்கூந்தல் கொள்ளல் யாம்நின்னை வெரூஉதுங் காணுங் கடை". (கலித். 87) என்றவழித் தன்னை உயர்த்துக் கூறுதலாற் புகழ்ந்தாளாம்: நின்னை வெருவாதார் பிறர் என்னும் உள்ளக் கருத்தினால்.2"நீயுறும் பொய்ச்சூள் அணங்காகின் மற்றினி யார்மேல் விளியுமோ கூறு". (கலித்.88) என்றவழியும் பெண்டிர் பலர் உளராயினும் அவர் எல்லார் மாட்டுஞ் செல்லாது தன்மேல் வருமெனக் குறித்தாளாதலின், தன்னைப் புகழ்ந்தாளாம், பிறவுமன்ன.(39)
1. முற்பட வகுத்த இரண்டலங் கடையே - முன்பு கூறுபடுத்தோதிய "தாய்போற் கழறித் தழீஇக் கோடலும் அவன் சோர்பு காத்தற்கு மகன் தாயுயர்பு தன் உயர்பு ஆதலும்" அல்லாத இடத்து. (தொல். பொருள். 180. நச்சி.) (பாடம்) 2. நீ கூறும் பொய்ச் சூள் அணங்காயின்.
|