பொருளியல்

206செறிவும் நிறைவும் செம்மையுஞ் செப்பும்
அறிவும் அருமையும் பெண்பா லான.

என் - எனின். இது பெண்டிர்க் குரியதோர் இயல்புணர்த்திற்று.

செறிவு என்பது - அடக்கம்
நிறைவு என்பது - அமைதி
செம்மை என்பது - மனங்கோடாமை
செப்பு என்பது - சொல்லுதல்.

அறிவு என்பது - நன்மை பயப்பனவுந் தீமை பயப்பனவும் அறிதல்.

அருமை என்பது - உள்ளக் கருத்தறிதலருமை. இவை எல்லாம் பெண்பக்கத்தின என்றவாறு.

இதனாற் சொல்லியது மேற்சொல்லிய அறத்தொடுநிலைவகை. இனிக் கூறுகின்ற வரைவுகடாதற்குப் பகுதியும் உண்மை வகையானும் புனைந்துரைவகையானும் கூறுங்கால் இவை பேதையராகிய பெண்டிர்க்கு இயையுமோ என ஐயுற்றார்க்குக் கூறப்பட்டது.

(14)