இது பாங்கற் குரியதொரு மரபுணர்த்திற்று. இது களவிற்கும் கற்பிற்கும் பொது; ஒப்பக்கூறல் என்னும் உத்திவகையாற் கூறப்பட்டது. தலைவன் கூறியவழி எதிர்கூறுதல் பாங்கற்கு உரித்து என்றவாறு. எதிர் கூறுதலாவது மாறுபடக் கூறுதல். அவை களவுக் காலத்துக் கழறலுங் கற்புக்காலத்துப் பரத்தையிற் பிரிவிற்கு உடம்படாது கூறலும் இவை போல்வனவும். உதாரணம்"காமங் காமம் என்ப காமம் அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக் கடுத்தலும் தணித்தலும் இன்றே யானை குளகு மென்று ஆள்மதம்1 போலப் பாணியும் உடைத்தது காணுநர்ப் பெறினே". (குறிந். 136) என்றும்,"பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள் ஆயும் அறிவி னவர்". (குறள். 914) என்றும் வரும்.(41)
(பாடம்) 1. குளகு மெஃகுளம்.
|