இதுவும், ஐயம் அறுத்தலை நுதலிற்று. (இ-ள்) முதல் எனப்படுவது மேல் எடுத்தோதப்பட்டவற்றில் முதல் என்று சொல்லப்படுவது, ஆ இருவகைத்து - நிலமும் காலமும் ஆகிய அவ்விருவகையை உடையது. எனவே, ஏனையவெல்லாம் உரிப்பொருள் என்றவாறாம். இதனாற் பெற்றது என்னை எனின், முதல் கரு உரிப்பொருள் என அதிகரித்து வைத்தார்; இனிக் கருப்பொருள் கூறுகின்றார்; உரிப்பொருள் யாண்டுக் கூறினார் என ஐயம் நிகழும்; அது 'விடுத்தல்' என்க. [சுட்டு நீண்டு நின்றது.] (19)
|