உரையாமை யாவது உருவு வெளிப்பாடு. அதனை வினைநிகழு மிடத்து உரைக்கப் பெறார்; தலைமக்கள் தமது வினை முடிந்த காலத்து விளங்கித் தோன்று மென்றவாறு. எனவே, வினையிடத்துள் நினைப்பாராயினும் அமையும்; உரைக்கப் பெறார் என்பதூஉம், வென்றிக்காலத்துக் குற்றமறத் தோன்றும் என்பதூஉம் கொள்ளப்படும். உதாரணம்"தங்கிய ஒள்ளொளி யோலைய தாய்த்தட மாமதின்மேல் பொங்கிய வேந்தர் எரிமுகந் தோன்றின்று போதுகண்மேற் பைங்கயல் பாய்புனற் பாழிப்பற் றாரைப் பணித்ததென்னன் செங்கய லோடு சிலையுங் கிடந்த திருமுகமே". (பாண்டிக்கோவை) என வரும். (45)
1. உரையார் எனவே நினைத்தல் உளதென்பதூஉம். அது போர்த்திறம் புரியும் உள்ளத்தால் கதுமென மாயும் என்பதூஉங் கொள்க. (தொல். பொருள். 186. நச்சி.)
|