என்-எனின். தலைமகட் கின்றியமையாத மடன் அழியும் இடம் உணர்த்துதல் நுதலிற்று. தலைமகன் தனதொழுக்கந் தலைமகள் மாட்டுக் கரந்து உணர்த்தும் வழியும் தலைமகள் மாட்டுப் புணர்ச்சி வேட்கை தோன்றியவழியுமாகிய அத்தன்மைப்பட்ட விடங்களல்லாதவழி யெல்லாம் தலைமகள் மடனொடு நிற்றல் கடன் என்று சொல்லுவார் என்றவாறு. தன்வயிற் கரந்தவழி மடனழிய நின்றதற்குச் செய்யுள்:- "முத்தேர் முறுவலாய் நம்வலைப்1 பட்டதோர் புத்தியானை வந்தது ; காண்பான்2 யான் றங்கினேன்". என்றவழி, அதற்குடம்படாது."அவ்வியானை வனப்புடைத் தாகலுங் கேட்டேன்". (கலித். 97) என்றவழி, பொய்கூறினான் என்னுங் கருத்தினளாகிக் கூறுதலின் மடனழிதலாயிற்று. "கவவுக்கை நெகிழ்ந்தமை போற்றி மதவுநடைச் செவிலி கையென் புதல்வனை நோக்கி நல்லோர்க் கொத்தளிர் நீயிர் இஃதோ செல்வர்க் கொத்தனம் யாமென மெல்லவென் மகன்வயிற் பெயர்தந் தேனே3." (அகம். 26) என்றவழி வேட்கை தணிதலாகாதாள் அது தணியுந்துணையு முயங்காது, கவவுக்கை நெகிழ்ந்ததெனப் பெயர்தல் மடனழிதலாயிற்று.(10)
1. மலை. 2. காணயான். (பாடம்) 3. பெயர் தந்தெனனே.
|