கற்பியல்

182துன்புறு பொழுதினும் எல்லாங் கிழவன்
வன்புறுத் தல்லது சேறல் இல்லை1.

இது, தலைவற் குரியதொரு மரபுணர்த்திற்று.

துன்புறு பொழுதினும் எல்லாப் பிரிவினும் தலைவன் தலைவியை வற்புறுத்தியல்லது சேறலில்லையென்றவாறு.

துன்புறுபொழுதாவது களவுகாலம். களவினும் கற்பினும் பொது என்றவாறு.

(43)


1.வன்புறுத்தல்லது சேறல் இல்லை - தலையளி செய்து தெருட்டிப் பிரிய அவை பற்றுக் கோடாக ஆற்றுதலின், அவள் குணங்கள் வற்புறுத்துவன் ஆயின.
இனி, உலகத்தார் பிரிதலும் ஆற்றியிருத்தலும் உடைய ரென உலகியலாற் கூறலும் பிரிவுணர்த்திற்றேயாம். இனிப்பிரிவினை விளக்கங்கூறி 'ஆற்றியிரு' என்றலும் அவற்றை வற்புறுத்தலாம். (தொல். பொருள். 184. நச்சி)