என் - எனின். இது செவிலிக்குரியதோர் மரபுணர்த்திற்று. காமம் மிக்கவழி யல்லது சொல்நிகழ்ச்சி யின்மையின் தலைமகள் தான் கருதிய பொருண்மேல் வேட்கையைத் தலைமகள் தன்னானே யறிவர் என்றவாறு.பன்மையாற் கூறினமையால் அவ்வுணர்ச்சி செவிலிக்கும், நற்றாய்க்கும் ஒக்கும் என்றவாறு. இதனாற் சொல்லிய அறத்தொடு நிற்பதன் முன்னம் செவிலி குறிப்பினான் உணரும் எனக் கொள்க. "அன்னாய் வாழிவேண் டன்னை நின்மகள் பாலும் உண்ணாள் பழங்கண் கொண்டு நனிபசந் தனளென வினவுதி". (அகம். 48) என்றவழிச் செவிலி குறிப்பினான் உணர்ந்தவாறு காண்க. வேட்கை தோற்றத் தலைமகனில்லாத வழித் தோழிகூற்று நிகழும். அது "காமர் கடும்புனல்" (கலித். 39) என்னும் பாட்டினுள் காண்க.(13)
|